இயல் 3: காரணவினைத் தன்மை

இயல்-3

காரண வினைத் தன்மை

          முதல் இரண்டு இயல்களில் தமிழில் இயக்கு வினைகள் அவற்றின் இயங்கு வினைகளுடன் பொருண்மை நிலையில் காரண வினை உறவு கொண்டவை அல்ல என்பது தக்க சான்றுகளுடன் விளக்கப்பட்டது. இயக்கு வினைகளுடன் இயங்கு வினையின் எதிர்மறை வடிவங்களைக் கொண்டு ஆக்கப்படும் தொடர்கள் வழுவற்ற தொடர்களாக அமைந்தது கொண்டு அவற்றில் காரணப் பொருளுறவு அமையவில்லை என்பது புலப்படுத்தப்பட்டது. இதன்வழி, காரணப் பொருள் என்பது இயங்கு வினை-இயக்கு வினைகளின் பொருளாக அமையவில்லை எனலாம்.

          முதல் இயலில் வினைகளில் மூன்றாவது பிரிவு இருப்பது குறித்துத் தெரிவிக்கப்பட்டது. அவை, சொல்லியல் நிலையில் காரண வினைகளாகும். இந்த இயலில் இவ்வாறான சொல்லியல் நிலையில் அமைந்த காரண வினைகளைப் பற்றியும் செய், வை போன்ற துணை வினைகளைக் கொண்டு தொடரியல் நிலையில் உருவாகும் காரண வினைகளைப் பற்றியும் விளக்கப்படும். ஆங்கிலத்தில் 'Cause' என்னும் வினைச்சொல் வெளிப்படையாக வந்து காரணப் பொருளை உணர்த்துவது போன்று தமிழில் அதற்கு இணையான வினைவடிவம் இல்லை என்பது கருதத்தகுந்தது.

சொல்லியல் நிலையில் அமைந்த காரண வினைகள்

          தமிழில் சொல்லியல் நிலையில் அமைந்த காரண வினைகள் -வி-/-(ப்)பி-1 என்னும் ஒட்டினைப் பெற்று வரும் என்று முதல் இயலில் விளக்கப்பட்டது.

          3.1 (அ) அம்மாவை வருவி

                (ஆ) சோதிடரை அழைப்பியுங்கள்

என்னும் தொடர்கள் இந்த அமைப்பிற்குச் சான்றுகளாகும்.

தமிழில் எல்லா வினைகளுடனும் இந்த ஒட்டுகள் இணைந்து காரண வினை உருவாகும் எனினும் இவற்றின் ஆக்கத்தை முறையாக விளக்கமுடியாத காரணத்தால்(Aronoff,1976) இவை தனியாக அகராதிகளில் குறிப்பிடப்படுகின்றன. பேச்சுத் தமிழ் அடிப்படையில் இவற்றை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். (i) முதல் வகை: பேச்சில் இயல்பாக இடம்பெறாத காரண வினைத் தொடர்கள் (ii) இரண்டாம் வகை: பேச்சில் இயல்பாக இடம்பெறும் காரண வினைத் தொடர்கள்

முதல்வகைக் காரண வினைகள்

          காரண வினைகளின் பொருண்மை விளக்கத்தை முதலில் புரிந்துகொண்டால்தான் இவற்றில் காணப்படும் சிக்கல்களை விளங்கிக்கொள்ள முடியும். அதற்கு, முன்னைய இலக்கணிகள், காரண வினைகள் பற்றிக் கொண்டிருந்த பார்வையை அறிந்து கொள்வது துணைபுரியும். இலக்கண நூலான நன்னூல் இக்காரண வினைகளை ஏவல்2 என்று குறிப்பிட்டுள்ளது. இயல்பான ஏவல் வடிவங்களையும் அது ஏவல் என்றே குறித்துள்ளது. உரையாசிரியர் ஒருவர் (Govindaraja Mudaliar,1970 நூலில் அந்த உரையாசிரியர் சங்கரநமச்சிவாயர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்) காரண வினை மூன்று கருத்தாக்களை/வினைமுதல்களை உடையதாக இருக்கும் என்று விளக்கியுள்ளார். அவற்றுள் இரண்டு வினைமுதல்கள் ஏவல் தொழிலைச் செய்வனவாகவும் ஒரு வினைமுதல், சுட்டப்படும் தொழிலைச் செய்வதாகவும் அமையும் என்று விளக்குகிறார்.

          3.2 சாத்தன் கொற்றனால் பொன்னனை ஆடுவித்தான்3

என்னும் தொடர் சாத்தன் கொற்றனை ஏவக் கொற்றன் பொன்னனை ஏவப் பொன்னன் ஆடினான் என்னும் பொருளில் அமைந்துள்ளது. இத்தொடரின் வழியாக உரையாசிரியர் ஆணை வழிக் காரண வினை(Directive Causative) பற்றி விளக்கியுள்ளார். இதில் ஒரு வினைமுதல் மற்றொரு வினைமுதலுக்கு ஆணையைப் பிறப்பித்து அதன் காரணமாகத் தொழில்  நிகழ்வதாகக் குறிப்பிடப்படுகிறது(Sibatani,1976b).

          உரையாசிரியர் ஆணைவழிக் காரண வினை மற்றும் மூன்று வினைமுதல்களின் ஈடுபாடு என்று சுட்டுவது பொதுமை நிலையில் எல்லா அமைப்பிற்கும் பொருந்தவில்லை. மேற்கண்ட தொடரில்(3.2) மூன்றாம் வேற்றுமைப் பெயர்த் தொடரை நீக்கிவிட்டால்,

          3.3 சாத்தன் பொன்னனை ஆடுவித்தான்

என்னும் தொடர் கிடைக்கும். இதில் சாத்தன் வினைக்குக் காரணமான வினைமுதலாகவும் பொன்னன் வினையைச் செய்த வினைமுதலாகவும் தொடர் அமைந்துள்ளது. இங்கு, இடையில் வேறொரு வினைமுதல் இடம்பெறவேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. எனவே, மூன்று வினைமுதல் தேவை என்னும் கருத்துப் பொருந்தவில்லை. கீழ்க்காணும் தொடரையும் நோக்குக.

          3.4 (அ) அம்ம4 கேட்பிக்கும்5(தொல்.சொல்.276)6

               (ஆ) அந்தச் செய்தி எங்களை மகிழ்வித்தது

என்னும் தொடர்களில் ஆணைவழிக் காரண வினைச் சூழல் இடம்பெறவில்லை; மூன்று வினைமுதல்களும் இடம்பெறவில்லை. மேலும்,

          3.5 சோழன் தஞ்சாவூர்க் கோவிலைக் கட்டுவித்தான்

என்னும் தொடரில் சோழ மன்னன் கோவிலைக் கட்டுவதற்கு ஆணை பிறப்பித்ததன் அடிப்படையில் கோவில் கட்டப்பட்டது என்னும் பொருளுடன் சோழன் ஆணை ஒன்றும் பிறப்பிக்காமல் தனது விருப்பத்தை மட்டும் தெரிவித்த நிலையில் அருகிலிருந்த புத்திக்கூர்மை உடைய அமைச்சர் ஒருவர் அதற்கான பணிகளைச் செய்து கோவில் உருவாகியிருக்கலாம் என்னும் பொருளிலும் இதனைக் காணலாம். மன்னன் ஆணை பிறப்பித்த நிலையில் கோவில் கட்டப்பட்டது என்னும் பொருளில் இத்தொடர் அமைந்திருப்பதுடன் தன் விருப்பத்தை மட்டும் தெரிவித்த நிலையிலும் கோவில் கட்டப்பட்டது என்னும் பொருளிலும் இத்தொடர் அமையலாம். இத்தொடரில் மன்னன் குறிப்பாக என்ன செய்தான் என்னும் தகவல் கிடைக்கவில்லை என்பதே இங்கு நோக்கத்தகுந்தது.

          மேற்கண்ட தொடர்களின் வழியாக ஒரு வினைமுதல் ஏவலைச் செய்ய அதனை இன்னொரு வினைமுதல் ஏற்று நடக்கிறது என்னும் விளக்கம் முதல் வகைக் காரண வினைகளின்  விளக்கத்திற்குப் பொருந்துமாறில்லை. எனவே, சொல்லியல் நிலையில் அமைந்த இந்த வகையான காரண வினைகளை நேரடிக் காரண வினைகள்/மறைமுகக் காரண வினைகள்(Direct/Indirect Causative) என்று விளக்கமுடியுமா என்று காணலாம்.

          பின்வரும் கருத்துகளை நோக்குக. முதல் வகைக் காரண வினைகளில் வினைக்குக் காரணமாக இருக்கும் வினைமுதல் தானாக அந்த வினையை மற்றொரு வினைமுதலின்மீது நிகழ்த்தாது(Shibatani,1976b). தானாக வினையை நிகழ்த்துதல் என்பது, வினை நிகழ்விற்குக் காரணமாக இருக்கும் வினைமுதல் தானே அந்த வினையைக் காரண வினைக்கு ஆளாகும் வினைமுதலின் மீது நிகழ்த்தும். இவ்வாறு முதல் வகைக் காரண வினைகள் தமிழில் அமைவதில்லை. கீழ்க்காணும் தொடரை நோக்குக.

          3.6 பிராமணர்கள் அம்பட்டனை ஸ்நானம்பண்ணுவித்தார்கள்

மேற்கண்ட தொடர் பிராமணர்கள் தாமாகக் குடமும் தண்ணீரும் எடுத்து அம்பட்டனைக் குளிப்பாட்டினார்கள் என்னும் பொருளைத் தரவில்லை. மாறாக, பிராமணர்கள் அம்பட்டனைக் குளிக்குமாறு செய்தார்கள்(அம்பட்டனே தன்மீது நீரூற்றிக் குளித்தல்) என்னும் பொருளிலேயே அமைந்துள்ளது. அதே போன்று,

          3.7 சம்பந்தம் பென்சிலை ஒடிவித்தான்

என்னும் தொடர் சம்பந்தம் தானாக அந்தப் பென்சிலை ஒடித்தான் என்னும் பொருளைத் தரவில்லை. மாறாக, சம்பந்தம் வேறொருவரின் முயற்சியால் பென்சில் உடைவதற்குக் காரணமாக அமைந்தான் என்னும் பொருளைத் தருகிறது.

          மேலும், இந்த முதல்வகைக் காரண வினைகள் இடையில் மற்றொரு வினைமுதலையும் பெற்று வருகின்றன. (குறிப்பு எண்3'இல் குறிப்பிட்டுள்ளபடி இடையில் மூன்றாம் வேற்றுமையில் வரும் வினைமுதல் பொருள் மயக்கத்தைத் தரும் வகையில் தொடரில் அமைகின்றது என்பது நினைவுகூரத் தக்கது). பொருட்டு என்னும் பொருளில் வரும் பெயர்த்தொடரைக் காரண வினை அமைப்பின் புறநிலையில் வைத்து ஆராயலாம். இந்தப் பொருள் மயக்கம் இந்த வகையில் அமைந்த எல்லாத் தொடர்களுக்கும் பொதுவானது என்பதால், கீழ்க்காணும் தொடர்களில் (அ)'விற்கு மட்டும் இந்த வேறுபாடு காட்டப்பட்டுள்ளது.

          3.8 (அ) நான் அவனால் இந்த வேலையை முடிப்பித்தேன்7

                              (i) நான் அவனைக்கொண்டு இந்த வேலையை முடித்தேன்

                               (ii) அவன் பொருட்டு இந்த வேலையை முடிக்கச் செய்தேன்

                (ஆ) அவன் பிராமணர்களால் சடங்குகளை நடப்பித்தான்

                (இ) அரசு மணியால் கொடிக்கம்பம் நட்டுவித்தான்

                (ஈ) கந்தன் அர்ச்சகரால் பூசை செய்வித்தான்

                (உ) மோகினி தாதியரால் ஒரு மஞ்சம் போடுவித்தாள்

                (ஊ) நீ காலாட்களால் சிம்மாசனத்தை எடுப்பி

          மூன்றாம் வேற்றுமை ஏற்ற பெயர்த்தொடர் புறநிலையில் இடம்பெறவில்லை எனினும் இயங்கு வினை அல்லாத வினைகளில் இப்பெயர்த்தொடர் புதைநிலையில் அமைந்திருப்பதாகவே கொள்ளப்படும். கீழ்க்காணும் தொடரை நோக்குக.

          3.9 அரசன் காளிக்குத் திருவிழா நடப்பித்தான்

மேற்கண்ட தொடரில் அரசன் அந்தத் திருவிழாவைத் தானாக அதற்கான பணிகளைச் செய்து நடத்தினான் என்னும் பொருள் அமையவில்லை. மாறாக, இடையில் மற்றொரு வினைமுதல் மூலமாகத் திருவிழா நடைபெறச் செய்தான் என்னும் பொருளே கிடைக்கிறது.

          மூன்றாவதாக, முதல்வகைக் காரண வினைகளில் காரணமாக அமையும் வினைமுதல் அந்த வினையைத் தானாகச் செய்யாது என்பதையும் தாண்டி வினை நிகழும் நேரத்திலும் இடத்திலும் அவ்வினைமுதல் இருக்கவேண்டிய தேவையும் இல்லை. அதாவது, காரண வினைமுதல் அந்த வினையில் ஈடுபடும் செயல்நிகழ் வினைமுதலைப் போன்று அந்த இடத்தில் இருக்கவேண்டிய தேவை இல்லை. கீழ்க்காணும் வழுத் தொடர்களை நோக்குக.

          3.10 (அ) *காதர் பாத்திமாவைத் தன்னோடு வீட்டுக்கு வருவித்தான்

                  (ஆ) *சுந்தர் குட்டியைத் தன்னோடு நடப்பித்தான்

                  (இ) *உமா மீனாவைத் தன்னோடு வேலை செய்வித்தாள்

மேற்கண்ட தொடர்கள், தொழில் நிகழும்போது காரண வினைமுதல் அந்த இடத்தில் இருத்தல் காரணமாக வழுத்தொடர்களாக அமைந்துள்ளன. மேலும், வேறுவகையில் குறிப்பிடுதல் முறையில் இந்த முதல்வகைக் காரண வினைத் தொடரும் மறைமுகக் காரணப் பொருளில் வரும் துணை வினை அமைப்பிலான தொடரும் பொருளில் ஒன்றாக உள்ளன.  கீழ்க்காணும் தொடர்களை நோக்குக.

          3.11 (அ) சம்பந்தர் ஊமைப்பெண்ணைப் பேசுவித்தார்

                  (ஆ) சம்பந்தர் ஊமைப்பெண்ணைப் பேசச் செய்தார்

          3.12 (அ) சுசீலா விருந்தாளியை உணவு அருந்துவித்தாள்

                  (ஆ) சுசீலா விருந்தாளியை உணவு அருந்தச் செய்தாள்

          3.13 (அ) மருத்துவர் நோயாளியைப் பிழைப்பித்தார்

                  (ஆ) மருத்துவர் நோயாளியைப் பிழைக்கச் செய்தார்

          மேற்கண்ட தொடர்களில் உள்ள இரண்டு அமைப்புகளும் பொருளில் ஒன்றாகவே உள்ளன. தமிழில் உள்ள செய் என்னும் துணைவினை ஆங்கிலத்தில் காணப்படும் 'make' என்னும் சொல்லில் காணப்படும் கட்டாயப்படுத்துதல் பொருளைக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

          மேற்கண்ட சான்றுகள் முதல்வகைக் காரண வினைகள் மறைமுகக் காரணவினைகளாக உள்ளன என்பதை வலியுறுத்துகின்றன. துணை வினையைக் கொண்டு உருவாக்கப்படும் தொடரும் ஒட்டுகளைக் கொண்டு உருவாக்கப்படும் தொடரும் ஒரே பொருளைத் தருவது என்பது வரலாற்று மாற்றத்தைக் காட்டுவதாகத் தோன்றுகிறது. தமிழில் எதிர்மறைத் தொடர்களும் காரண வினைத் தொடர்களும் காலப்போக்கில் மாற்றத்தை அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் இந்த இரு வடிவங்களும் ஒரே பொருளில் அமைந்துள்ளன. அதாவது, இவை இரண்டும் மறைமுகக் காரண வினைகளாகச் செயற்படுகின்றன.

இரண்டாம் வகைக் காரண வினைகள்

தமிழில் ஒட்டுகளைக் கொண்டு உருவாக்கப்படும் வேறொரு வகையான காரணவினைகளும் உள்ளன. இவை நேரடிக் காரண வினைகளாக அமைகின்றன. இதில் வினையின் நிகழ்விற்குக் காரணமாக அமையும் காரண வினைமுதல் காலம், இடம் ஆகிய இரண்டு நிலைகளிலும் அந்த வினை நிகழும்போது கட்டாயம் நேரடியாக இடம்பெறும் வினைமுதலாக இருக்கும். கீழ்க்காணும் தொடர்களை நோக்குக.

          3.14 (அ) அவன் எனக்கு இந்த விசயத்தைத் தெரிவித்தான்

                  (ஆ) போதகர் வசூலான தொகையைச் சபைக்கு அறிவித்தார்

                  (இ) டாக்டருக்கு உன் காதைக் காண்பி

                  (ஈ) அவன் மந்திரிக்கு மாலை அணிவித்தான்

3.14() முதல் 3.14(ஈ) வரையுள்ள மேற்கண்ட தொடர்களில் உள்ள காரண வினைகள் நேரடிக் காரணவினைகளாக உள்ளன. இதிலுள்ள தெரிவி, அறிவி போன்ற வினைகள் நிகழும்போது அவற்றின் காரண வினைமுதல் இடத்தாலும் காலத்தாலும் அங்கு நிச்சயம் இருக்கவேண்டும் என்பதை இன்னும் மேற்கொண்டு விளக்கவேண்டியதில்லை. இவை முன்னர்க் கண்ட முதலாம் வகைக் காரண வினைகளிலிருந்து வேறுபட்டவை என்பதை மட்டும் இங்குக் குறிப்பிடவேண்டும். மேலும் இவை, இடையில் மற்றொரு வினைமுதலை ஏற்பதில்லை என்பதைக் கீழ்க்காணும் தொடர்களின்வழி அறியலாம்.

          3.15 (அ) *நான் அவனால் உனக்கு/உன்னை இந்த விசயத்தைத் தெரிவித்தேன்8

                  (ஆ) *அவன் உன்னால் எனக்கு/என்னை உலகத்தை அறிவித்தான்

                  (இ) *ராமன் லக்ஷ்மணனால் சீதைக்கு/சீதையை மானைக் காண்பித்தான்

                  (ஈ) *நாங்கள் உன்னால் அவளுக்கு/அவளை மாலை அணிவித்தோம்

இந்த வினைகள் இடையில் வேறொரு வினைமுதலைப் பெற்றுவாரா என்பதோடு இவை மறைமுகக் காரண வினைகளாகவும் அமைவதில்லை. இவை பொருண்மை நிலையில் காரண வினைகளாக உள்ளனவா இல்லையா என்பது ஒரு கேள்வியாகும். இவை காரண வினைகளாகத் தோன்றவில்லை எனினும் (இவ்வகை வினைகளுள் ஒன்று நிச்சயமாகக் காரணவினையாக அமையவில்லை) பொருண்மை நிலையில் காரண வினைகளாகவே அமைகின்றன. காண்பி என்னும் வினையைத் தவிர்த்துத் தெரிவி, அணிவி போன்ற வினைகள் பொருண்மை நிலையில் காரண வினைகளாகவே அமைகின்றன. இவை உட்பொதி தொடர் உறவு மூலமும் சில வினையடைகளை ஏற்பதன் மூலமும் இதனை நிறுவலாம்.

          காண்பி என்பது சொல்நிலையில் காரண வினையாக அமைந்தாலும் தற்போதைய தமிழில் காட்டு என்னும் இயக்கு வினையின் பொருளிலேயே வருகிறது.  இவை ஆக்கப் பெயர்கள் அல்லாத வேறு இடங்களில் எல்லாம் ஒன்றுக்குப் பதில் மற்றொன்றைப் பதிலீடு செய்யும் வகையில் உள்ளன. காண்பி, காட்டு ஆகிய இரண்டும் ஒன்றற்கொன்று மாற்றிக்கொள்ளத் தக்க உறவில் உள்ளவை என்பதைக் கீழ்க்காணும் தொடரின் வழி அறியலாம்.

           3.16 நான் உனக்கு ஊரைச் சுற்றிக் காண்பித்தேன்/காட்டினேன்

ஆனால், வினையிலிருந்து உருவாகும் ஆக்கப் பெயர்களில் காட்டு என்பது மட்டுமே பயன்படுகிறது.

          3.17 (அ) அவள் ஒரு பல்லுக் காட்டி

இதில் காண்பி வடிவம் பயன்படுவதில்லை.

          3.17 (ஆ) *அவள் ஒரு பல்லுக் காண்பியி

ஆனால், வினையாலணையும் பெயர்களில் இரண்டு வடிவங்களும் பயன்படுகின்றன.

          3.18 () அவள் பல்லைக் காட்டுகிறவள்

                  (ஆ) அவள் பல்லைக் காண்பிக்கிறவள்

          காண்பி என்னும் வினை இடம்பெற்றுள்ள தொடரில் காணுதல் தொழிலை உணர்த்தும் தொடர் உட்பொதிந்து இருப்பதில்லை. எனவே, காண்பி வினை அமைந்த தொடருடன் இணைத்து அதன் எதிர்மறையை உணர்த்தும் தொடரையும் உருவாக்கமுடிகிறது.

          3.19 அவள் அதைக் காண்பித்தாலும் நான் காணமாட்டேன்/பார்க்கமாட்டேன்

எனவே, காண்பி என்பது சொல்லமைப்பு நிலையில் காரண வினையாக இருந்தாலும் பொருண்மை நிலையில் காரண வினையாக அமையாமல் இயக்கு வினையாகவே செயற்படுகிறது.

          காண்பி வினையைத் தவிர்த்து இந்தப் பிரிவில் அடங்கும் ஏனைய வினைகள் யாவும் பொருண்மை நிலையிலும் காரண வினைகளாகவே அமைகின்றன என்பதை உட்பொதி தொடர் உறவு மூலமும் சில வினையடைகளை ஏற்பதன் மூலமும் நிறுவலாம். காரண வினையால் உருவாக்கப்படும் ஒரு தொடரின் உள்ளே உட்பொதி தொடராக அந்த வினையின் பகுதிப் பொருளால் அமைந்த தொடர் உள்ளடங்கியிருக்கும்.  

          3.20 (அ) நான் என் தம்பியைப் படிப்பித்தேன்

என்ற தொடரில்

                  (ஆ) என் தம்பி படித்தான்

என்னும் உட்பொதி தொடர் இடம்பெற்றுள்ளது. எனவே, இதுபோன்ற தொடர்களுடன் இவற்றின் எதிர்மறைத் தொடரை இணைக்கும்போது அத்தொடர்கள் வழுத் தொடர்களாக அமைகின்றன.

          3.21 (அ) *நான் அதைத் தெரிவித்தாலும் உனக்குத் தெரியாது

                  (ஆ) *முதல்வர் அதை அறிவித்தாலும் மாணவர்கள் அறியமாட்டார்கள்

                  (இ) *அவன் மாலை அணிவித்தாலும் அதை அணியமாட்டாள்

இந்தத் தொடர்கள் வழுத்தொடர்களாக அமைவதிலிருந்து இவை உட்பொதி தொடரை உள்ளடக்கியவை என்பதும் காரண வினைகள் என்பதும் உறுதியாகின்றன. இவற்றுடன் வினையடைகள் சேர்க்கப்படும்போது தோன்றும் பொருள் மயக்கம் இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. கீழ்க்காணும் தொடரில் இடம்பெறும் ஐயமற என்னும் வினையடை காரண வினைமுதலுக்கும்(Causer) செயல்நிகழ்(Causee) வினைமுதலுக்கும் பொருந்துமாறு உள்ளது.

          3.22 (அ) அவள் எனக்கு ஐயமறத் தெரிவித்தாள்

                  (ஆ) ஆசிரியர் மாணவருக்கு விசயத்தை ஐயமற அறிவித்தார்

இதேபோன்று கீழ்க்காணும் தொடரில் வரும் முகம் மலர என்னும் வினையடையும் காரண வினைமுதலுக்கும் செயல்நிகழ் வினைமுதலுக்கும் பொருந்துமாறு உள்ளது.

          3.23 (அ) அவன் அவளுக்கு முகம் மலர வைரமாலை அணிவித்தான்

இந்தச் சான்றுகள் இவ்வினைகள் காரண வினைகள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

          இந்த வினைகளுடன் துணைவினைகளை இணைத்து ஆக்கப்படும் தொடர்கள் மறைமுகக் காரணவினைத் தொடர்களாக அமைகின்றன. கீழ்க்காணும் தொடர்களை நோக்குக.

          3.24 (அ) நான் உன்னை இந்தப் பாடத்தைத் தெரிய வைக்கிறேன்

                  (ஆ) அவன் என்னை உலகத்தை அறிய வைத்தான்

                  (இ) ராமன் சீதையை அவள் குணத்தைக் காண வைத்தான்

                  (ஈ) நீ அவளை மாலையை அணிய வைத்தாய்

இதுவரை கண்டவற்றிலிருந்து சொல்லமைப்பு நிலையில் அமையும் காரண வினைகளைப் பற்றிப் பின்வரும் கருத்துகள் அறிய வருகின்றன.

          இவை முதல்வகைக் காரண வினைகள், இரண்டாம் வகைக் காரண வினைகள் என்று பகுக்கக்கூடியனவாய் உள்ளன. முதல்வகைக் காரண வினைகளும் அவற்றுடன் தொடர்புடைய துணைவினைகளைக் கொண்டு ஆக்கப்படும் காரண வினைகளும் மறைமுகக் காரண வினைகளாக உள்ளன. இரண்டாம் வகைக் காரண வினைகள் நேரடிக் காரண வினைகளாகவும் அவற்றுடன் துணைவினைகளை இணைத்து ஆக்கமுறும் தொடர்கள் மறைமுகக்  காரண வினைகளாகவும் அமைகின்றன.

          கோட்பாட்டு நிலையில் அமையும் இந்த விளக்கத்திலிருந்து(Shibatani, 1976b மற்றும் McCawley, 1977) இரண்டு கேள்விகள் எழுகின்றன. (i) சொல்நிலையில் அமையும் முதல்வகைக் காரண வினைகளும் துணைவினைகளைக் கொண்டு ஆக்கமுறும் காரண வினைத் தொடர்களும் ஒரே பொருளை (மறைமுகக் காரணவினையை) எவ்வாறு குறிக்கின்றன? (ii) சொல்நிலையில் அமையும் முதல்வகைக் காரணவினைகளும் இரண்டாம் வகைக் காரண வினைகளும் முறையே மறைமுகக் காரணத்தையும் நேரடிக் காரணத்தையும் எவ்வாறு குறிக்கின்றன?

          முதல் கேள்விக்கான விடையாக முன்பே குறிப்பிட்டது போன்று வரலாற்று நிலையிலான மொழி மாற்றம் காரணமாக அமைகிறது. இரண்டாம் இயலில் விளக்கப்பட்டது போன்று இயக்கு வினைகள் பொருண்மை நிலையில் காரண வினைகளாக இல்லையெனினும் இந்த முதல் வகைக் காரண வினைகள் ஜப்பான் மொழியைப் போன்று மறைமுகக் காரண வினைகளாக அமைகின்றன.

          முதல் வகைக் காரண வினைக்கும் இரண்டாம் வகைக் காரண வினைக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு பற்றிய இரண்டாவது கேள்வியைப் பொறுத்தவரை, அதற்கு வரலாற்றுக் காரணமும் அமைப்பியல் காரணமும் என இரண்டு காரணங்களை முன்வைக்கலாம். கந்தையா(1967:124) இந்த இரண்டு காரணங்களையும் முன்வைக்கிறார். 'இந்த ஒட்டுகள்(-வி-/-(ப்)பி) தொடக்கத்தில் தன்னுணர்வுடன் செய்தல் என்னும் பொருளை விளக்காமல் வேறொரு பொருளை விளக்கியிருக்கலாம்(அது காரணப் பொருள் என்று கொள்ளலாம்). ஆனால், மொழி வரலாற்றின் ஒரு காலக்கட்டத்தில் தன்னுணர்வுடன் செய்தல் என்னும் பிரிவில் அடங்காத வினைகளை அப்பிரிவில் சேர்ப்பதற்கு இந்த ஒட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்'. முதல் இயலில் குறிப்பிடப்பட்டது போன்று கந்தையா தன்னுணர்வுடன் செய்தல் என்னும் வினைகளைச் செயப்படுபொருள் குன்றா வினைகளாகக் கருதுகிறார். அவர் கருத்துப்படி இந்த வினைகள் அல்-காரண வினைகளாகும். இதன் வேறுவிதமான விளக்கம் பின்வருமாறு: இந்த ஒட்டுகள் தொடக்கத்தில் காரண வினைகளாக இருந்தன. சில வரலாற்றுக் காரணங்களால் சில வினைகள் அல்-காரண வினைகளாக(தன்னுணர்வுடன் செய்தல் பிரிவு) மாற்றமடைந்தன. இந்த மாற்றம் அகராதியில் சில வினைகளால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்புவதற்காக இருக்கலாம் என்பது கந்தையாவின் கருத்தாகும். அவர் பின்வரும் சான்றினைக் காட்டுகிறார்.

          3.25 முருகன் ராமனுக்கு நடந்ததை அறிவித்தான்

இதில் முன்னர்க் காட்டிய முதல்வகைக் காரண வினைக்கும் இரண்டாம் வகைக் காரண வினைக்குமான வேறுபாட்டையே அவர் விளக்க முற்படுகிறார். முன்னரே குறிப்பிடப்பட்டது போன்று அறிவி போன்ற வினைகள் நேரடிக் காரண வினைகள் என்னும் பகுப்பில் ஆராயத்தக்கன. வரலாற்று நோக்கில் இந்த ஒட்டுகளில் அவற்றின் பகிர்வு அடிப்படையில் சிக்கல் உள்ளதே தவிர அவற்றின் பொருண்மையில்(காண்பி என்னும் வினையைத் தவிர்த்து) எந்தச் சிக்கலும் இல்லை என்பது இவ்வாசிரியரின் கருத்தாகும்.

          தமிழில் சொல்லியல் நிலையில் அமையும் காரண வினைகளின் வரலாறு குறிப்பிடத்தக்கது. பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி கூறுவதற்கு மாறாக இவ்வடிவங்கள் பழங்கால இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. தொல்காப்பியத்தில் இவ்வினை இடம்பெறுவது 3.4(அ)வில் குறிப்பிடப்பட்டது. முற்சங்க இலக்கியங்களில் மூன்று இடங்களில் இவ்வகை வினைகள் இடம்பெற்றுள்ளன(அகநானூறு-1; பதிற்றுப்பத்து-2). பிற்சங்க கால இலக்கியங்களில்(இரட்டைக் காப்பியங்கள் உட்பட) மொத்தம் 32 இடங்களில் இவ்வகை வினைகள் இடம்பெறுகின்றன.(இவை Index des mots de litterature Tamoule ancienne நூலிலிருந்து பெறப்பட்ட தரவுகள். ஒரே வினைவடிவம் இடம்பெறும் பல்வேறு இடங்கள் இங்குக் கருத்திற் கொள்ளப்படவில்லை.) இந்தக் காரண வினை வடிவங்கள்(7'ஆம் நூற்றாண்டு) பக்தி இலக்கியங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன(L.V. Ramasami Aiyar, 1939). இந்தத் தரவுகளைக் கொண்டு பிற்சங்க காலத்திலிருந்து இந்த வினைவடிவங்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெறத் தொடங்கின என்று கருதலாம். 'இந்த பி மற்றும் வி ஒட்டுகள் சமஸ்கிருத வடிவங்களான தபித(dapitah), மாபித(ma:pitah), ஸ்பவித(sphavitah) ஆகியவற்றிலிருந்து அவை காரண வினையாக இல்லாத நிலையிலும் தவறாகத் தமிழில் கையாளப்பட்டிருக்கலாம்' என்னும் சுப்பிரமணிய சாஸ்திரியின் கருத்து முற்றிலும் தவறாகும்(ப.132). தமிழில் இவை  வேறு மொழியின் தாக்கமின்றி உள்ளார்ந்த நிலையிலேயே உருவானதாகக் கொள்வதே பொருத்தமானது. அவர் குறிப்பிடுவது போன்று இவை பழந்தமிழில் இறப்பல்லாக் கால வினையெச்ச வடிவமான கழிப்பி என்னும் வடிவத்துடன் தொடர்புடையவையாக உள்ளன. வினையெச்ச வடிவம் வினைப் பகுதியாகக் கருதப்படுவது பற்றி இந்த இயலின் முதல் சான்றெண் குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது.  மேலும், தொல்காப்பியம் இந்த வகை வினைகளைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை என்பதும் வீரசோழியத்தில்(கி.பி.10'ஆம் நூற்றாண்டு) இவை பற்றிய விதிகள் இடம்பெறுவதும் கவனத்திற் கொள்ளத்தக்கவை. இவை இன்னும் பயன்பாட்டில் உள்ளன என்று கூறும் இராமசாமி ஐயர்(1928:167) கருத்து மலையாளத்திற்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது. தற்காலத் தமிழைப் பொறுத்தவரை இக்கூற்றுப் பொருந்தாது(P.S.Subrahmanyam,1971). சொல்லியல் நிலையிலிருந்து தொடரியல் நிலைக்குத் தமிழில் எதிர்மறைகள் மாறியதைப் போன்று(M.Varataracan, 1957) இந்த வினைகளும் சொல்லியல் நிலையிலிருந்து தொடரியல் நிலைக்கு மாறியிருக்கலாம். எனவே, தற்காலத் தமிழில் குறைந்த அளவில் இந்த வினைகள் பயன்படுத்தப்படுகின்றமையும் அவற்றின் பொருண்மையில் மாற்றம் ஏற்படாமையும் வரலாற்றுக் காரணங்களால் இருக்கலாம். அதேபோன்று, பழந்தமிழில் அறிவி(அகநானூறு 52) என்னும் சொல் தரும் பொருளும் தற்காலத்தில் அச்சொல் தரும் பொருளும் ஒன்றாகவே உள்ளன. எனவே, அறிவி போன்ற வினைகள் மறைமுகக் காரண வினைகளாக இருந்து பின்னர் நேரடிக் காரண வினைகளாக மாற்றமடைந்தன என்று கூறுவது பொருந்தாது. இந்நிலையில், கால மாற்றம் முதல்வகைக் காரண வினைகளுக்கும் இரண்டாம் வகைக் காரண வினைகளுக்கும் இடையிலான வேறுபாட்டிற்குக் காரணமாக இல்லை.

          இரண்டாம் வகைக் காரண வினைகள் தரும் பொருளை அறிந்து கொள்வதற்குத் தமிழில் உள்ள உணர்தல், அறிதல் தொடர்பான வினைகளின் தன்மையை முதலில் விளக்கலாம். கீழ்க்காணும் தொடர்களை நோக்குக.

          3.26 (அ) எனக்கு அவனைத் தெரியும்

                  (ஆ) நான் அவனைத் தெரிந்து கொண்டேன்

          3.27 (அ) எனக்கு அறிவு வந்தது

                  (ஆ) நான் அறிந்தேன்

          3.28 (அ) எனக்கு உணர்வு வந்தது

                  (ஆ) நான் உணர்ந்தேன்

(அ) வரிசையில் உள்ள தொடர்களுக்கும் (ஆ) வரிசையில் உள்ள தொடர்களுக்கும் இடையில் பொருள் வேறுபாடு காணப்படுகிறது. (அ) வரிசையில் உள்ள தொடர்களில் காணப்படும் பெயர் வடிவங்கள் செயலை நிகழ்த்தும் வினைமுதலாக(Agent) அமையவில்லை; ஆனால் (ஆ) வரிசையில் உள்ள பெயர்கள் செயலை நிகழ்த்தும் வினைமுதலாக அமைகின்றன. வேறுவழியில் இதனைப் பின்வருமாறு விளக்கலாம்(N.McCawley, 1976). (அ) வரிசைத் தொடர்களில்  உள்ள பெயர்கள் தன் முயற்சியின்றி(involuntive) அமையும் வினைமுதல்களாகும். (ஆ) வரிசைத் தொடர்களில்  உள்ள பெயர்கள் தன் முயற்சியுடன்(non-involuntive) செயற்படும் வினைமுதல்களாகும்.

          இதனைச் சில வினையடைகளைச் சேர்ப்பதன்வழி நிறுவலாம். சில வினையடைகள் தன் முயற்சியுடன் செயற்படும் வினைமுதல்களை உடைய வினைகளுடன் மட்டுமே வரும்.

          3.29 (அ) *அவருக்கு வேண்டுமென்றே கோபம் வந்தது

                   (ஆ) அவர் வேண்டுமென்றே கோபப்பட்டார்

இதன்மூலம், உணர்தல், அறிதல் போன்ற வினைகளை விளக்க வினைமுதல் செயற்படும் விதம் உதவுகிறது என்பதை அறியலாம்.

          இதனடிப்படையில், இரண்டாம் வகைக் காரண வினைகளில் வரும் செயல்நிகழ்(Causee) வினைமுதல் தன்முயற்சியின்றிச் செயற்படும் வினைமுதலாக அமைந்துள்ளது எனக் கருதலாம்.

          3.30 My neighbour informed me of his adventures in Acapulco

மேற்கண்ட தொடர் காரண வினைமுதல் செயல்நிகழ் வினைமுதலுக்கு அறிவைப் புகட்டும் சூழலில் பொருந்துமே தவிர காரண வினைமுதல் செய்தித்தாள்களின் மூலமாகச் செயல்நிகழ் வினைமுதலுக்கு அறிவித்ததாக அமையும் சூழலுடன் பொருந்தாது.

          அணிவி என்னும் வினை உணர்தல், அறிதல் போன்ற வினைகளுடன் பொருந்தாது எனினும் இதில் வரும் செயல்நிகழ் வினைமுதலும் தன்முயற்சியின்றிச் செயற்படுவதாகவே உள்ளது.

          3.31 ரசிகர் நடிகருக்கு மாலை அணிவித்தார்

என்னும் தொடரில் ரசிகர் தானாக மாலையை நடிகருக்கு அணிவித்தார் என்னும் பொருள் தருகிறதே அன்றி ரசிகர் ஒரு மாலையைக் கடைக்காரரிடம் கூறி நடிகருக்கு அனுப்பிவைத்து அதன் பின்னர் அதனை நடிகர் அணிந்துகொண்டார் என்னும் பொருளில் வரவில்லை. அதேபோன்று,

          3.32 செட்டியார் அவனுக்கு இராமாயணம் கற்பித்தார்

என்னும் தொடர் செட்டியார் தாமாக அவனுக்கு இராமாயணம் கற்பித்தார் என்னும் பொருள் தருகிறதே அன்றிச் செட்டியார் உதவியால் வேறொருவரின் துணைக்கொண்டோ அல்லது தானாகவோ அவன் இராமாயணம் கற்றான் என்னும் பொருள் தரவில்லை.

          முதல் வகைக் காரண வினைகளுக்கும் இரண்டாம் வகைக் காரண வினைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடு செயல்நிகழ் வினைமுதலைக் குறித்ததாக உள்ளது என்பதே இங்கு முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது. முதல்வகைக் காரண வினைகளில் வரும் காரண வினைமுதலும் செயல்நிகழ் வினைமுதலும் தன்முயற்சியுடன்  வினையில் ஈடுபடுகின்றன. ஆனால், இரண்டாம் வகைக் காரண வினைகளில் காரண வினைமுதல் தன்முயற்சியுடன் வினையில் ஈடுபடச் செயல்நிகழ் வினைமுதல் தன்முயற்சியின்றி அவ்வினையில் ஈடுபடுகிறது.

          சொல்லியல் நிலையில் காரண வினைகளைப் பகுப்பது சில மொழிகளுக்குப் பொருந்தினாலும் அது எல்லா மொழிகளுக்கும் பொருந்துவதாக இல்லை. குறிப்பாகத் தமிழ்மொழிக்கு அது பொருந்தவில்லை. தமிழில் சில காரண வினைகள் நேரடிக் காரண வினைகளாகவும் சில காரண வினைகள் மறைமுகக் காரண வினைகளாகவும் உள்ளன. எனவே, அவ்வினைகளுடன் தொடர்புடைய வினைமுதலின் ஈடுப்பாட்டைக் கொண்டு இவற்றை விளக்குவது பொருத்தமாக இருக்கும். அடுத்த பகுதியில் துணைவினைகளைக் கொண்டு ஆக்கமுறும் காரண வினைகளைப் பற்றி ஆராயலாம்.

துணைவினைக் காரண வினைகள்

(i) அமைப்பு

          செயவென் எச்சத்துடன் வை அல்லது செய் ஆகிய துணைவினைகளில்9 ஒன்று இணையும்போது காரணவினைத் தொடர்கள் தோன்றுகின்றன.10 கீழ்க்காணும் தொடர்களை நோக்குக.

          3.33 (அ) டாக்டர் இந்தப் புண்ணை ஆற வைத்தார்

                  (ஆ) அவள் மகனைக் காப்பி11 ஆற்றச் செய்தாள்

தமிழ்மொழி(இந்தி, ஜப்பான் போன்ற மொழிகளைப் போன்று அல்லாமல்) ஒரே தொடரில் இரண்டு செயப்படுபொருள் ஏற்ற பெயர்கள் வர இடமளிக்கிறது. இவ்வாறான தொடர்களில் காணப்படும் செயவென் வினையெச்சமும் துணைவினையும் இணைந்து ஒரு வகையான கூட்டுவினை அமைப்பாகச் செயற்படுகின்றன. இவற்றுக்கு இடையில் பெயர்ச் சொல்லோ வினையடையோ இடம்பெறாது ஆதலால் இந்தக் கூட்டுவினை வடிவம் ஒற்றை அலகாகச் செயற்படுகிறது. ஆனால், சில வழிகளில் இவை இரண்டும் தனித்தனியாகச் செயற்படுவதையும் காணமுடிகிறது. இவற்றில் இரண்டாம் வினையே திணை, பால், இட விகுதிகளை ஏற்கிறது. மேலும், முதல் வினை தன்னுடன் வேறுசில துணைவினைகளும் இணைந்து வர இடமளிக்கிறது. கீழ்க்காணும் தொடரை நோக்குக.

          3.34 ஆசிரியர் மாணவனை வெளியில் நின்று கொண்டு இருக்க வைத்தார்

இவ்வாறான தொடர்களில் முதல்வினையின் இறுதி உறுப்பினரே செயவென் எச்சமாக இருக்கும். தேற்றப் பொருள் தரும் தான் என்னும் சொல்லும் இந்த முதல்வினையுடனேயே இணைகிறது.

          3.35 சிறைச்சாலை குற்றத்தைப் பெருக்கத்தான் வைக்கிறது

இணைப்புத் தொடர்கள் வரும்போது இரண்டு வினையெச்சங்களும் ஒரு துணைவினையுடனேயே முடிகின்றன.

          3.36 ராணி அஞ்சலியைப் பாத்திரம் கழுவவும் சாவித்திரியை வீடு கூட்டவும்                    வைத்தாள்

          இந்தத் தொடர்களில் காரணப் பொருளைத் தரும் கூட்டு வினைவடிவம் ஒற்றை வினையாக(Single Verb) உள்ளதா வினைத்தொடராக உள்ளதா என்பது ஆய்தற்குரியது. கொம்ரி (Comrie,1976) பல மொழிகளில் காரணப்பொருள்+செயவென் எச்சம் என்னும் அமைப்புக் காணப்படுகிறது என்று குறிப்பிடுகிறார். அகத்தியலிங்கம் இந்த அமைப்பினைக் கூட்டுவினை(வினை+வை)12 வடிவம் என்று குறிப்பிடுகிறார். மேலும், வை என்பது செயப்படுபொருள் குன்றிய வினையைச் செயப்படுபொருள் குன்றா வினையாக மாற்றுகிறது என்றும் விளக்கிக் கீழ்க்காணும் சான்றினைக் காட்டுகிறார்(1967: 84).13

          3.37 நான் அவனை ஓட வைத்தேன்

எந்த வகையான வினையும் வை என்னும் துணைவினை சேரும்போது அது செயப்படுபொருளை ஏற்கும் என்று அகத்தியலிங்கம் குறிப்பிடுகிறார். இதன் மூலம், அகத்தியலிங்கம், இந்தக் கூட்டுவினை வடிவத்தைத் தொடரியல் நிலையில் ஒற்றைவினையாகக் கருதுகிறார் என்றும் பொருண்மையியல் நிலையில் காரணப் பொருளை உணர்த்துவதாகக் கருதுகிறார் என்றும் கூறலாம். இவற்றுக்கு இடையில் எந்தச் சொல்லும் புகுத்த முடியாதபோதிலும் இந்தக் கூட்டுவினை வடிவத்தை ஒற்றைவினையாகக் கொள்வதா என்பது இன்னும் தெளிவில்லாமல் உள்ளது. இந்தக் கூட்டுவினைகளில் ஒவ்வொரு வினையும் தனித்தனி வினையடைகளைப் பெற்றுவரலாம்.

          3.38 சண்முகம் கஷ்டப்பட்டு வேலை செய்து மகனை நன்றாய்ப் படிக்க வைத்தான்

மேற்கண்ட தொடரில் கஷ்டப்பட்டு என்னும் வினையடை சண்முகம் எவ்வாறு வேலை செய்து மகன் நன்றாகப் படிப்பதற்குக் காரணமாக அமைந்தான் என்பதைப் பற்றியதாக உள்ளது.(தமிழ்நாட்டில் பிள்ளைகள் தங்கள் சொந்தச் செலவில் கல்வி கற்பதில்லை; பெற்றோர் அல்லது வேறொருவரின் பொருளாதாரத் துணையைக் கொண்டே அவர்கள் படிக்கின்றனர்.) நன்றாய் என்னும் வினையடை மகன் எவ்வாறு படித்தான் என்பதைச் சுட்டுவதாக உள்ளது. இவ்வாறு வேறுவேறு வினையடைகளை ஏற்பது கொண்டு கூட்டு வினைவடிவம் என்பது தொடரியல் நிலையில் ஒற்றைவினையாக அமையவில்லை என்பதை நிறுவலாம்.

          இதுவரை அமைப்பு சார்ந்த துணைவினைத் தொடர்களைப் பற்றி விளக்கப்பட்டது. அடுத்த பகுதியில் இந்தத் துணை வினைத் தொடர்களில் உள்ள பொருண்மையியல் சிக்கல் விளக்கப்படும்.

(ii) பொருண்மையியல் பண்புகள்

          முன்னர்க் குறிப்பிட்டது போன்று துணைவினையால் உருவாகும் காரண வினைகள் வை அல்லது செய் என்னும் துணைவினைகளைக் கொண்டு ஆக்கமுறுகின்றன. இங்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. (i) இரண்டு துணைவினைகளும் பொருண்மை நிலையில் ஒரே பொருளைத் தந்து அகநிலையில் ஒரே அமைப்பினைப் பெற்றுள்ளனவா என்று பார்க்கவேண்டும். (ii) மேலும், வை என்பதன் பயன்பாடு செய் என்பதைக் காட்டிலும் பெரும்பான்மையாக ஏன் அமைகிறது என்று பார்க்கவேண்டும்.

          முதல் கேள்விக்கான வினையைக் கண்டடைய, இரண்டு துணை வினைகளும் தம்முள் இடம் மாறி அமையும் வகையில் உள்ளனவா என்று நோக்கவேண்டும். இவை இரண்டும் தம்முள் எல்லா இடங்களிலும் இடம் மாற்றக் கூடியவையாக இருப்பதில்லை.

          சான்றாக, மனைவி, வெயிலில் துணியைக் காயப்போடும் நிகழ்வைக் கீழ்க்காணுமாறு குறிப்பிடலாம்.

          3.39 (அ) அவள் வெயிலில் துணியைக் காய வைத்தாள்

ஆனால், கீழ்க்காணுமாறு கூறப்படுவதில்லை.

                  (ஆ) *அவள் வெயிலில் துணியைக் காயச் செய்தாள்

இதே போன்று, ஒரு பிச்சைக்காரன் கீழ்வருமாறு தன் நிலையைக் குறிப்பிடலாம்.

          3.40 (அ) கடவுள் என்னைப் பிச்சை எடுக்க வைத்தார்

ஆனால், கீழ்வருமாறு கூறுவது பொருந்தாது.

                   (ஆ) *கடவுள் என்னைப் பிச்சை எடுக்கச் செய்தார்

(ஆ) வகைத் தொடர்களில் காணப்படும் இலக்கண வழு வை என்னும் துணை வினைக்குப் பதிலாகச் செய் என்னும் துணைவினையைச் சேர்த்ததால் உண்டானதாகும்.

          இரண்டு துணைவினைகளைக் கொண்டு கூறப்படும் தொடர்களில் பொருள் வேறுபாடு இருப்பதையும் காணமுடிகிறது.

          3.41 (அ) அவள் அவனை ஏமாறச் செய்தாள்

                  (ஆ) அவள் அவனை ஏமாற வைத்தாள்

இந்நிலை கீழ்க்காணும் ஆங்கிலத் தொடருடன் ஒத்துக் காணப்படுகிறது.

          3.42 () She made the plumber fix the pipe

                  () She had the plumber fix the pipe

3.41(அ) தொடர், அவள் அவனைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிப் பின்னர் ஏமாற்றிய சூழலுக்குப் பொருந்துகிறது. ஆனால்,  3.41(ஆ), அவள் அவனுக்கு ஒரு கேக் துண்டை ஊட்ட வந்து பின்னர் அதை அவளே உண்டாள் என்னும் சூழலுக்குப் பொருந்துவதாக உள்ளது.

          பொதுவாக, வை என்னும் துணைவினை கொண்ட தொடர், காரண வினைமுதல் செயல்நிகழ் வினைமுதலை ஒரு குறிப்பிட்ட சூழலுக்குள் கொண்டு வந்து அதில் அதை(செயல்நிகழ் வினைமுதல்) வினையாற்றச் செய்வதாக உள்ளது. அந்தச் சூழலில் செயல்நிகழ் வினைமுதல் தன்னுணர்வுடனோ தன்னுணர்வின்றியோ அந்த வினையில் ஈடுபடுகிறது(Collingwood, 1938).

          இந்தப் பொருண்மை காரணமாக வை என்னும் துணை வினை சில சூழல்களில் பயன்படச் செய் என்னும் துணை வினையை அதே சூழலில் பயன்படுத்த முடிவதில்லை. தம் மகளைப் பள்ளியில் சேர்க்கும் ஒரு தந்தையைப் பற்றிக் கீழ்க்காணுமாறு குறிப்பிடலாம்.

          3.43 (அ) அவன் மகளைப் படிக்க வைத்தான்

ஆனால், கீழ்க்காணுமாறு அந்தச் சூழலைக் குறிப்பிடமுடியாது.

                  (ஆ) அவன் மகளைப் படிக்கச் செய்தான்

இத்தொடர் மகள் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்தவுடன் விளையாடச் சென்றதும் அவள் தந்தை அவளைப் படிக்குமாறு செய்யும் சூழலுக்குப் பொருத்தமாக உள்ளது.

          செய் என்னும் துணைவினையைக் கொண்டுள்ள தொடர்களில் உள்ள காரண வினைமுதல் அறிவித்தல் முதல் கட்டாயப்படுத்தல் வரையிலான பொருள்களில் செயற்படுகிறது. ஆனால், வை என்னும் துணைவினையைக் கொண்டுள்ள தொடர்களில் உள்ள காரண வினைமுதலின் செயலில் கட்டாயப்படுத்துதல் அமையவில்லை. கீழ்க்காணும் இரண்டு தொடர்களையும் நோக்குக.

          3.44 (அ) கள்ளன் அந்தப் பெண்ணை நகைகளைக் கழற்றச் செய்தான்

                  (ஆ) கள்ளன் அந்தப் பெண்ணை நகைகளைக் கழற்ற வைத்தான்

3.44(அ) தொடரில் கட்டாயப்படுத்துதல் பொருள் இடம்பெறுகிறது. ஆனால், (ஆ) தொடரில் கட்டாயப்படுத்துதல் பொருள் இடம்பெறவில்லை.

          செய் மற்றும் வை துணைவினைகளைக் கொண்ட தொடர்களுக்கு இடையில் உள்ள பொருண்மை வேறுபாடு சூழ்நிலைக் காரணப் பொருள் பற்றிய வேறுபாடாக அமைகிறது(Situational Causative). இவற்றை மேலாய்விற்கு உட்படுத்தும் முறையியல் பற்றி ஆசிரியரிடம் தற்போது எந்தக் கருத்தும் இல்லை.

          தற்போது, முன்னர்ச் சுட்டப்பட்ட இரண்டாவது பிரச்சினையைப் பற்றிக் காணலாம். அது வை துணைவினையைக் கொண்ட தொடர்கள் அதிகளவில் பயன்பாட்டில் இருப்பதற்கான காரணம் பற்றியதாகும். வை துணைவினையை விடச் செய் என்னும் துணைவினை அதிகமாகப் பயன்படுவது போன்று தோன்றினும் வை துணைவினையே பயன்பாட்டில் மிகுதியாகக் கையாளப்படுகிறது. (அகத்தியலிங்கமும் வை துணைவினையை அடிப்படையாகக் கொண்டே விளக்குகிறார்.) பேசும்போது பணிவினைக் காட்டுவதற்கு வை துணைவினையைப் பயன்படுத்துகிறார்கள் என்று இதற்கான காரணத்தை விளக்கலாம்(Grice, 1967). ஒரு சூழலில் நிகழ்த்தப்படும் தொழிலைக் குறிக்காமல் அந்தச் சூழலைக் குறிப்பதாக வை துணைவினை அமைகிறது. கீழ்க்காணும் தொடர்களை நோக்குக.

கணவர் பணிவாகத் தன் கருத்தை மனைவியிடம் தெரிவிக்க விரும்பும் நிலையில்

          3.45 (அ) என்னைக் கோபப்பட வைக்காதே

என்று கூறுவாரே அன்றி,

          3.45 (ஆ) என்னைக் கோபப்படச் செய்யாதே

என்று கூறமாட்டார்.

இதே போன்று, மனைவி பணிவாகத் தன் கருத்தைத் தெரிவிக்க விரும்பும் நிலையில்,

          3.46 (அ) தாய்ப்பாசம் உங்களை இப்படிப் பேச வைக்கிறது

என்று கூறுவாரே அன்றி,

          3.46 (ஆ) தாய்ப்பாசம் உங்களை இப்படிப் பேசச் செய்கிறது

என்று கூறமாட்டார்.

          3.45(அ) முதல்  3.46(ஆ)வரையிலான தொடர்களில் வை என்னும் துணை வினை பயன்படுத்தப்படுவது பணிவு கருதியே ஆகும்.

          இந்தப் பகுதியில் துணைவினைகளைக் கொண்ட காரண வினைத் தொடர்களில் இரண்டு வகைகள் உள்ளமையைக் கண்டோம். இரண்டும் மறைமுகக் காரண வினைகளாக இருப்பினும் வை என்பது ஒரு குறிப்பட்ட சூழலில் பயன்படுத்தப்படுவதாகவும் செய் என்பது பொதுவான சூழலில் பயன்படுத்தப்படுவதாகவும் காணப்படுகின்றன. மேலும், வை துணைவினை அதிகளவில் பயன்படுத்தப்படுவது பேசுபவரின் பணிவினை அடிப்படையாகக் கொண்டதாக அமைகிறது.

          இந்த இயலில் சொல்லியல் நிலையில் இரண்டு வகையான காரண வினைகள் உள்ளமை விளக்கப்பட்டது. அவற்றுள், முதல் வகைக் காரண வினைகள் மறைமுகக் காரண வினைகளாகவும் இரண்டாம் வகைக் காரண வினைகள் நேரடிக் காரண வினைகளாகவும் செயற்படும் பாங்கு விளக்கப்பட்டது. இந்த வேறுபாடு செயல்நிகழ் வினைமுதலின் முயற்சி/முயற்சியின்மையை அடிப்படையாகக் கொண்டது என்பதும் விளக்கப்பட்டது. முதல்வகைக் காரண வினையில் செயல்நிகழ் வினைமுதல் தன்முயற்சியுடன் செயற்படும் வினைமுதலாகவும் இரண்டாம் வகைக் காரண வினையில் தன் முயற்சியின்றி ஈடுபடும் வினைமுதலாகவும் உள்ளன. மேலும், துணைவினைகளைக் கொண்ட காரணத் தொடர்களில் செய் என்பதற்கும் வை என்பதற்கும் இடையிலான வேறுபாடுகள் விளக்கப்பட்டன.

சான்றெண் விளக்கம்

1.     இந்த இடைநிலையின் தோற்றம் தெளிவாக இல்லை. ஒலியனியல் மற்றும் பொருண்மையியல் நிலையில் இந்த -வி-/-(ப்)பி- ஆகிய இரண்டும் ஒரே ஒலியனின் மாற்றொலியன்கள் என்று கருதத்தக்கனவாய் உள்ளன. -வி- என்னும் இடைநிலை வை என்னும் சொல்லிலிருந்து தோன்றியிருக்கலாம் என்னும் கருத்து (L.V.Ramaswami Aiyar,1928; A.K.Ramanujan,1963) முன்வைக்கப்படுகிறது. அமைப்பியல் நிலையிலும் ஒலியனியல் நிலையிலும் இந்தக் கருத்து ஏற்புடையதாக இல்லை. அமைப்பியல் நிலையில் 'வை' என்னும் துணைவினை ஒரு செயவென் எச்சத்துடன் இணையுமே தவிர வினைப்பகுதியுடன் இணையாது. இராமசுவாமி ஐயர்(L.V.Ramaswami Aiyar, 1928) இந்தக் கருத்தைத் தெரிவித்தாலும் அவர் இந்த இடைநிலையின் தோற்றம் பற்றி எந்தக் குறிப்பும் தரவில்லை. ஒலியனியல் நிலையில், வை என்பதிலிருந்து வி என்னும் வடிவத்தைக் கொண்டுவருவதும் அதிலிருந்து பி என்னும் வடிவத்தைக் கொண்டுவருவதும் ஆய்வியல் நெறிக்கு ஒவ்வாததாக அமையும். கால்டுவெல்(Caldwell, 1856), -(ப்)பு என்பது பெயராக்க விகுதி என்றும் அதனுடன் -இ என்னும் வினையாக்க விகுதி(ஈ என்னும் துணைவினையிலிருந்து பெறப்படுவது) இணைந்து -(ப்)பி இடைநிலை தோன்றுகிறது என்றும் விளக்குகிறார். எனினும், இந்த வினையுடன் தொடர்புடைய பெயர்கள் ஏற்கும் வேற்றுமைக்கும் காரணப் பொருள் தரும் வினையுடன் தொடர்புடைய பெயர்கள் ஏற்கும் வேற்றுமைக்கும் இடையில் வேறுபாடு காணப்படுகிறது. மேலும், இவை இரண்டும் பொருண்மை நிலையில் ஒன்றாக அமைவதுமில்லை. -(ப்)ப்-என்பது எதிர்கால இடைநிலை என்னும் கருத்தை முன்வைத்து இந்த வினைகளின் தோற்றத்தை வரையறுக்கலாம். இது பொருண்மையியல் நிலையில் பொருந்தும் விளக்கமாகவும் அமையும்(காரண வினையால் நிகழும் விளைவு வினை எப்போதும் காரண வினையுடன் நோக்க எதிர்காலத்தில் நிகழ்வதாகவே அமையும்). இந்த அமைப்பில் காரணப் பொருளைத் தரும் -இ என்பது வினையெச்ச விகுதியாகக் கொள்ளத்தக்கது.  பழந்தமிழில் கழிப்பி என்று -ப்ப்- எதிர்கால இடைநிலை பெற்ற வினையெச்சம் உள்ளமை கருதத்தகுந்தது(இதன் இறந்த கால வடிவம் கழித்து என்பதாகும். மேல் விளக்கத்திற்கு தொல்.சொல்.226'ஆம் நூர்பாவிற்கான நச்சினார்க்கினியர் உரையைக் காண்க). பின்னர், இந்த வினையெச்ச வடிவம் வினைப்பகுதியாகக் கருதப்பட்டது என்று கொள்ளலாம்(இயல் 1'இல் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவு 3 வகை வினைகளின் விளக்கத்தில் காண்க).

2.     இந்த இலக்கண நூல் சொல்லியல் நிலையில் அமையும் வேறொரு காரண வினைகள் பற்றியும் ஈரேவல் என்னும் பெயரில் குறிப்பிடுகிறது. இதில் -வி-/-(ப்)பி- அமைப்புடன் மற்றொரு -ப்பி- இடைநிலை இணைகிறது. சான்றாக, வருவிப்பி. இதற்கு உரையாசிரியர்கள் காட்டும் சான்றுகள் யாவும் ஏவல் வினைகளே ஆகும். ஏ.கே.ராமானுஜன்(A.K.Ramanujan, 1963) இந்த ஈரேவல் வடிவங்கள் கோட்பாட்டு நிலையில் உள்ளனவே தவிர பயன்பாட்டில் இல்லை என்று குறிப்பிடுகிறார். வீரசோழிய உரையாசிரியர் மும்முறைக் காரண வினைகள் பற்றியும் குறிப்பிடுகிறார். ஆனால், அவர் காட்டும்ஊட்டு என்னும் இயக்கு வினையுடன் ஈரேவல் கொண்ட வடிவமாகவே உள்ளது. ஈரேவல் தற்காலத் தமிழில் இடம்பெறுவதில்லை. எனவே, இந்த ஆய்வில் அது பற்றிக் கருதப்படவில்லை.

3.     மூன்றாம் வேற்றுமை ஏற்ற பெயர்த்தொடர் பொருள் மயக்கத்தைத் தரும் தொடராக உள்ளது. பொன்னின் ஆட்டத்துடன் இந்தப் பெயர்த்தொடரைப் பொருத்திப் பார்க்கும்போது கொற்றன் ஆடுதல் தொழிலுக்குக் காரணமாக அமைந்துள்ளான் என்னும் பொருளைத் தருகிறது. சாத்தனின் காரணப் பொருளுடன் இணைத்துப் பார்க்கும்போது கொற்றன் பொருட்டுச் சாத்தன் காரண வினைமுதலாக அமைந்தான் என்னும் பொருளைத் தருகிறது. இந்தப் பொருண்மை மயக்கம் உரையாசிரியரின் கருத்திற்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனினும் இதில் இரண்டு வகையான நிகழ்வுகள் உள்ளமையை அறியமுடிகிறது.

4.     தொடர் 3.4(அ)'வில் சில சொற்கள் மறைந்து வந்துள்ளன. இங்கு அம்ம என்னும் சொல் அன்றி அந்தச் சொல்லின் உச்சரிப்பே கேட்டல் நிகழ்விற்குக் காரணமாக அமைகிறது. தொடர் 3.4(ஆ) அதே போன்று மறை நிலையில் சொற்களைப் பெற்றுள்ளது.

5.     தற்கால இலக்கிய/எழுத்துத் தமிழில் பொதுவாக நிகழும் வினைகள்(பழக்கங்கள், பொது உண்மைகள்) எதிர்காலத்தில் குறிக்கப்படும்.

6.     இவ்வடிவம் பேச்சுமொழியில் முன்னிற்பவரின் கவனத்தை ஈர்க்கப் பயன்படும் 'hey', 'you', 'see' போன்ற சொற்களைப் போன்றது.

7.     தொடர் 3.8(அ) முதல் 3.9 வரையிலான தொடர்கள் யாவும் விக்கிரமாதித்தன் கதைகள் என்னும் புகழ்பெற்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவை.

8.     இந்தத் தொடரில் அவனால் என்பதற்குப் பதில் அவன் மூலம் என்னும் பெயர்த்தொடரைப் புகுத்தினால் பொருளுடைய தொடராக அமைந்துவிடும். எனினும், இங்கு அவன் என்பது கருவியாக அமையுமே தவிர காரண வினைமுதலாக அமையாது.

9.     பிராமணர்களின் பேச்சுத் தமிழில் இடம்பெறும் பண்ணு என்னும் துணைவினை செய் என்னும் துணைவினையுடன் ஒத்துப்போகிறது. கந்தையா(Kandiah,1967) விடு என்பதையும் துணைவினையாகக் கருதுகிறார். ஆனால், அது எதிர்மறைத் தொடருடன் இணைந்துவரும்போது அத்தொடர் வழுவற்ற தொடராக அமைவது கொண்டு அதில் காரணவினைப் பொருள் இல்லை என்று நிறுவலாம்.

a.     அவன் மாட்டை மேய விட்டும் அது மேயவில்லை.

10. தொடரியல் நிலையில் அமையும் காரண வினைத் தொடர்களைப் பற்றித் தமிழ் இலக்கண நூலார் ஒன்றும் குறிப்பிடவில்லை. போப்(Pope,1955) எழுதிய இலக்கண நூலிலேயே முதன்முதலில் இவை பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. இவ்வாறான தொடர்கள் ஐயப்பாட்டிற்கு இடமான முறையில் காரண வினைத் தொடர்களாக அமைகின்றன என்ற குறிப்பும் அதில் காணப்படுகிறது(ப.126). தற்கால மொழியியல் அறிஞர்கள் பொதுவாக இந்த வகையைக் கருத்திற்கொள்வதில்லை(Srinivasan,1969). ஒருசிலர் குறைவான விளக்கங்களையும் முழுமையற்ற ஆய்வு முடிவுகளையும் வழங்கியுள்ளனர்(Agesthialingom,1967; Kandiah,1967).

11. அஃறிணைப் பெயர்கள் இரண்டாம் வேற்றுமை உருபுடன் வருவது கட்டாய விதி இல்லை.

12. அகத்தியலிங்கத்தின் குறிப்புகள் இந்த நூலின் அமைப்பிற்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளன. அகத்தியலிங்கம்(Agesthialingom,1967) வை என்பதற்கு இப்பகுதியின் விளக்கத்தில் 'make' என்னும் சொல்லாலும் வேறு இடங்களில் 'place' என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறார். 

13. செயப்படுபொருள் குன்றிய வினை-குன்றா வினை என்னும் பாகுபாட்டில் காணப்படும் குறைபாடுகள் பற்றி இந்த நூலின் இயல் 1'இல் விளக்கப்பட்டுள்ளது. மேலும், இயல் 2'இல் இந்த வினைகளுக்கு இடையில் காரணப் பொருள் இல்லை என்பதும் விளக்கப்பட்டது.

 

முடிவுரை

          முடிவரை என்னும் சொல் இங்குத் தற்காலிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும். ஏனெனில், இந்த நூலில் முற்ற முடிந்த முடிவுகள் என்று எவையும் சுட்டப்படவில்லை. மொழியியல் கோட்பாடுகளை உருவாக்குவதில் காரண வினைகளின் முக்கியத்துவம் இன்று மொழியியல் அறிஞர்கள் பலரால் உணரப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் 'மொழியியல் விளக்கத்தில் ஆங்கிலத்தில் சான்றுகள் காட்டப்படவேண்டும்; அதில் காணப்படும் கூறுகள் உலக மொழிகள் முழுமைக்கும் பொருந்துகின்றன' என்று கூறமுடியாது. மேற்கண்ட கூற்றுப் பொருத்தமற்றது என்பதே ஆசிரியரின் நிலைப்பாடும் ஆகும். கொம்ரி(Comrie,1976) கூறியது போன்று, மொழிக் குடும்பம், வகைமை, நிலப்பகுதி ஆகிய பகுப்புகளில் பல மொழிகளை ஆராய்ந்த பின்னரே உலக மொழிகளுக்கான பொதுமை இலக்கணம் வகுக்க முடியும். அந்த வகையில் ஒரு பொதுமை இலக்கணத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன என்று இந்நூலாசிரியர் கருதுகிறார்.

          சார்பற்ற பார்வையை வழங்கக் கருதிய நிலையில், தமிழில் காணப்படும் காரண வினைகளை எந்தக் கோட்பாட்டினுள்ளும் பொருத்தாமல் பொதுநிலையில் இந்த நூலில் ஆசிரியர் விளக்கியுள்ளார். பலவிடங்களில் பொருண்மையியல் கருத்துகளைப் பின்பற்றி விளக்கம் தரப்பட்டன. சில இடங்களில் வென் விதியும்(Venn's Law) பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விதி (Hospers, 1953:29) 'நாம் நிரூபிக்க நினைக்கும் ஒரு கூற்றின் உண்மைத்தன்மையை அறிய அதைப் பல்வேறு சூழல்களில் பொருத்திப்பார்த்து அதற்குத் தக முடிவெடுப்பதற்குப் பயன்படுகிறது'.

          சொல்லியல் மற்றும் தொடரியல் நிலையில் தமிழில் காணப்படும் காரண வினைகளைப் பற்றிய ஆய்வாக இந்த நூல் அமைந்துள்ளது. இரட்டை வல்லொலி கொண்ட வினைகள் ஒற்றை வல்லொலி கொண்ட வினைகளின் காரண வினை வடிவங்கள் அல்ல என்பது விளக்கப்பட்டது.

          இந்நூல், மூன்று வகையான வினைகளைப் பற்றி விளக்கியுள்ளது.(இயங்கு வினை, இயக்கு வினை, காரண வினை) இரண்டு அடிப்படையான வினை வடிவங்களில் ஒன்றில் சுட்டப்படும் தொழில் எழுவாயால் செய்யப்படுவது என்றும் மற்றொன்றில் சுட்டப்படும் தொழில் எழுவாய் மற்றொரு பொருளின் மீது நிகழ்த்துகிறது என்றும் காட்டப்பட்டன. இவை பற்றிய விளக்கத்தில் செயப்படுபொருள் ஏற்பது அல்லது ஏற்காதது என்பது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதும் விளக்கப்பட்டது. இயக்கு வினைகள் பொருண்மை நிலையில் காரணப் பொருள் தருபவை அல்ல என்பதும் இந்நூலில் குறிப்பிடப்பட்டது. வினைகளைக் காரண வினைகள், அல்-காரண வினைகள் என்னும் பகுப்பில் அடக்கி விளக்கமுடியாது என்பது இந்த ஆய்வு முன்வைக்கும் முக்கியமான கருத்தாகும்.

          முன்னர்க் குறிப்பிட்டது போன்று சொல்லியல் நிலையிலும் தொடரியல் நிலையிலும் அமையும் காரண வினைகளைப் பற்றி இந்த நூல் ஆராய்ந்துள்ளது. இதன் மூலம், நேரடிக் காரண வினைகள், மறைமுகக் காரண வினைகள் என்னும் பகுப்புத் தமிழில் இன்றியமையாத பகுப்பு என்பது விளக்கப்பட்டது. மொழியியல் நிலையில் சொல்லியல் நிலையில் அமையும் காரண வினைகளையும் தொடரியல் நிலையில் அமையும் காரண வினைகளையும் விளக்கவேண்டிய தேவை உள்ளமை பற்றியும் இந்த நூல் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இலக்கணத்தில் இடம்பெறவேண்டும் என்பது தவிர எவ்வாறு இலக்கணத்தில் இவற்றை விளக்குவது என்பது பற்றி இந்நூலாசிரியரிடம் தற்போது எந்த விளக்கமும் இல்லை.


Comments

Popular posts from this blog

தமிழில் இயக்குவினைத் தன்மையும் காரணவினைத் தன்மையும்