தமிழில் இயக்குவினைத் தன்மையும் காரணவினைத் தன்மையும்

 தமிழில் இயக்குவினைத் தன்மையும் காரணவினைத் தன்மையும்

 (Effectivity and Causativity in Tamil - K. Paramasivam நூலின் தமிழாக்கம்)

உள்ளடக்கம்

மூலநூல் ஆசிரியர் முன்னுரை

இயல் 1: தமிழ் வினைச்சொற்களின் வகைப்பாடு

இயல் 2: இயக்குவினைத் தன்மை

இயல் 3: காரணவினைத் தன்மை

முடிவுரை

மூலநூல் ஆசிரியர் முன்னுரை

          பள்ளிப் பருவத்திலிருந்தே எனக்குத் தமிழ்மொழி மீது பெருவிருப்பு ஏற்பட்டிருந்தது. என் தமிழாசிரியர்கள் தமிழ்மொழியின் இலக்கண மற்றும் இலக்கியங்கள் தொடர்பான அறிவைப் புகட்டியதோடு அவற்றின் மீதான ஆர்வத்தையும் தூண்டினர். அவர்களுக்கு நான் முதன்மையாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னிடம் தமிழ் பயின்ற பிறநாட்டு மாணவர்கள் தமிழ் மீதான ஒரு வெளியாள் பார்வையை நான் பெறுவதற்கு மிகவும் துணை புரிந்துள்ளனர். அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

          என்னை மொழியியல் கல்விக்கு அறிமுகப்படுத்திய என் ஆசிரியர் மு.சண்முகம்பிள்ளைக்கு நான் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். மேலும், மொழியியல் கல்வியில் என் அறிவை வளர்த்துக் கொள்ள உதவிய டான் லார்க்கின் போன்ற நண்பர்களுக்கும் நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். ஆசிரியரும் என் நண்பருமான ஜேம்ஸ் லிண்டோம் என் கல்வியில் மிகவும் துணை புரிந்துள்ளார். அவர் புரிந்த எண்ணற்ற உதவிகளை முழுமையாக இங்குப் பட்டியிலிடமுடியாது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைவதற்கும் அவர் உதவி புரிந்துள்ளார். நான் அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

          ஜேம்ஸ் டி.மெக்காலி'யின் மாணவனாக அமைந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் தம்முடைய மாணவர்களிடம் சுய சிந்தனையை வளர்ப்பதில் சிறந்தவர். என் மொழியியல் பயிற்சியில் அவர் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தினார். அவருக்கும் என் கல்விக்காலத்தில் என்னைப் பலவிதங்களில் ஊக்கப்படுத்திய ஏ.கே.ராமானுஜம் அவர்களுக்கும் நான் என்றும் நன்றியுடையேன். இலக்கண நிலையில் பல கருத்துகளைத் தெரிவித்தவரும் நூலைச் செப்பம் செய்ய உதவியவருமான விஜயராணி ஃபெட்சனுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

          என் கல்விக் காலத்தில் எனக்குக் கல்வித்தொகை வழங்கிய நிறுவனங்களுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பயணத்தொகை உதவிபுரிந்த USEFI, டெல்லி மற்றும் கல்விக்கான ஊக்கத்தொகை அளித்து உதவிபுரிந்த சிகாகோ பல்கலைக்கழக மனிதப் பண்பியல் பிரிவு மற்றும் தெற்காசியக் கல்விப் புலத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

          இந்த ஆய்வேட்டைத் தட்டச்சு செய்து உதவிய நார்மன் கட்லர் அவர்களுக்கும் நன்றி.

          என் மனைவியும் பிள்ளைகளும் ஐந்து ஆண்டுகள் மிகுந்த சிரமத்துடன் என்னைப் பிரிந்திருந்து  வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களின் பொறுமைக்கும் புரிந்துணர்விற்கும் நான் நன்றியுடையேன்.

          இந்த ஆய்வேடு மனிதப் பண்பியல் பிரிவின் மொழியியல் துறையில் முனைவர் பட்டப் பேற்றிற்காக அளிக்கப்படும் ஆய்வேடாகும்.

கு. பரமசிவம்

சிகாகோ

இயல் 1

தமிழ் வினைச்சொற்களின் வகைப்பாடு

சொல்லியற் பகுப்புகள்

          தமிழில்1 உள்ள முற்றுவினைச் சொற்களின் சொல்லியல் அமைப்பு மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது. அம்மூன்று கூறுகளாக, வினைப்பகுதி2 ஒன்றும் ஒட்டுகள் இரண்டும் உள்ளன. வினைப்பகுதியை அடுத்து வரும் ஒட்டுக் காலம் காட்டும்; அதற்கு அடுத்து இரண்டாவதாக வரும் ஒட்டு எழுவாயுடனான திணை, பால், எண், இட இயைபினை உணர்த்தும். கீழ்க்காணும் முற்றுத்தொடர்களில் உள்ள வினைமுற்றுகளை நோக்குக.

          1.1 (அ) நான் தாத்தா வீட்டில் வளர்3-ந்த்-ஏன்

                (ஆ) அவள் மதுரையில் வளர்-கிற்-ஆள்

                (இ) அவன் சென்னையில் வளர்-வ்-ஆன்

மேற்கண்ட தொடர்களில் உள்ள வினைமுற்றுகளில், வளர் என்னும் வினைப்பகுதி வளர்தல் என்னும் வினையைச் சுட்டுகிறது; முதலாவது ஒட்டுக் காலத்தைக் குறிக்கிறது(-த்-4 இறந்தகாலம், -கிற்- நிகழ்காலம், -ப்-5 எதிர்காலம்); இரண்டாவது ஒட்டு எழுவாயுடனான இயைபை உணர்த்துகிறது(-ஏன் தன்மை ஒருமை, -ஆள் படர்க்கைப் பெண்பால், -ஆன் படர்க்கை ஆண்பால்).

இனி, பின்வரும் முற்றுத்தொடர்களில் உள்ள வினைமுற்றுகளைக் காண்க.

          1.2 (அ) நீ தாடி வளர்-த்த்-ஆய்

                (ஆ) நீங்கள் பூனை வளர்-க்கிற்-ஈர்கள்

                (இ) நாங்கள் ஒரு நாய் வளர்-ப்ப்-ஓம்

மேற்கண்ட தொடர்களில்(1.1 மற்றும் 1.2) வினைமுற்றில் உள்ள வினைப்பகுதியான 'வளர்' என்பது எந்த மாற்றமும் இன்றி இடம்பெற்றுள்ளது. 1.1அ முதல் 1.1இ வரையிலான தொடர்களில் உள்ள வினைமுற்றின் ஒட்டில்6 இடம்பெறும் முதல் மெய்யொலி (/த்/, /க்/, /ப்/) ஒற்றை வல்லொலியாகவும் 1.2அ முதல் 1.2இ வரையிலான தொடர்களில் உள்ள வினைமுற்றின் ஒட்டில் இடம்பெறும் முதல் மெய்யொலி(/த்த்/, /க்க்/, /ப்ப்/)  இரட்டை  வல்லொலியாகவும் உள்ளன. இவ்வாறு வரும் 1.1 மற்றும் 1.2'இல் உள்ள வினைகளை இணைவினைகள் என்று குறிப்பிடலாம்(சொல்லியல் நிலையிலான இணைவினைகள்). இந்த இணையின் முதல் உறுப்பினர்(1.1) ஒற்றை வல்லொலி7 கொண்ட உறுப்பினர் என்ற வகையில் அடங்குகிறது. அதேபோன்று, இரண்டாவது உறுப்பினர் இரட்டை வல்லொலி கொண்ட உறுப்பினர் என்ற வகையில் அடங்குகிறது.

          தமிழ்மொழி வினைகளில்8 60 விழுக்காட்டு வினைகள் இந்த இணைவினை(சொல்லியல் நிலையிலான இணைவினைகள்)  என்னும் பகுப்பில் அடங்குகின்றன. இவ்வாய்வு இந்த இணைவினைகளின் பொருண்மையியலைக் குறித்த ஆய்வாக அமைகிறது.9

          தமிழ்மொழியில் உள்ள வினைமுற்றுகளின் சொல்லியற் பகுப்பைப் பொறுத்தவரை, இந்த இணைவினைகள், ஒற்றை/இரட்டை வல்லொலிகள் சொல்லில் நிற்கும் இடத்தின் அடிப்படையில் மூன்று பிரிவுகளில் அடங்குவனவாக உள்ளன.

          இந்த இணைவினைகளின் முதற்பிரிவில் இடம்பெறும் வினைகள்(மேற்கண்ட 'வளர்' என்னும் வினையைப் போன்று) ஒட்டின் தொடக்கத்தில் மேற்சுட்டிய ஒற்றை/இரட்டை வல்லொலி வேறுபாட்டைக் கொண்டிருக்கின்றன. இவ்வினை முற்றுகளின் வினைப்பகுதி பின்வரும் தொடர்களில் காணப்படுவதைப் போன்று மெய்யீறு அல்லது உயிரீற்றில் முடியலாம்.

          1.3 (அ) கூட்டம் கலை-ந்த்-அது

                (ஆ) போலீசார் கூட்டத்தைக் கலை-த்த்-ஆர்கள்

          1.4 (அ) கதை முடி-ந்த்-அது

                 (ஆ) அவன் கதையை முடி-த்த்-ஆன்10

          இணைவினைகளின் இரண்டாவது பிரிவில் அடங்கும் வினைகள் ஒற்றை/இரட்டை வல்லொலி வேறுபாட்டை வினைப்பகுதியின் இறுதியில் கொண்டிருக்கும் வினைகளாக உள்ளன. கீழ்க்காணும் முற்றுத்தொடர்களில் இடம்பெறுள்ள வினைமுற்றுகளைக் காண்க.

1.5 (அ) அவனுடைய தலை ஆட்-இன்-அது

      (ஆ) அவன் தலையை ஆட்ட்-இன்-ஆன்11

1.6 (அ) அவனுடைய தலை திரும்ப்-இன்-அது

      (ஆ) அவன் தலையைத் திருப்ப்-இன்-ஆன்

1.5 (அ) மற்றும் 1.6 (அ)வில் உள்ள வினைப்பகுதியின் இறுதி ஒற்றை வல்லொலி கொண்டதாக உள்ளது. அதேவேளை,  1.5 (ஆ) மற்றும் 1.6 ()வில் உள்ள வினைப்பகுதியின் இறுதி இரட்டை வல்லொலி கொண்டதாக உள்ளது. 1.6 (அ)வில் இறுதியில் நிற்கும் ஒற்றை வல்லொலிக்கு முன்னர் அதன் இன மூக்கொலி12 இடம்பெற்றுள்ளது. இந்நிலை 1.5 (அ)வில் இல்லை. இவ்வாறு, இப்பிரிவில் அமைந்துள்ள இணைவினைகளில் ஒற்றை/இரட்டை வல்லொலிகளின் வேறுபாடு வினைப்பகுதியின் இறுதியில் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த வினைப்பகுதிகளுடன் வந்து இணையும்  ஒட்டின் தொடக்கத்தில் எந்த மாற்றமும் இராது. அஃதாவது, இப்பிரிவில் உள்ள இணைவினைகளில் ஒற்றை வல்லொலி கொண்ட வினைப்பகுதியும் இரட்டை வல்லொலி கொண்ட வினைப்பகுதியும் ஒரே விதமான கால இடைநிலைகளையே(இறந்த காலத்திற்கு -இன்; நிகழ்காலத்திற்கு -கிற்; எதிர்காலத்திற்கு -ப்'இன் மாற்றொலியான -வ்) வேறுபாடின்றி ஏற்கும்.  இறந்த கால இடைநிலையாக -இன்- வருவது இப்பிரிவு இணைவினைகளின் தனிப்பட்ட சிறப்புப் பண்பாக உள்ளது.

          இப்பிரிவில் உள்ள இணைவினைகள்(வினைப்பகுதியின் இறுதியில் ஒற்றை/இரட்டை வல்லொலி கொண்டிருப்பவை) உருபனமைப்பின் மூலமாகப் பகுக்கக்கூடியவனாக உள்ளன.  இவை யாவும் குற்றியலுகர13 ஈற்றைக் கொண்டுள்ளன.

          இதுவரை இணை வினைகளின் இரண்டு பிரிவுகள் விளக்கப்பட்டன. (இணை வினைகளின் மூன்றாவது பிரிவு அடுத்த பகுதியில் விளக்கப்படும்). முதற்பிரிவில் உள்ள இணை வினைகளின் வேறுபாடு (ஒற்றை/இரட்டை வல்லொலி) ஒட்டின் தொடக்கத்தில் காணப்படுகிறது. இரண்டாம் பிரிவில் இந்த வேறுபாடு வினைப்பகுதியின் இறுதியில் காணப்படுகிறது. முதற்பிரிவில் இடம்பெறும் இன மூக்கொலியின் வரவு எல்லா இடங்களிலும் காணக்கூடியதாக இல்லை. முன்னர்க் குறிப்பிட்டது போன்று வினைகள் இறந்த காலத்தில் வரும்போது மட்டுமே அது இடம்பெறுகிறது(T.P. Meenakshisundaran, 1965). ஆயின், ஒட்டின் தொடக்கத்தில் அமையும் ஒற்றை/இரட்டை வல்லொலி வேறுபாடு அப்பிரிவின் எல்லா வினைகளிலும் காணப்படுகிறது.

          இரண்டாம் பிரிவில்(குற்றியலுகர ஈற்று வினைப்பகுதிகள்) அமையும் இணைவினைகளில் காணப்படும் இனமூக்கொலி அப்பிரிவு வினைகளின் எல்லா வடிவங்களிலும் காணப்படுகிறது. அட்டவணை 2'ஐக் காண்க.

          முதற்பிரிவில் ஒட்டுகளில் காணப்படும் ஒற்றை/இரட்டை வல்லொலி வேறுபாடு திரிபு நிலையிலும்(Inflection) இரண்டாம் பிரிவில் வினைப்பகுதியின் இறுதியில் காணப்படும் ஒற்றை/இரட்டை வல்லொலி வேறுபாடு ஆக்கநிலையிலும்(Derivation) நிகழ்கின்றன என்பது இங்குக் குறிப்பிடத்தகுந்தது. முன்னர்க் குறிப்பிட்டது போன்று இவற்றில் இடம்பெறும் இனமூக்கொலி வருகை என்பது பிற்கால வளர்ச்சியாகக் கருதத்தகுந்தது.14

அட்டவணை 1

வினைப்பகுதி: கலை

வகை

முற்றுவினை

(பலர்பால்)

பெயரெச்சம்

(செய்த வாய்பாடு)

வினையெச்சம்

(செய்து வாய்பாடு)

வினையெச்சம்

(செய

வாய்பாடு)

தொழிர்பெயர்

காரண வினை

I

கலைந்தார்கள் (இறப்பு)

கலைந்த

(இறப்பு)

கலைந்து

(இறப்பு)

கலைய

கலையல்

கலைவு

கலைவி

I

கலைகிறார்கள் (நிகழ்வு)

கலைகிற

(நிகழ்வு)

I

கலைவார்கள் (எதிர்வு)

கலையும்

(எதிர்வு)

II

கலைத்தார்கள் (இறப்பு)

கலைத்த

(இறப்பு)

கலைத்து (இறப்பு)

கலைக்க

கலைக்கல்

கலைத்தல்

கலைப்பு

கலைவு

கலைப்பி

II

கலைக்கிறார்கள் (நிகழ்வு)

கலைக்கிற (நிகழ்வு)

II

கலைப்பார்கள் (எதிர்வு)

கலைக்கும் (எதிர்வு)

 

அட்டவணை 2

வினைப்பகுதி: திரும்பு

வகை

முற்றுவினை

(ஆண்பால்)

பெயரெச்சம்

(செய்த வாய்பாடு)

வினையெச்சம்

(செய்து வாய்பாடு)

வினையெச்சம்

(செய

வாய்பாடு)

தொழிர்பெயர்

காரண வினை

I

திரும்பினான் (இறப்பு)

திரும்பின

(இறப்பு)

திரும்பி

(இறப்பு)

திரும்ப

திரும்பல்

திரும்புதல்

திரும்புகை

திரும்புவி

I

திரும்புகிறான் (நிகழ்வு)

திரும்புகிற

(நிகழ்வு)

I

திரும்புவான் (எதிர்வு)

திரும்பும்

(எதிர்வு)

II

திருப்பினான் (இறப்பு)

திருப்பிய

(இறப்பு)

திருப்பி (இறப்பு)

திருப்ப

திருப்பல்

திருப்புதல்

திருப்புகை

(திருப்பு)

(திருப்பம்)

திருப்புவி

II

திருப்புகிறான் (நிகழ்வு)

திருப்புகிற (நிகழ்வு)

II

திருப்புவான் (எதிர்வு)

திருப்பும் (எதிர்வு)

 

          இணைவினைகளில் மூன்றாவதாக ஒரு பிரிவும் உள்ளது என்று முன்னர்க் குறிப்பிடப்பட்டது. அப்பிரிவில் உள்ள வினைமுற்றுகளில் ஒற்றை வல்லொலி ஒட்டின் தொடக்கத்திலும் இரட்டை வல்லொலி வினைப்பகுதியின் இறுதியிலும் காணப்படும். பின்வரும் தொடர்களை நோக்குக.

          1.7 (அ) படை போருக்குச் செல்-கிற்-அது

                (ஆ) படை போருக்குச் சென்றது15

          1.8 (அ) அரசன் படையைச் செலுத்து-கிற்-ஆன்

                (ஆ) அரசன் படையைச் செலுத்து-இன்-ஆன்

1.7 (அ) மற்றும் (ஆ)'வில் உள்ள வினைமுற்றுகளில் ஒற்றை வல்லொலி காலங்காட்டும் ஒட்டின் தொடக்கத்தில் இருப்பதும் 1.8 (அ) மற்றும் (ஆ)'வில் இரட்டை வல்லொலி வினைப்பகுதியின் இறுதியில் இருப்பதும் காணத்தக்கன. மேலும், 1.8 (அ) மற்றும் (ஆ)'வில் உள்ள வினைமுற்றுகளின் வினைப்பகுதி குற்றியலுகர ஈறுகளாகவும் உள்ளன (இவை கால இடைநிலையாக -இன் என்பதை ஏற்பதைக் கொண்டும் அறியலாம்). இந்த வடிவங்களில் காணப்படும் ஒற்றை/இரட்டை வல்லொலிகளின் வருகை வரலாற்று நிலையில் முதலில் கால இடைநிலைகளின் தொடக்கத்தில் இருந்திருக்கக்கூடும் என்று எண்ணவேண்டியுள்ளது(முதற்பிரிவில் அடங்கும் இணைவினைகளைப் போன்று). பின்னர், வினைப்பகுதியின் இறுதியில் இரட்டை வல்லொலி வருமாறு மொழிமாற்றம் நேர்ந்துள்ளது எனக் கருதலாம். பின்வரும் தொடர்களைக் காண்க.

          1.9 (அ) புலி வீழ்16-ந்த்-அது

                (ஆ) அவன் புலியை வீழ்-த்த்-ஆன்

                (இ) அவன் புலியை வீழ்த்த்-இன்-ஆன்

1.9 (அ) மற்றும் (ஆ)'வில் உள்ள வினைவடிவங்கள் பழந்தமிழிலும் 1.9 (அ) மற்றும் (இ)'யில் உள்ள வினைவடிவங்கள் தற்கால எழுத்துத் தமிழிலும் 1.9 (அ) முதல் (இ) வரையிலான வினைவடிவங்கள் தற்கால இலக்கியத் தமிழிலும் காணப்படுகின்றன. எனவே, தற்காலத் தமிழில் காணப்படும் செலுத்து, புகுத்து(1.10 பார்க்க) போன்ற வினைவடிவங்கள் இடைநிலை வடிவங்களான *செலுத்தான், *புகுத்தான் என்னும் வடிவங்களிலிருந்து பெறப்பட்டவையாக இருக்கலாம்.

          1.10 தில்லி அரசு தமிழ்நாட்டில் இந்தியைப் புகுத்து-கிற்-அது.

இதுவரையில் விளக்கப்பட்ட கருத்துகளைச் சுருக்கிக்கூறின், தமிழ்வினைகளை இரண்டு அடிப்படை வகைகளாகப் பிரிக்கலாம். காலங்காட்டும் ஒட்டின் தொடக்கத்திலோ(பிரிவு I மற்றும் III) வினைப்பகுதியின் இறுதியிலோ(பிரிவு II) ஒற்றை வல்லொலி(இன மூக்கொலியுடன் வரும் ஒற்றை வல்லொலி உட்பட) உடைய வினைகள் முதல்வகையில் அடங்குபவை. காலங்காட்டும் ஒட்டின் தொடக்கத்திலோ(பிரிவு I) வினைப்பகுதியின் இறுதியிலோ(பிரிவு II மற்றும் III) இரட்டை வல்லொலி உடைய வினைகள் இரண்டாம் வகையில் அடங்குபவை.

          இவை அல்லாமல், அட்டவணை 1 மற்றும் 2'இல் இடம்பெறும் மூன்றாம் வகையிலான வினைவடிவங்களும் உள்ளன. அவை சொல்லியல் நிலையில் அமைந்த காரண வினைகள் என வழங்கப்பெறும். அவை -வி-/-(ப்)பி- போன்ற ஒட்டுகளைப் பெற்றுவரும். அவை இரட்டை வல்லொலி கொண்ட கால ஒட்டுகளையே ஏற்கும். சான்றாகக் கீழ்க்காணும் தொடர்கள் அமைகின்றன.

1.11 (அ) போலீசார் கூட்டத்தைக் கலை-வி-த்த்-ஆர்கள்

        (ஆ) அரசாங்கம் போலீசாரைக் கொண்டு17 கூட்டத்தைக் கலை-வி-த்த்-அது.

இந்நூலின் மூன்றாம் இயல் இத்தகைய காரண வினைகளைப் பற்றி விளக்குகிறது.

 

முன்னாய்வுகள்

          இந்த ஒற்றை வல்லொலி மற்றும் இரட்டை வல்லொலி கொண்ட இருவகை வினைகளுக்கு இடையிலான பொருண்மை யாது என்பது இவ்விடத்தில் எழுகின்ற வினாவாகும். தமிழ் இலக்கணிகளுக்கு இந்த வினா எழவில்லை. அவர்கள்18 கால இடைநிலை பற்றிய விளக்கங்களில் -த்-(இறப்பு), -கிறு-(நிகழ்வு), -ப்-(எதிர்வு) என்று ஒற்றை வல்லொலிக்கான சான்றுகளை மட்டுமே காட்டியுள்ளனர். கால இடைநிலைகளில் காணப்படும் இரட்டை வல்லொலிகளைச்(-த்த்-/-க்கிறு-/-ப்ப்-) சான்று காட்டவில்லை. இவ்விருவகையான வினைகளைப் பற்றி அவர்கள் விளக்கவுமில்லை.19 'தமிழ் இலக்கணிகள் எந்தெந்த வினைப்பகுதிகள் எந்தெந்த இடைநிலைகளை ஏற்கும் என்று குறிப்பிடவில்லை' என்னும் இரேனியுஸ்(1834:79) கூற்று இங்குக் கவனத்திற் கொள்ளத்தக்கது. கால இடைநிலைகளையே அவர் இடைநிலைகள் எனச் சுட்டுகிறார்.

          முற்கால ஐரோப்பிய/அமெரிக்கப் பாதிரிமார்கள் மதப் பரப்புரையாளர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பிக்கும் நோக்கில் இந்த இருவகை வினைகளைப் பற்றி விளக்கும் முயற்சியை முதலில் மேற்கொண்டனர். அவர்கள் வல்வினை/மெல்வினை(Pope,1855) என்னும் கலைச்சொற்களையோ செயப்படுபொருள் குன்றிய வினை/குன்றாவினை (Rhenius, 1834; Pope, 1855)என்னும் கலைச்சொற்களையோ பயன்படுத்தினர்.

          முற்காலப் பாதிரிமார்கள் தமிழர் அல்லாதார்க்குத் தமிழ் இலக்கணங்களை எழுதிய காரணத்தால் அவர்கள் அறிந்துவைத்துள்ள இலக்கணக் கூறுகளை அடியொற்றித் தமிழ் இலக்கணங்களை எழுதினர் எனக் கருதலாம். டூபியஸ் போன்றோரும் இக்கருத்தை ஏற்கின்றனர்.20 எனவே, அவர்களுடைய தாய்மொழியின் தாக்கம் இவ்விலக்கணங்களின் விளக்கத்தில் காணப்படுகிறது(Quine,1959).

          வல்வினை/மெல்வினை என்னும் பாகுபாடு தமிழின்21 ஒலியனியலை  முன்வைத்துச் செய்யப்பட்டதாக உள்ளது(காலத்தைக் காட்டும் ஒட்டுகளின் தொடக்கத்தில் ஒற்றை/இரட்டை வல்லொலி தோன்றுதல்). இதன் அடிப்படையில், போப், குற்றியலுகர ஈற்று வினைப்பகுதிகளை(வினைப்பகுதியின் இறுதியில் ஒற்றை/இரட்டை வல்லொலி பெறும் இரண்டு வடிவங்களையும்) இடைவினைகள் என்றே கொண்டார். ஆர்டன்(1891), காலங் காட்டும் ஒட்டுகளில் மட்டும் ஒற்றை/இரட்டை வல்லொலி தோன்றும் அமைப்பினைக் கருத்திற்கொண்டதால் குற்றியலுகர ஈற்று வினைப்பகுதிகளை மெல்வினைகள் என்னும் பகுப்பில் அடக்கினார். அவருக்குப் பின்வந்த அறிஞர்களும் ஆர்டனின்(1891) பகுப்பையே பின்பற்றினர்.

          ஒலியனியல் வேறுபாட்டை(ஒற்றை/இரட்டை வல்லொலி வருகை) உணர்த்துவதற்கு மட்டும் வல்வினை/மெல்வினைப் பாகுபாட்டைப் பயன்படுத்தியிருப்பின் எந்தச் சிக்கலும் தோன்றியிராது.22 ஆனால், அக்கால அறிஞர்கள் வல்வினை/மெல்வினைப் பாகுபாட்டைச் செயப்படுபொருள் குன்றிய வினை/குன்றா வினை என்னும் பாகுபாட்டின்மீது ஏற்றிப் பிழையான விளக்கங்கள் அளித்தனர். போப், மெல்வினைகள் பெரும்பாலும் செயப்படுபொருள் குன்றிய வினைகள் என்றும் வல்வினைகள் பெரும்பாலும் செயப்படுபொருள் குன்றா வினைகள் என்றும் விளக்கினார்(1855:45-46). மேலும், அவர் இடைவினைகள் (குற்றியலுகர ஈற்று வினைகள்) செயப்படுபொருள் குன்றிய வினைகளையும் குன்றா வினைகளையும் அடக்கியுள்ளன என்று கூறினார். இரேனியுஸ், 'பொதுவாக 'கிறு' இடைநிலையை ஏற்பவை செயப்படுபொருள் குன்றிய வினைகள் என்றும் 'க்கிறு' இடைநிலையை ஏற்பவை செயப்படுப்பொருள் குன்றா வினைகள் என்றும் கருதலாம்' என்று குறிப்பிட்டுள்ளார்(1834:79).23 இந்தக் கருத்துகளின்வழி அக்கால மொழியறிஞர்கள் ஒற்றை/இரட்டை வல்லொலிப் பாகுபாட்டு வினைகளைச் செயப்படுபொருள் குன்றிய வினை/குன்றா வினைகளுடன் பொருத்திப் பார்த்துள்ளனர் என்பதை அறியலாம்.

          எந்த வினைகள் எந்த ஒட்டுகளை ஏற்கும் என்னும் ஆர்டனின் விளக்கம் இதனைச் சரியாகக் கணித்தாலும் அது அவ்வினைகளைப் பொதுமைப்படுத்தத் தவறிவிட்டது. குற்றியலுகர ஈற்று வினைகளை (வினைப்பகுதியில் ஒற்றை/இரட்டை வல்லொலி பெற்ற இரண்டு வடிவங்களையும்) அவை ஒரே வகையான கால ஒட்டினை ஏற்பதால் அவற்றை மெல்வினைகள் என்னும் பகுப்பில் அடக்கினார்.  அதனால், வினைப்பகுதியில் இரட்டை வல்லொலி கொண்ட குற்றியலுகர ஈற்று வினைகளைக் காரண வினைகள் என்று குறிக்கவேண்டியதாயிற்று(1891:237). எனவே, மேற்கண்ட பிரிவு III'இல் அடங்கும்(வினைப்பகுதியில் இரட்டை வல்லொலி கொண்டவை) வினைகளை ஆர்டன்(1891:237) காரண வினைகள் என்று குறிப்பிட்டார்.  ஆனால், அவரே ஒரே வினையடியிலிருந்து தோன்றும் செயப்படுபொருள் குன்றிய மற்றும் குன்றா வினைகளில் செயப்படுபொருள் குன்றிய வினைவடிவங்களே மெல்வினை வடிவங்களாகக் கொள்ளத்தகுந்தவை என்றும் அவை 'வேன்' என்னும் எதிர்கால இடைநிலையை ஏற்கும் என்றும் வல்வினை வடிவங்கள் செயப்படுபொருள் குன்றா வினைகளாகப் 'ப்பேன்' என்னும் எதிர்கால இடைநிலையை ஏற்கும் என்றும் கூறியுள்ளார். 24

செயப்படுபொருள்

          ஒற்றை/இரட்டை வல்லொலி இணைவினைகளைச் செயப்படுபொருள் குன்றிய வினை/குன்றா வினை வகைகளுடன் முற்கால அறிஞர்கள்(ஆர்டனுக்கு முன்புவரையிலான)25 பொருத்திப் பார்த்துள்ளனர் என்பது முன்னர் விளக்கப்பட்டது. எனினும் இந்த வல்வினை மற்றும் மெல்வினை வேறுபாடு செயப்படுபொருள் ஏற்பதை அடிப்படையாகக் கொண்டு அமைகிறதா என்ற கேள்வி எழுகிறது. சொல்லியல் நிலையில் அமையும் இணை வினைகளில் மெல்வினைகள்(ஒற்றை வல்லொலி கொண்டவை) செயப்படுபொருள் குன்றிய வினைகளாக அமைவதும் வல்வினைகள்(இரட்டை வல்லொலி கொண்டவை) செயப்படுபொருள் குன்றா வினைகளாக அமைவதும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக உள்ளன.26 கீழ்க்காணும் தொடர்களை நோக்குக.

          1.12 அவள் ஊரிலிருந்து நீங்க்-இன்-ஆள்

          1.13 நாடு இரண்டாகப் பிரி-ந்த்-அது

மேற்கண்ட ஒற்றை வல்லொலி வினைகள் செயப்படுபொருளை ஏற்கவில்லை. இரட்டை வல்லொலி வினைகள் செயப்படுபொருளை எப்போதும் ஏற்றே வருகின்றன. கீழ்க்காணும் தொடர்களை நோக்குக.

          1.14 இந்திரா கருணாநிதி அமைச்சர் அவையை நீக்க்-இன்-ஆள்

          1.15 முஜிபுர் ரகுமான் பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசத்தைப் பிரி-த்த்-ஆர்

இவ்விரு வினைகளும் இவ்வாறு தொடர்களை உருவாக்கினாலும், ஒற்றை வல்லொலி பெறும் நீங்கு மற்றும் பிரி போன்ற வினைகள் செயப்படுபொருளை ஏற்றும் வரும்.27 கீழ்க்காணும் தொடர்களை நோக்குக.

          1.16 அவள் ஊரை நீங்க்-இன்-ஆள்

          1.17 அவன் மனைவியைப் பிரி-ந்த்-ஆன்28

மேலும், வணங்கு(வணக்கு என்பதுடன் இணைவினையாக வரும்), கட(கடத்து என்பதுடன் இணைவினையாக வரும்) போன்ற வினைகள் எப்போதும் செயப்படுபொருளை ஏற்கும் வினைகளாகவே உள்ளன.

          1.18 அவள் கடவுளை வணங்க்-இன்-ஆள்

          1.19 அவன் எல்லையைக் கட-ந்த்-ஆன்

எனவே, ஒற்றை வல்லொலி வினைக்கும் இரட்டை வல்லொலி வினைக்கும் இடையிலான வேறுபாட்டைச் செயப்படுபொருளை ஏற்கும் தன்மையைக் கொண்டு விளக்கமுடியாது.

செயப்படுபொருள் ஏற்காமை/ஏற்றல் என்பதைக் கொண்டு ஒற்றை/இரட்டை வல்லொலி வினை வேறுபாட்டினை விளக்கமுடியாது என்பதை வேறொரு வழியிலும் நிறுவலாம். ஒற்றை வல்லொலி வினைகளுள் சில செயப்படுபொருள் ஏற்கும் என்பது முற்பகுதியில் விளக்கப்பட்டது. அவ்வாறு செயப்படுபொருள் ஏற்கும் ஒற்றை வல்லொலிகளிலிருந்து இரட்டை வல்லொலி வினைகள் உருவாகும் நிலையில் அவையும் செயப்படுபொருளை ஏற்கின்றன. ஒரு வினையின் ஒற்றை வல்லொலி வடிவமும் செயப்படுபொருளை ஏற்கிறது; அதே வினையிலிருந்து உருவாகும் இரட்டை வல்லொலி வடிவமும் செயப்படுபொருளை ஏற்கிறது. கீழ்காணும் தொடர்களை நோக்குக.

          1.20 (அ) குழந்தை தாயைப் பிரி-ந்த்-அது29

                   (ஆ) அவன் குழந்தையைத் தாயிடமிருந்து பிரி-த்த்-ஆன்

          1.21 (அ) மாடு30 புல்லை மேய்-ந்த்-அது

                  (ஆ) அவன் மாட்டை மேய்-த்த்-ஆன்

          1.22 (அ) வண்டி பாதையை விலக்-இன்-அது

                  (ஆ) அவன் வண்டியைப் பாதையிலிருந்து விலக்க்-இன்-ஆன்

          1.23 (அ) கூட்டம் அவளை நெருங்க்-இன்-அது

                  (ஆ) கூட்டம் அவளை நெருக்க்-இன்-அது

1.20 முதல் 1.23 வரையிலான (அ) தொடர்களில் உள்ள ஒற்றை வல்லொலி வினைகள் அனைத்தும் செயப்படுபொருள் குன்றா வினைகளாக வந்துள்ளன. அதே போன்று அவ்வினைகளிலிருந்து ஆக்கம் பெற்ற (ஆ) தொடர்களில் காணப்படும் இரட்டை வல்லொலி வினைகளும்(கால ஒட்டிலும் வினைப்பகுதியின் இறுதியிலும் இரட்டை வல்லொலி உடையவை) செயப்படுபொருள் குன்றா வினைகளாக உள்ளன. இந்நிலை, செயப்படுபொருளை ஏற்றல் என்னும் பண்பைக் கொண்டு ஒற்றை வல்லொலி மற்றும் இரட்டை வல்லொலி வினைகளுக்கான வேறுபாட்டை விளக்கமுடியாது என்பதை உறுதிசெய்கிறது.

          முதல்வகை வினைகளைத்(ஒற்றை வல்லொலி) தன்வினைகள் என்றும் அவை செயப்படுபொருள் ஏற்றும் ஏற்காமலும் வரும் நிலையைக் கொண்டு அவற்றைச் செயப்படுபொருள் குன்றிய வினைகள்/குன்றா வினைகளாகக் கொள்ளவேண்டும் என்றும் கூறும் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரியின்(1933) கருத்து இங்கு நினைவுகூரத் தக்கது. இந்நிலையில், தன்வினைகள் யாவும் செயப்படுபொருள் குன்றிய வினைகள் என்னும் கால்டுவெல்லின் கருத்துப் பொருத்தமற்றதாகிறது(1856:450).

தன்னுணர்வுடன் செய்தல்(Volition)

          கந்தையா எழுதிய நூலின்(1967) இரண்டாது இயலில் முதன்முறையாக இணைவினைகளின் வேறுபாடு செயப்படுபொருள் குன்றிய வினை/குன்றா வினையோடு தொடர்புடையது என்னும் கருத்து மறுக்கப்பட்டுள்ளது. இந்த இயலின் திருந்திய வடிவமாக அவர் எழுதிய(1968) மற்றொரு நூல் அமைகிறது. அவர் இந்த இணை வினைகளுக்கு இடையிலான உறவு தன்னுணர்வுடன் செய்தல் என்னும் வேறுபாட்டில் அடங்குவதாகக் குறிப்பிடுகிறார். இணை வினைகளின் ஒரு பிரிவினை எழுவாயின் உணர்வின்றி நிகழ்தல் என்பதன்கண்ணும் மற்றொரு பிரிவினை தன்னுணர்வுடன் எழுவாய் ஒரு தொழிலைச் செய்தல் என்பதன்கண்ணும் அவர் அடக்குகிறார்(1968:221; 1967:92). அவர் தன்னுணர்வுடன் செய்தல் என்பதை விளக்காத நிலையில் அதன் இயல்பான பொருளே இங்குக் கொள்ளப்படுகிறது. ஒன்றைப் பற்றித் தெளிவாகச் சிந்தித்துணர்ந்து அதன் பின்னர் அந்தச் செயலைச் செய்தல் என்பது அதன் பொருளாகும்.(An act of willing of resolving; a decision or choice made after due consideration or deliberation- The Shorter Oxford Dictionary, third edition, reprinted 1965). இதன் அடிப்படையில் பார்த்தால், தன்னுணர்வுடன் செய்தல் என்னும் பகுப்பு இந்த இணை வினைகளின் வேறுபாட்டை உணர்த்துவதாக இல்லை. ஏனெனில், கந்தையா குறிப்பிடும் தன்னுணர்வின்றி நிகழ்தல் என்னும் பிரிவில் அடங்கும் வினைவடிவங்கள்(ஒற்றை வல்லொலி கொண்ட வினைகள்) எழுவாயின் கருத்தின்றி இயல்பாக நிகழ்வனவாகவும் எழுவாயால் தன்னுணர்வுடன் செய்யப்படுவனவாகவும் உள்ளன. கீழ்க்காணும் தொடர்களை நோக்குக.

          1.24 பிள்ளை சோறு உண்-ட்-ஆன்

          1.25 அவள் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்-ந்த்-ஆள்

சோற்றை உண்ணல்(1.24) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்தல்(1.25) ஆகிய இரு வினைகளும் எழுவாயின் கருத்தின்றி இயல்பாக நிகழ்ந்தன என்று கொள்வதற்கில்லை. அதே போன்று (1.23 ஆ)'வில் உள்ள நெருக்குதல் என்னும் வினை எழுவாயால் தன்னுணர்வுடன் செய்யப்பட்டது என்றும் கொள்வதற்கில்லை. அத்தொடரின் எழுவாயாக அமைந்த கூட்டம் தன் கருத்தின்றியே நெருக்குதல் தொழிலை நிகழ்த்தியிருக்கலாம். எனவே, தன்னுணர்வின்றி நிகழும் வினை வடிவங்களிலிருந்து தன்னுணர்வுடன் நிகழும் வினைவடிவங்கள் பெறப்படுகின்றன என்னும் கருத்து ஏற்புடையதாக இல்லை.

          1.26 அம்மா பிள்ளைக்குச் சோறு ஊட்ட்-இன்-ஆள்

என்னும் தொடரில் தொடர் 1.24'இன் பொருள் உட்பொதிந்துள்ளது. தொடர் 1.24'இல் உள்ள உண் என்னும் வினையைத் தன்னுணர்வுடன் நிகழும் வினையாகக் கொள்ளும் நிலையில், தன்னுணர்வுடன் செய்தல் அடிப்படையிலேயே ஒருவகை வினையிலிருந்து மற்றொரு வகை வினை(உண்>ஊட்டு) வருவிக்கப்படுகிறது என்னும் கந்தையாவின் கருத்துப் பொருந்துமாறில்லை. அதேபோன்று தொடர் 1.23ஆ'வில் உள்ள வினை(நெருக்குதல்) எழுவாயின் கருத்தின்றித் தற்செயலாக நிகழ்ந்த வினையாகவும் இருக்கலாம். இங்கும் தன்னுணர்வுடன் செய்தல் அடிப்படையிலேயே ஒன்றிலிருந்து மற்றொன்று வருவிக்கப்படுகிறது(நெருங்கு>நெருக்கு) என்னும் கருத்துப் பொருந்துமாறில்லை. தொடர் 1.26'இல் தொடுப்புத் தொடரின்(Embedded) எழுவாயான பிள்ளை அம்மாவால் உணவை உண்ணுமாறு செய்யப்பட்டது என்னும் பொருளைத் தரவில்லை. அஃதாவது, ஒரு தாய் பிள்ளைக்கு உணவு பரிமாறி அதைச் சாப்பிடச் சொல்லும் பொருளில் தொடர் 1.26 அமையவில்லை. பிள்ளை தன் தாயிடம் தன்னுணர்வுடன் சோறு ஊட்டுமாறு கேட்கும் நிலையில் இந்தத் தொடர் உருவாகியிருக்கலாம். இந்நிலையில், இத்தொடரை

          1.27 பிள்ளை வேண்ட(வற்புறுத்த) அம்மா அவனுக்குச் சோறு ஊட்டினாள்

என்றும் கூறமுடியும். இங்கு, தொடுப்புத் தொடரில் பிள்ளை தன்னுணர்வுடன் அம்மாவிடம் வேண்ட, வெளித்தொடரின் எழுவாயான அம்மா நிகழ்த்திய ஊட்டுதல் என்னும் வினையும் தன்னுணர்வுடன் செய்ததாக அமைந்துள்ளது. எனவே, தொடுப்புத் தொடரில் உள்ள வினை(உண்ணுதல்) எழுவாயின்(பிள்ளையின்) தன்னுணர்வின்றி நிகழவேண்டும் என்னும் விளக்கம் பொருந்தவில்லை. ஆகையால், ஒற்றை/இரட்டை வல்லொலிகளின் வேறுபாட்டை விளக்கத் தன்னுணர்வுடன் செய்தல் என்னும் கருத்துப் பயன்படவில்லை.

          கந்தையா, தன்னுணர்வுடன் செய்தல் என்னும் வகையில் அடங்கும் ஊட்டு, காட்டு போன்ற வினைகளைக் கொண்ட தொடர்களில் இடம்பெறும் வேற்றுமை உருபிற்கும் இதே பிரிவில் அடங்கும் வேறு வினைகளைக் கொண்ட தொடர்களில் இடம்பெறும் வேற்றுமை உருபிற்கும் இடையிலான வேறுபாட்டைக் காட்டியுள்ளமை இங்குக் குறிப்பிடத்தகுந்தது. ஊட்டு, காட்டு போன்ற வினைகளைக் கொண்ட தொடர்களில் இடம்பெறும் ஒரு பெயர் நான்காம் வேற்றுமையான குவ்வுருபு பெறும் என்றும் சேர்(த்த்), நடத்து போன்ற வினைகளைக் கொண்ட தொடர்களில் இடம்பெறும் ஒரு பெயர் செயப்படுபொருள் வேற்றுமையான ஐ உருபை ஏற்கும் என்றும் அவர் குறித்துள்ளார். அவர், தொடுப்புத் தொடரில் உள்ள வினை செயப்படுபொருள் குன்றிய வினையாக இருந்தால் முதன்மைத் தொடரில்(Matrix Sentence) தொடுப்புத் தொடரின் எழுவாய் இரண்டாம் வேற்றுமை உருபை ஏற்கும் என்றும் தொடுப்புத் தொடரில் உள்ள வினை செயப்படுபொருள் குன்றா வினையாக இருந்தால் முதன்மைத் தொடரில் தொடுப்புத் தொடரின் எழுவாய் நான்காம் வேற்றுமை உருபை ஏற்கும் என்றும் விளக்கியுள்ளார். இந்த இயலில் முன்னரே குறிப்பிட்டதைப் போன்று இணை வினைகளின் முதல் வகையைச் சேர்ந்த வினைகள்(ஒற்றை வல்லொலி பெறுபவை) செயப்படுபொருள் குன்றிய வினைகளாக இருந்தால், அவற்றிலிருந்து வருவிக்கப்படும் இரண்டாம் வகையைச் சேர்ந்த வினைகள்(இரட்டை வல்லொலி பெறுபவை) செயப்படுபொருள் குன்றா வினைகளாக இருக்கும். இதனை,

          1.28 (அ) மாணவனுக்குப் பாடம் விளங்க்-இன்-அது

                  (ஆ) ஆசிரியர் மாணவனுக்குப் பாடத்தை விளக்க்-இன்-ஆர்

          1.29 (அ) கூந்தல் அவிழ்-ந்த்-அது

                  (ஆ) அவள் கூந்தலை அவிழ்-த்த்-ஆள்

என்னும் தொடர்களின்வழி உணரலாம். இத்தொடர்களைச் சான்றாகக் கொண்டு தொடுப்புத் தொடரின் எழுவாய் முதன்மைத்தொடரில் செயப்படுபொருள் வேற்றுமையை ஏற்கிறது எனக் கூறலாம். ஆனால், ஒற்றை வல்லொலி வினைகளில் செயப்படுபொருள் குன்றா வினைகளின் எழுவாய்(கந்தையா குறிப்பிடும் தன்னுணர்வின்றி நிகழும்-செயப்படுபொருள் ஏற்கும் வினைகள்) முதன்மைத்தொடரில் எல்லா நிலையிலும் நான்காம் வேற்றுமை ஏற்பதில்லை. இதனை 1.20 முதல் 1.23 அமைப்பின் (அ) வகைத் தொடர்களில் காணலாம். அவற்றில் செயப்படுபொருள் குன்றா ஒற்றை வல்லொலி வினைகளின் எழுவாய் அவ்வினைகளிலிருந்து தோன்றும் இரட்டை வல்லொலி வினைகள் கொண்ட தொடர்களில் நான்காம் வேற்றுமை உருபை ஏற்காமல் இரண்டாம் வேற்றுமை உருபையே ஏற்கின்றன. எனவே, வேற்றுமை ஏற்பதில் காணப்படும் மாறுபாடு இவ்வினைகளை விளக்குவதற்குப் பயன்படவில்லை என்பது தெளிவாகிறது.

          மேற்கண்ட தொடர் 1.28 அமைப்பில் தன்னுணர்வுடன் செய்தல் என்னும் பிரிவில் அடங்கும் வினையைக்(விளக்கு) கொண்ட (ஆ) தொடரில் உள்ள பெயர் நான்காம் வேற்றுமை ஏற்று வருவது(மாணவனுக்கு) போன்றே தன்னுணர்வின்றி நிகழ்தல் என்னும் பிரிவில் அடங்கும் வினையைக் கொண்ட (அ) தொடரில் உள்ள பெயரும் நான்காம் வேற்றுமை ஏற்று வந்துள்ளது. எனவே, நான்காம் வேற்றுமை உருபை ஏற்றல் தன்னுணர்வுடன் செய்தல் பிரிவு வினைகளுக்கு உரியது என்னும் விளக்கமும் பொருந்தாது. இந்த நிலையை வினைகளின் பொருண்மையோடு தொடர்புடையதாகவே கொள்ளவேண்டும். எனவே, ஒற்றை மற்றும் இரட்டை வல்லொலி வினைகளை விளக்கத் தன்னுணர்வின்றி நிகழ்தல்-தன்னுணர்வுடன் நிகழ்தல் என்னும் வேறுபாடு பொருந்திவரவில்லை.

இருநிலை வினைத் தன்மை

          'தமிழில் காணப்படும் இந்த இணை வினைகள் செயப்படுபொருள் குன்றிய வினைகள், குன்றா வினைகள் என்னும் பாகுபாட்டில் அடங்கா; ஆனால், இவற்றை இருநிலை வினை,அல்-இருநிலை வினைகளின் கீழ் அடக்கலாம்' என்று தெ.பொ.மீனாட்சிசுந்தரன்(1965:11) குறிப்பிட்டுள்ளார். அவர் ஒற்றை வல்லொலி வினைகளை அல்-இருநிலை வினைகளின் கீழும் இரட்டை வல்லொலி வினைகளை இருநிலை வினைகளின் கீழும் பகுக்கிறார். ஆனால், இருநிலை வினைகள் செயப்படுபொருள் குன்றிய வினையின் எழுவாய்க்கும் செயப்படுபொருள் குன்றா வினையின் செயப்படுபொருளுக்கும் இடையிலான தொடரியல் உறவை அடிப்படையாகக் கொண்ட பிரிவாகும்(Lyons, 1968: 342). இந்தப் பாகுபாடு தமிழின் இணை வினைகளை விளக்கப் பயன்படவில்லை. ஏனெனில், இந்த இணைவினைகளின் வேறுபாடு பெயர்கள் ஏற்கும் வேற்றுமையைப் பொறுத்து அமைந்ததன்று; மாறாக, அது வினைகளின் வடிவங்களில் அமைந்துள்ளது. மேலும், இருநிலை வினைகளின் விளக்கத்தின்படி ஒற்றை வல்லொலி வினைகள் செயப்படுபொருள் குன்றிய வினைகளாக இருக்கவேண்டும். ஆனால், ஒற்றை வல்லொலி வினைகளில் செயப்படுபொருள் குன்றா வினைகளும் உள்ளன. எனவே, இருநிலை வினைகள், அல்-இருநிலை வினைகள் என்னும் பாகுபாடு தமிழில் காணப்படும் இணை வினைகளின் வேறுபாட்டை உணர்த்தவில்லை எனலாம்.

இயங்கு வினை/இயக்கு வினை

          மொழியை ஓர் அமைப்பாகக் கொண்டு அணுகும் நிலையில், தமிழில் காணப்படும் இந்த இணை வினைகளை இயங்கு வினைகள் மற்றும் இயக்கு வினைகள் என்று வேறுபடுத்திக் குறிப்பிடலாம்(Zide,1971). ஒரு வினையடியால் சுட்டப்படும் தொழிலுக்கு அதன் எழுவாய் உள்ளாகுமானால் அவ்வினைச் சொல்லை இயங்கு வினை எனச் சுட்டலாம்.

          1.30 அவள் என் மடியில் உட்கார்-ந்த்-ஆள்

          1.31 அவன் கிணற்றில் இறங்க்-இன்-ஆன்

என்னும் தொடர்களில் உள்ள வினையடிகளில் சுட்டப்படும் தொழிலுக்கு எழுவாய் உள்ளாகிறது. எனவே, இவ்வினைகள் இயங்கு வினைகள் எனப்படுகின்றன. இங்கு இயங்கு வினை என்னும் சொல்லாட்சி கலைச்சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இயங்கு வினை என்பது ஒரு வினையின் வினையடியில் சுட்டப்படும் தொழிலை அதன் எழுவாய் செய்யும் வினையாகும்.40 மேற்கண்ட தொடர்களில் (1.30)'இல் உள்ள 'அவள்' என்னும் எழுவாய் அந்தத் தொடரில் உள்ள 'உட்கார்தல்' என்னும் வினையைச் செய்துள்ளது. அதேபோன்று, (1.31)'இல்  உள்ள 'அவன்' என்னும் எழுவாய் அந்தத் தொடரில் உள்ள 'இறங்குதல்' என்னும் வினையைச் செய்துள்ளது. சுருக்கமாக, இயங்கு வினைகள் என்பவை எழுவாயின்கண் நிகழும் வினைகளாகும். ஒற்றை வல்லொலி கொண்ட வினைகள் யாவும் இயங்கு வினைகள் ஆகும். இனி, இவ்வகை வினைகள் இயங்கு வினைகள் என்றே குறிக்கப்படும்.

          இயங்கு வினையின் எழுவாய் வினையடியால் சுட்டப்படும் தொழிலுக்கு உள்ளாகும் எனில் அது பொருண்மையியலில் சுட்டப்படும் 'தொழிலுக்கு உள்ளாகுபவர்(Patient)' என்பதாகக் கருதப்படுமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கான வினை, 'தொழிலுக்கு உள்ளாகுபவர்' என்பதற்கான விளக்கத்தைப் பொறுத்து அமைகிறது. 'தன்னுடைய கருத்தின்றி ஒரு நிகழ்வில் ஈடுபடும் நபர்' என்று 'தொழிலுக்கு உள்ளாகுபவரு'க்கான விளக்கம் தரப்படுகிறது(Sibatani 1976a:271; cf. Fillmore, 1968). இந்த விளக்கத்தின் அடிப்படையில் 'தொழிலுக்கு உள்ளாகுபவர்' என்பது இயங்கு வினையின் எழுவாய்க்குப் பொருந்தாது. ஏனெனில், இயங்கு வினையின் எழுவாய் தன்னுடைய கருத்தின்றியும் கருத்துடனும் அந்த வினையைச் செய்வதாக அமையும். கீழ்க்காணும் தொடர்களை நோக்குக.

          1.32 (அ) அவன் கால் வழுக்கிக் கீழே விழு-ந்த்-ஆன்

          1.32  (ஆ) அவன் தூக்கத்தில் கட்டிலிலிருந்து விழு-ந்த்-ஆன்

                   (இ) அவன் வேண்டும் என்றே கீழே/கட்டிலிலிருந்து விழு-ந்த்-ஆன்

மேற்கண்ட தொடர்களில் 1.32(அ) மற்றும் (ஆ)'வில் விழுதல் வினை எழுவாயின் கருத்தின்றியே நிகழ்ந்துள்ளது. 1.32(இ) தொடரில் விழுதல் வினை எழுவாயின் கருத்துடன் நிகழ்ந்துள்ளது. மேலும், சேர், இறங்கு போன்ற வினைகள் எப்போதும் எழுவாயின் கருத்துடனேயே நிகழும்(உயிருள் பொருள்களைக் குறிக்கும்போது). இவற்றுடன் 'வேண்டுமென்றே' என்னும் வினையடையைச் சேர்க்கும்போது எழுவாயின் நோக்கம்/குறிக்கோள் புலப்படும்.

          1.33 கணேசன் வேண்டுமென்றே இந்திரா காங்கிரசில் சேர்-ந்த்-ஆன்

          1.34 ராஜம் வேண்டுமென்றே கங்கையாற்றில் இறங்க்-இன்-ஆள்

மேலும், கீழ்க்காணும் தொடரில் உள்ளது போன்று எழுவாய் தன்கருத்துடன் வினையைச் செய்தல் என்பது மக்களின் உலகியல் பார்வையுடன் தொடர்புடையதாக உள்ளது.

          1.35 இத்தனை பேர் இருக்கும்போது இந்தத் தேங்காய் வேண்டுமென்றே என்                    தலையில் விழு-கிற்-அது

என்னும் தொடரில் பேசுபவரால் தேங்காய் என்னும் பொருள் உயிருள் பொருளாகக் கருதுப்படுகிறது.

அதேபோன்று, எழுவாயின் கருத்தின்றி நிகழும் வினையைக் கருத்துடன் நிகழ்ந்த வினையாகவும் கூறமுடியும்.

          1.36 அவன் குடித்துவிட்டு வேண்டுமென்றே தெருவில் உருள்- கிற்-ஆன்

          1.37 அவள் இறைவன் அடி சேர்-ந்த்-ஆள்41

இதேபோன்று, ஓரிடத்தில் ஒருவரால் கூறப்படும் நகைச்சுவைகள் சிரிப்பை வரவழைக்காத நிலையில் அவ்விடத்தில் இருக்கும் மற்றொருவரின்(முருகன்) சிரிப்பினைக் கீழ்க்காணுமாறு சுட்டலாம்.

          1.38 முருகன் வேண்டுமென்றே சிரி-க்கிற்-ஆன்

எனவே, தமிழின் இணைவினைகளின் வேறுபாட்டிற்குத் தன்னுணர்வுடன் செய்தல்/தன்னுணர்வின்றிச் செய்தல் மற்றும் இயல்பாக நிகழ்தல்/வேண்டுமென்றே நிகழ்தல் என்னும் பாகுபாடுகள் பொருந்துவனவாக இல்லை. இயங்கு வினைக்கும் அதன் எழுவாய்க்கும் இடையிலான உறவை நோக்கும்போது, எழுவாயின் கருத்தின்றியோ எழுவாயின் கருத்துடனோ அவ்வினை நிகழ்வதாக இருக்கலாம். எனவே, பொருண்மையியல் சுட்டும் 'செயலுக்கு உள்ளாகுபவர்' என்னும் பொருளில் எழுவாயைக் கொள்ள இயலாது. இயங்கு வினையில் வினையடியால் சுட்டப்படும் தொழிலுக்கு அதன் எழுவாய் உள்ளாகிறது என்றே கொள்ளவேண்டும்.

          இயக்கு வினை என்பதற்கு இயங்கு வினையின் எதிர்முகமாக, வினையடியால் சுட்டப்படும் தொழிலுக்கு உள்ளாகாத எழுவாயைக் கொண்ட வினை என்று விளக்கலாம். கீழ்க்காணும் தொடர்களில் இந்திரா(1.39) மற்றும் ஐயர்(1.40) என்னும் எழுவாய்ப் பெயர்கள் முறையே சிறைப்படு மற்றும் உடை ஆகிய வினைகளுக்கு உள்ளாவதில்லை.

          1.39 இந்திரா தி.மு.கழகத்தவரைச் சிறைப்படுத்த்-இன்-ஆள்

          1.40 ஐயர் தேங்காயை உடைத்தார்

மேற்காணும் தொடர்களில் உள்ள வினைகள் எழுவாய் நிகழ்த்தும் வினைகளாக உள்ளன. சுருக்கமாக, இயக்கு வினைகள் என்பவற்றின் எழுவாய் வேறொரு பொருளின்மீது வினையை நிகழ்த்தும்(எழுவாய் தன்மீதே வினையை நிகழ்த்திக்கொள்ளும் இடங்கள் நீங்கலாக, Shibatani,1973b). இந்த விளக்கத்தின் அடிப்படையில், இரட்டை வல்லொலி கொண்ட வினை வடிவங்கள் யாவும் இயக்கு வினைகளாகத் திகழ்கின்றன. எனவே, இனி இவ்வினைகள் இயக்கு வினைகள் என்றே வழங்கப்படும்.

          இந்த விளக்கத்தில், இயங்கு வினை-இயக்கு வினைப் பாகுபாட்டிற்கு எழுவாயின் பங்கு முக்கியமானதாக அமைகிறது. இயக்கு வினைகளின் எழுவாய் வேறொரு பொருளின்மீது அவ்வினையை நிகழ்த்தும் என்பது மேலே குறிப்பிடப்பட்டது. முற்பகுதியில் விளக்கியது போன்று இயங்கு வினைகளில் சில வினைகள் செயப்படுபொருளை ஏற்கும் வினைகளாகவும் இருக்கும். ஆயினும், இயங்கு வினைக்கான விளக்கத்தில் செயப்படுபொருளின் நிலை என்ன என்பது அத்துனை முக்கியமானது அன்று. மாறாக, எழுவாயின் நிலை என்ன என்பதே கவனத்திற் கொள்ளவேண்டியது.

          இங்கு, இயங்கு வினையில் வரும் செயப்படுபொருளுக்கும் இயக்கு வினையில் வரும் செயப்படுபொருளுக்கும் இடையிலான வேறுபாடு யாது என்னும் கேள்வி எழுகிறது. தொடரியல் நிலையில் இரண்டு தொடர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் காணப்படவில்லை. இரண்டு தொடர்களும் செயப்பாட்டுவினைத் தொடர்களாக மாறும் தன்மையன. மேலும், இரண்டு தொடர்களிலிருந்தும் பெயரெச்சத் தொடர்களை உருவாக்கலாம். இயங்கு வினைகள் சிலவற்றில் வரும் செயப்படுபொருள்களின் மீது எந்த வினையும் நிகழாத வகையிலும் தொடர்கள் காணப்படுவதைக் கொண்டு இயங்கு வினைச் செயப்படுபொருளுக்கும் இயக்கு வினைச் செயப்படுபொருளுக்கும் இடையில் வேறுபாடு உண்டு எனச் சிலர் வாதிடலாம். சான்றாக,

          1.41 காந்தி எல்லையை நீங்க்-இன்-ஆர்

          1.42 நேரு கடலைக் கட-ந்த்-ஆர்

          1.43 எம்.ஜி.ஆர். இந்திராவை வணங்கு-கிற்-ஆர்

என்னும் தொடர்களில் உள்ள வினைகள் இரண்டாம் வேற்றுமை ஏற்ற பொருள்களின் மீது எந்தத் தொழிலையும் நிகழ்த்துவதில்லை. உண்மையில், இவை செயப்படுபொருள் என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் குறுகிய பொருளில் அடங்கவில்லை(Jespersen,1924:158). அதாவது, இத்தொடர்களில் செயப்படுபொருளாக வரும் பெயர்கள் வினையின் தாக்கத்திற்கு ஆளாவதில்லை. இது, செயப்படுபொருள் என்னும் சொல்லுக்கான பொருளில் உள்ள சிக்கலாகும். வினையின் பொருளைக் கொண்டு செயப்படுபொருள் பல்வேறு இலக்கணப் பொருள்களில் தொடர்களில் இடம்பெறுகிறது. கீழ்க்காணும் தொடர்களில் உள்ள செயப்படுபொருள்கள் வினையின் தொழிலுக்கு உள்ளாகவில்லை என்று கூறவியலாது.

          1.44 முரடன் அந்தப் பெண்ணை நெருங்கு-இன்-ஆன்

          1.45 ராமன் சீதையைப் பிரி-ந்த்-ஆன்43

ஆனால், இந்த இயங்கு வினைகளில் உள்ள எழுவாய் செயலுக்கு உள்ளாகிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை(1.44 மற்றும் 1.45). இத்தொடர்களில் உள்ள செயப்படுபொருளும் வினைக்கு உள்ளாகிறது என்பது வினையின் பொருளால் விளைந்ததாகும். எனவே, இயங்கு வினை-இயக்கு வினை என்ற பாகுபாடு செயப்படுபொருள், வினைக்கு உள்ளாகிறதா இல்லையா என்பதைக் கருதியதன்று; இப்பாகுபாடு வினையின் எழுவாய் செயலுக்கு உள்ளாகிறதா இல்லையா என்பதை மட்டுமே கருதியதாகும். கீழ்க்காணும் தொடர்களை நோக்குக.

          1.46 நடராசன் சோற்றை உண்-ட்-ஆன்

          1.47 குழந்தை காலை உதை-கிற்-அது

மேற்கண்ட தொடர்களில் சோறு உண்ணல் மற்றும் காலை உதைதல் ஆகிய தொழில்களுக்கு முறையே நடராசன் மற்றும் குழந்தை ஆகியோர் உள்ளாகின்றனர். எனவே, இவ்வினைகள் இயங்கு வினைகளாகும். இத்தொடர்களில் சோறு(1.46) மற்றும் கால்(1.47) ஆகியவை செயப்படுபொருளாக வந்து வினையின் தாக்கத்திற்கு ஆளானாலும் இயங்கு வினைகளின் விளக்கம் எழுவாயைப் பொறுத்தே அமைந்ததாகும்.

மேற்கண்ட இயங்கு வினைகளுடன் இணையாக வரும் இயக்கு வினைகளில் அமைந்த தொடர்களை நோக்குக.

          1.48 அம்மா நடராசனுக்குச் சோற்றை ஊட்டு-இன்-ஆள்

          1.49 குழந்தை என்னை உதை-க்கிற்-அது

இத்தொடர்களில் ஊட்டுதல் மற்றும் உதைத்தல் ஆகிய தொழில்கள் எழுவாயால் முறையே அம்மா மற்றும் குழந்தையால் நிகழ்த்தப்படுகின்றன. அதாவது, இத்தொடர்களில் அம்மா உண்ணுதல் தொழிலுக்கு உள்ளாகவில்லை; அதேபோன்று குழந்தை உதைபடுதல் தொழிலுக்கு உள்ளாகவில்லை. ஆகையால், ஆங்கில வினைப்பாகுபாடான செயப்படுபொருள் குன்றிய வினை-குன்றா வினைக்குத் தொடரில் இடம்பெறும் செயப்படுபொருள் காரணமாக அமைவதைப் போன்று தமிழின் இயங்கு வினை-இயக்கு வினைப் பாகுபாட்டிற்கு எழுவாய் காரணமாக அமைகிறது என்பது தெளிவாகப் புலனாகிறது. வினையடியால் சுட்டப்படும் தொழிலுக்கு(செயப்படுபொருள் ஏற்று வந்தாலும் ஏற்காமல் வந்தாலும்) எழுவாய் உள்ளாகும் நிலையில் அவ்வினைகள் இயங்கு வினைகள் எனப்படும். அதேபோன்று, வினையடியால் சுட்டப்படும் தொழிலுக்கு உள்ளாகாமல் அவ்வினைகளை எழுவாய் நிகழ்த்தும் நிலையில் அமைந்த வினைகள் இயக்கு வினைகள் எனப்படும். பின்வரும் தொடர்களை நோக்குக.

          1.50 ரசிகர்கள் நடிகையை வளைந்து கொண்டார்கள்

          1.51 ரசிகர்கள் நடிகையை வளைத்துக் கொண்டார்கள்

இவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றாக இருப்பினும்(The fans surrounded the actress) இவ்விரு தமிழ்த் தொடர்களும் பொருள் வேறுபாடு உடையவை. தொ.1.50'இல் சுட்டப்படும் வளைதல் தொழில் எழுவாயின்கண் நிகழ்வதாகவும் தொ.1.51'இல் சுட்டப்படும் வளைதல் தொழில்  செயப்படுபொருள்மீது நிகழ்வதாகவும் உள்ளன. இவற்றில் தொ.1.50 ரசிகர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்றும் தொ.1.51 ரசிகர்கள்(நடிகைக்கு) என்ன செய்தார்கள் என்றும் குறிப்பிடும் விதமாக அமைந்துள்ளன. மேற்கண்ட தொடர்கள் வேறொரு தொடரில் இணைக்கப்படும்போது அவற்றில் காணப்படும் பொருள் வேறுபாடு இக்கருத்தைத் தெளிவுபடுத்தும். இயங்கு வினையில் உள்ள தொடரைத்(1.50)  துணைமைத் தொடராகக் கொண்டிருக்கும் கலப்பு வாக்கியத்தில் முதன்மை வினையாக இயங்குவினை மட்டுமே வரக்கூடும். அதே போன்று, இயக்கு வினையில் உள்ள தொடரைத்(1.51) துணைமைத் தொடராகக் கொண்டிருக்கும் கலப்பு வாக்கியத்தில் முதன்மை வினையாக இயக்குவினை மட்டுமே வரக்கூடும்.

          1.52 (அ) ரசிகர்கள் நடிகையை வளைந்து கொண்டு ஆட்-இன்-ஆர்கள்

                 *(ஆ) ரசிகர்கள் நடிகையை வளைத்துக் கொண்டு ஆட்-இன்-ஆர்கள்

          1.53 *(அ) ரசிகர்கள் நடிகையை வளைந்து கொண்டு அடி-த்த்-ஆர்கள்

                   (ஆ) ரசிகர்கள் நடிகையை வளைத்துக் கொண்டு அடி-த்த்-ஆர்கள்

          1.54 (அ) ரசிகர்கள் நடிகையை வளைந்து கொண்டார்கள்; போலீசார்                                  அவர்களைக் கலைத்தார்கள்

                   (ஆ) ??ரசிகர்கள் நடிகையை வளைத்துக் கொண்டார்கள்; போலீசார்                         அவர்களைக் கலைத்தார்கள்

          1.55 (அ) ??ரசிகர்கள் நடிகையை வளைந்து கொண்டார்கள்; போலீசார்                              அவளைக் காப்பாற்றினார்கள்

                   (ஆ) ரசிகர்கள் நடிகையை வளைத்துக் கொண்டார்கள்; போலீசார்                              அவளைக் காப்பாற்றினார்கள்

இதே நிலையைக் கீழ்க்காணும் தொடர்களிலும் காணலாம்.

          1.56 (அ) அவள் வலிய வந்து என்னை அணைந்தாள்

                   (ஆ) அவள் வலிய வந்து என்னை அணைத்தாள்

1.56 (அ)'வில் அணைதல் தொழிலுக்கு எழுவாய் உள்ளாவதாகவும் 1.56 (ஆ)'வில் அணைதல் தொழிலை எழுவாய் நிகழ்த்துவதாகவும் உள்ளன. இதேபோன்று,

          1.57 (அ) அவள் கணவனைப் பிரிந்து வாழமாட்டாள்

                   (ஆ) *அவள் கணவனைப் பிரித்து வாழமாட்டாள்

என்னும் தொடர்களும் அமைந்துள்ளன. இவ்வாறான தொடர்களின் வழியாகத் தமிழ்மொழியின் வினைச் சொற்களைப் பாகுபடுத்தி விளக்குவதற்கு எழுவாயும் அதன் செயற்பாடும் அடிப்படைப் பங்காற்றுகின்றன என நிறுவலாம்.

          வினைப்பாங்கினை(Aspects) உணர்த்தும் துணைவினைகள் சிலவற்றில் இந்த நிலையைக் காணமுடிகிறது. கீழ்க்காணும் தொடர்களை நோக்குக.

          1.58 (அ) நான் பல்லை உடைத்தேன்

                  (ஆ) நான் பல்லை உடைத்துக் கொண்டேன்.

தொடர் 1.58 (அ)'வில் உள்ள 'பல்' கூற்றை நிகழ்த்துபவருக்கு உரியதன்று. ஆனால், தொடர் 1.58 (ஆ)'வில் உள்ள 'பல்' கூற்றை நிகழ்த்துபவருக்கு உரியது.  இத்தொடரில் இடம்பெறும் 'கொள்' என்னும் துணைவினை காரணமாகவே இப்பொருள் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கீழ்க்காணும்

          1.59 அம்மா பட்டுச் சேலை உடுத்தினாள்44

என்னும் தொடர் பொருள் மயக்கமுடைய தொடராகும். அம்மா சேலையைத் தன்மீது உடுத்தினாள் என்றும் அம்மா சேலையை வேறொருவருக்கு உடுத்திவிட்டாள் என்றும் இருபொருள்களைத் தருகிறது.  ஆனால், கீழ்க்காணும் தொடர்களில் இப்பொருள் மயக்கம் இல்லை.

          1.60 (அ)  அம்மா பட்டுச் சேலை உடுத்திக் கொண்டாள்

                  (ஆ) அம்மா மகளுக்குப் பட்டுச் சேலை உடுத்தினாள்/உடுத்திவிட்டாள்

இவ்வாறான தொடர்களில் பொருள் மயக்கத்தைப் போக்கும் 'கொள்' என்னும் துணைவினை தற்சுட்டு வினை(Reflexive) என்று வழங்கப்படுகிறது(Arden,1981; Bright and Lindenfeld, 1968). ஆனால், தற்சுட்டு என்னும் பொருள் ஆங்கிலத்திற்குப் பொருந்துவது போன்று தமிழுக்கு அவ்வளவாகப் பொருந்தாது(Schiffman, 1969:117). மேலும், டேல்(Dale, 1975) குறிப்பிடுவதைப் போன்று கொள்(பேச்சுத் தமிழில் 'கிடு') என்பது தற்சுட்டுப் பொருள் உணர்த்தின் அது கீழ்க்காணும் தொடரைப் பொருளுடைய தொடராக ஆக்கியிருத்தல் வேண்டும்.

          1.61 (அ)  *அம்மா குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டால் அவளுக்குச்                             சந்தோசமாய் இருக்கும்

அம்மா என்னும் சொல்லுக்குப் பதிலாகத் தான் என்னும் தற்சுட்டுப் பெயரைப் பயன்படுத்தினும் பொருளுடைய தொடர் உருவாக்கியிருத்தல் வேண்டும்.

                  (ஆ) * தான் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டால் அம்மாவுக்குச்                            சந்தோசமாய் இருக்கும்

                  (இ) * தானே குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டால்தான்                                         அம்மாவுக்குச் சந்தோசமாய் இருக்கும்

ஆனால், இத்தொடர்கள் தமிழில் வழுத்தொடர்களாகும். எனவே, கொள் என்னும் துணைவினை தற்சுட்டு அல்லாத வேறொரு பொருளை உணர்த்துகிறது என்று கொள்ளவேண்டும்.

          ஷிஃப்மன் கொள்46 என்னும் துணைவினை முதல்வினையின் பயனை எழுவாய் உறுதல்47 என்னும் வகையில் எழுவாயுடன் ஏதோவொரு விதத்தில் தொடர்புறுகிறது என்று விளக்குகிறார்(Schiffman, 1969:117). அது எழுவாய் வினைப்பயனைத் தானே உறுதல் என்னும் பொருளில் வருகிறது என்று குறிப்பிடும் அவர் மழை49 போன்ற அஃறிணை உயிரல் பொருள்கள் எழுவாயாக வரும் தொடர்களில் இத்துணைவினை இடம்பெறுவதில்லை என்று விளக்குகிறார்.

          அவர் கூற்றுப்படி, அஃறிணை உயிரல் பொருள்களை எழுவாயாகக் கொண்ட தொடர்களில் கொள் என்னும் துணைவினை மேற்கண்ட பொருளில் வராது என்று கருதலாம். ஆனால், கொள்(பேச்சுத் தமிழில் 'கிடு')என்னும் துணைவினை உயிரல் பொருள் எழுவாயாக வரும் தொடர்களில் இடம்பெறும் முதன்மைவினையுடன் இணைந்து வருவதைக் காணமுடிகிறது. கருமேகம் சூழ்ந்திருக்கும் ஒரு சூழலில், மழை பெய்தால் அப்போது தேங்கும் மழைநீரில் காகிதக் கப்பல் செய்து விளையாடக் காத்திருக்கும் சிறுவனிடம் அவன் தந்தை கூறுவதாகக் கீழ்க்காணும் தொடரை அணுகவும்.

          1.62 மழை பெய்து கொள்ளட்டும்; இப்பொழுது என்ன அவசரம்?

இதேபோன்று, ஒழுகும் கூரையை அறுவடை முடிந்ததும் சீர்செய்யலாம் என நினைக்கும் மனைவியிடம் அவள் கணவன் கூறுவதாகக் கீழ்க்காணும் தொடரை அணுகவும்.

            1.63 நெல் விளைந்து கொள்ளட்டும்; அப்புறம் பார்ப்போம்

இதேபோன்று, தன் பொருட்களைப் பெட்டியில் அடுக்கும் பெண்ணின் கூற்றாகக் கீழ்க்காணும் கூற்றை அணுகவும்.

          1.64 துணியெல்லாம் இந்தப் பெட்டியில் அடங்கிக் கொண்டது.

மேற்கண்ட உயிரல் பொருள்களை எழுவாயாகக் கொண்ட தொடர்களில் கொள் என்னும் துணைவினை இடம்பெறுவதைக் கொண்டு எழுவாய் வினையின் பயனைத் தானே உறுதல் என்னும் பொருளில் கொள்(பேச்சுத் தமிழில் 'கிடு') என்னும் துணைவினை வரவில்லை என்பது விளங்குகிறது.

          டேல்(Dale,1975) கிடு(கொள் என்பதுடன் தொடர்புடையது) என்னும் துணைவினை முதல்வினையுடன் இணைந்து வினைமுற்றாக இயங்குவினைப் பொருளைத் தருகிறது என்றும் வினையெச்சத்துடன் இணைந்து வினையெச்சத் தொடராக உடனிகழ்ச்சிப் பொருள் தருகிறது என்றும் குறிப்பிடுகிறார். இவ்விருவகையான தொடர்களிலும் இடம்பெறும் கிடு என்பதைத் தனித்தனியாகக் கருதவேண்டும் என்று கூறும் டேல், விடு என்னும் துணைவினை(எச்சத்தொடரில் உடனிகழ்ச்சிப் பொருளையும் முற்றுத்தொடரில் வினைமுடிவுப் பொருளையும் தரும்) இவ்விருவகையான தொடர்களிலும் வெவ்வேறு சூழல்களில் ஒரே பொருளையே தருகிறது என்று கருதுகிறார்(Dale, 1975:275). ஆனால், கொள்(பேச்சுத் தமிழில் 'கிடு')  என்னும் துணைவினை எச்சத்தொடரில் எப்போதும் உடனிகழ்ச்சிப் பொருளை மட்டுமே தருவதில்லை. கீழ்க்காணும் தொடர்களை நோக்குக.

          1.65 அம்மா! இளங்கோ என் பேனாவை எடுத்துக் கொண்டு50 தரமாட்டேன்                             என்கிறான்

          1.66 அம்மா! செங்குட்டுவன் என் காலைப் பிடித்துக் கொண்டு விடமாட்டேன்                   என்கிறான்

மேற்கண்ட இரண்டு தொடர்களிலும் கொள்(பேச்சுத் தமிழில் 'கிடு') என்னும் துணைவினை கட்டாயமாக51 இடம்பெறவேண்டியதாக உள்ளது. எழுவாய் ஒரு பொருளைப் பற்றிக்கொண்டுள்ளது என்னும் பொருள் உருவாக இத்துணைவினை உதவியுள்ளது. அதாவது, உடனிகழ்ச்சி என்பது மட்டுமே எச்சத் தொடர்களில் கொள் என்னும் துணைவினையின் பொருளாகக் கொள்ளமுடியாது என்பது உறுதியாகிறது. மேலும்,

          1.67 என் பையில் பணம் இருக்கிறதைப் பார்த்துக் கொண்டு அவன் என்னிடம்                   பத்து ரூபாய் கடன் கேட்டான்

          1.68 அவன் என் இடத்தில் உட்கார்ந்து கொண்டு எழுந்திருக்க மாட்டேன்                      என்கிறான்

இத்தொடர்களில் கொள் என்பதன் அடிப்படைப் பொருள் மறையவில்லை.52 எனவே, பொருண்மையியல் ஆய்வில் இத்துணைவினை இரண்டு நிலையிலும்(எச்சத்துடன் இணைந்து வருதல், முற்றுடன் இணைந்து வருதல்) வெவ்வேறு சூழலில் ஒரே பொருளில் வருகிறது என்றே கொள்ளவேண்டும். பொதுவாகப் பொருண்மை நிலையில், வினையின்  தொடர்ச்சியைக் குறிப்பதற்குக் கொள் என்னும் துணைவினை உதவுகிறது. கீழ்க்காணும் ஆங்கிலத் தொடர்களில் 'keep' என்னும் துணைவினையின் பொருளை நோக்குக.

          1.69 John kept on talking/writing/running

          1.70 Mary kept saying that she loved Chicago's weather53

தமிழில் வினையின் தொடர்ச்சியைக் குறிக்கக் கொள் மற்றும் இரு என்னும் இரண்டு துணைவினைகள் இடம்பெறுகின்றன(தொடர்புடைய விளக்கத்திற்குக் காண்க Dale, 1975). உடனிகழ்ச்சி என்பது ஒருவகையான வினைத் தொடர்ச்சி எனக் கருதலாம் ஆகையால் எச்சத்தொடர்களில் கொள் என்னும் துணைவினை இடம்பெறுவது இயல்பான ஒன்றாகவே கருதத்தகுந்தது. துணைவினைகளைப் பற்றி டேல்(Dale,1975:370-371) குறிப்பிடும் கூற்று இங்கு எண்ணத் தகுந்தது. "துணைவினைகள் தமிழில் பிற மொழிகளைக் காட்டிலும் வெளிப்படையான பொருளைத் தருகின்றன. புறநிலையில் இருந்துகொண்டே இவை பொருண்மைக்குத் துணைபுரிகின்றன." இதேபோன்ற விளக்கத்தை பெப்ரிசியஸ் மற்றும் ப்ரெய்தாப்ட்(Fabricius and Breithaupt,1979) எழுதியுள்ள நூலிலும் காணலாம். அவர்கள், 'ஐரோப்பியர்களாகிய நாங்கள் வினைச் சொற்களின் வழியாகத் தொழில் நிகழ்வை விளக்குவதைக் காட்டிலும் தமிழில் தொழில் நிகழ்வின் ஒவ்வொரு படிநிலையும் திட்டவட்டமாக விளக்கப்படுகிறது' என்கின்றனர். அவர்கள் கீழ்க்காணும் தொடரையும் இதற்குச் சான்றாகத் தந்துள்ளனர்.

1.71 இந்தப் புஸ்தகத்தைக் கொண்டு போய் என் சகோதரனுக்குக் கொடுத்து விட்டு வா

இத்தொடரில் ஐந்து தொழில்கள் சுட்டப்பட்டுள்ளன. அவை முறையே, புஸ்தகத்தை எடுத்துக் கொள்ளுதல், செல்லுதல், சகோதரனிடம் ஒப்படைத்தல், புஸ்தகத்தை அவ்விடத்திலேயே விடுதல், திரும்பி வருதல் என்பன". இவ்விளக்கங்கள் கொள் என்னும் துணைவினையின் அடிப்படைப் பொருளை நீக்கிவிட்டு அதன் பொருளைப் பொதுமைப்படுத்த முற்பட்டால் ஏற்படும் இடர்ப்பாட்டை நமக்குக் காட்டுகின்றன.

          கொள்(பேச்சுத் தமிழில் கிடு<கொடு) என்பது இயங்கு வினையாகத் திகழும் நிலையில் இதனை அடிப்படையாக வைத்து உருவாகும் தொடர்களில் வினையால் சுட்டப்படும் தொழிலுக்கு எழுவாய் உள்ளாவதைக் காணலாம்(Schiffman, 1969) அல்லது தொழில் நிகழ்வில் எழுவாயின் பெரும்பங்கினை விளக்குவதைக் காணலாம்(Lindholm, 1966). ஆனால், கொள் என்பதைத் தானே இயங்கும் வினையாக விளக்கினால்(டேல் விளக்கத்தில் முற்றுவினையுடன் இணைந்து வரும், Dale,1975) இயங்கு வினைக்கும் இயங்கு வினையுடன் இணைந்து வரும் கொள் என்னும் துணை வினைக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்க இயலாது. கீழ்க்காணும் தொடர்களை நோக்குக.

          1.72 (அ) (நீ) இங்கே உட்கார்

                  (ஆ) (நீ) இங்கே உட்கார்ந்து கொள்

 1.72(அ) தொடர் ஒரு ஏவல் தொடராக உள்ளது; (ஆ) தொடர் வேண்டுகோளாக அமைந்துள்ளது. (ஆ) தொடரில் கொள் என்னும் துணைவினை தற்சுட்டுப் பொருளில் வந்துள்ளதால்தான் அது வேண்டுகோளாக அமைந்துள்ளது என்று நிறுவ இயலாது. இயங்கு வினையில் உட்கார் என்பதும் அடங்கும் எனினும் அதைக் கொண்டு ஏவல் வினையை உருவாக்கமுடிகிறது. தானே இயங்குதல் என்று பொருள் கொள்வது 1.72(ஆ)'விலிருந்து 1.72(அ)'வை வேறுபடுத்திக் காட்டுகிறது என்று கூறமுடியாது. இவ்வேறுபாட்டிற்குக் காரணம் கொள் என்னும் வினையின் அடிப்படைப் பொருளே ஆகும். 1.72(ஆ)'வை ஏவல் வினையாகக் கொள்ளமுடியாது. கொள் என்னும் சொல்லின் அடிப்படைப் பொருளே கொள் என்பதைத் துணைவினையாகக் கொண்ட கூட்டுவினையால் சுட்டப்படும் தொழிலில் எழுவாயின் பங்கினை உறுதிசெய்கிறது. எனவே, வினைப்பாங்கு பற்றிய இடங்களிலும் இயங்கு வினையின் இன்றியமையாமை உணரப்படுகிறது என்பதை அறியலாம்.

          வினைப்பாங்கினை உணர்த்தும் தமிழ்த் தொடர்களில் பொதுவாக இயங்கு வினைகளே துணை வினைகளாக வருகின்றன; இயக்குவினைகள் துணை வினைகளாகச் செயற்படுவதில்லை.56 அவற்றுள் 'தொலை' என்பது மட்டுமே புறநடையாக இயங்கு வினை மற்றும் இயக்கு வினை என்னும் இருவடிவங்களிலும் துணைவினையாக வருகிறது.57 எனவே, இயங்கு வினைகளே தமிழில் துணை வினைகளாகப் பெரும்பாலும் அமைகின்றன என்று குறிப்பிடலாம்.

          இதுவரை தமிழில் காணப்படும் இரண்டு வகையான வினைகள் எழுவாயின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று கண்டோம். ப்ளாக்(Bloch, 1946:100)58 தம்முடைய நூலில் காட்டும் பல முடிவுகளில் ஒன்றாக, 'வினைகளில் பாங்கு, மனநிலை ஆகியவற்றைக் காட்டும் கூறுகள் இடம்பெறுவதில்லை. அதே நேரம், வினைச் சொற்களிலும் பெயர்ச்சொற்களிலும் அவை எழுவாயுடன் கொண்டிருக்கும் தொடர்பை அறியமுடிகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் இந்தக் கருத்தை மேலும் வினைகள் பகுதியிலோ முடிவுரைப் பகுதியிலோ விளக்கவில்லை.

          தமிழ் வினைகளை இயங்கு வினைகள், இயக்கு வினைகள், காரண வினைகள் என்று பிரிப்பது பியாகெட்(Piaget, 1954) குறிப்பிடும் 'எழுவாய் மீதே வினை நிகழ்தல், எழுவாய் செயப்படுபொருளின் மீது வினையை நிகழ்த்தல், செயப்படுபொருள்கள் தம்முள் உறவாடல்' என்னும் கருத்துடன் பொருத்திக் காணக்கூடியதாக உள்ளது. இது பற்றிய ஆய்வுகள் விரிவாக நிகழ்த்தப்படவேண்டும்.

தன்வினை-பிறவினை வகைப்பாடு

          தன்வினை மற்றும் பிறவினை விளக்கங்கள் தமிழ் அறிஞர்களால் பெரும்பாலும் தவறாக விளக்கப்படுவதால் இப்பாகுபாடு பற்றி இப்பகுதியில் விரித்துரைக்கப்படுகிறது. தன்வினை என்னும் சொல் முதன்முதலில் தொல்காப்பியத்தில் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டு?) சொல்லதிகார  203'ஆம் நூற்பாவில் இடம்பெற்றுள்ளது. அந்நூற்பா தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகளைப் பட்டியலிட்டு இவை தன்மை இடத்தில் தோன்றும் வினைகளைக் குறிக்க வரும் என்கிறது(தன்வினை உரைக்கும் தன்மைச் சொல்லே).  உளப்பாட்டுத் தன்மைப் பன்மை பற்றிய நூற்பாவில் நன்னூல்(நூ.322)60 'தன்னொடு' என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளது. இவ்விரு இலக்கண நூல்களும் பிறவினை என்னும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. ஆனால், 'இது செயல் வேண்டும்' என்னும் தொடரமைப்பை விளக்கும்போது தொல்காப்பியம் யாரால் வேண்டப்படுகிறது என்னும் கேள்வியை எழுப்பித் தன்னாலும் பிறராலும் வேண்டப்படுகிறது என்று விடையளிக்கிறது. (நூ.243,காண்க:நச்சினார்க்கினியர் உரை). ஆனால், பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி(1945) இந்த நூற்பா விளக்கத்தில் 'இது செயல் வேண்டும்' என்பது தன்வினை மற்றும் பிறவினை என்று இரண்டையும் உணர்த்தும் என்று பிழையான விளக்கத்தினை அளித்துள்ளார். மேலும், அவர் காட்டும் 'என் தந்தை என்னை ஓதல் வேண்டும்' என்னும் தொடர் பிழையான தொடராகும். இவ்விரண்டு இலக்கண நூல்களும் பிறவினை என்னும் சொல்லை எங்கும் பயன்படுத்தவில்லை. இருப்பினும், ஒரோவிடங்களில் வினையின் தொழிலுக்கு எழுவாய் ஆளாவதைப்(தன்வினை) பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியம் '-வி-/-(ப்)பி-' இடைச்சொற்களைக் கொண்ட காரண வினைகளைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், நன்னூல் இவ்வினை வடிவங்களை ஏவல் வினைகள் என்று விளக்குகிறது.

          தொல்காப்பிய உரையாசிரியர்களும்(நச்சினார்க்கினியர் போன்றோர்) நன்னூல் உரையாசிரியர்களும்(கி.மு.17'ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கரநமச்சிவாயர் போன்றோர்) ஒற்றை வல்லொலி வினைகள் மற்றும் இரட்டை வல்லொலி வினைகளைப் பற்றி விளக்கும்போது அவற்றை முறையே தன்வினை மற்றும் பிறவினை என்ற பிரிவில் அடக்கி விளக்கியுள்ளனர்.

          இலக்கணக் கொத்து நூலாசிரியர்தாம்(கி.மு.17'ஆம் நூற்றாண்டு) முதன்முறையாக ஒற்றை வல்லொலி கொண்ட வினைகளைத் தன்வினை என்றும் இரட்டை வல்லொலி கொண்ட வினைகளையும், காரணப்பொருள் உணர்த்தும் இடைச்சொற்களைக் கொண்ட வினைகளையும் ஒன்றாக இணைத்துப் பிறவினை என்றும் விளக்கியுள்ளார். சுவாமிநாத தேசிகர்(இலக்கணக் கொத்து ஆசிரியர்) முன்னைய உரையாசிரியர்களின் விளக்கத்தைப் பிழையாக உணர்ந்ததாலோ இவர்தம் சம காலத்தவர்களான சுப்பிரமணிய தீட்சிதர்(பிரயோக விவேகம் ஆசிரியர்) போன்று சமஸ்கிருத இலக்கணத்தின் அடிப்படையிலோ இரண்டு வினையமைப்புகளையும்(இரட்டை வல்லொலி வினைகள் மற்றும் காரணவினைகள்) பிறவினையிலேயே அடக்கியுள்ளார். சமஸ்கிருதத்தின் தாக்கத்தால் இவ்வாறு செய்தனர் என்னும் கருத்து அவ்வளவு வலிமையுடையதாகத் தோன்றவில்லை. ஏனெனில், தமிழில் பல கூறுகளைச் சமஸ்கிருத மொழியமைப்பின் அடிப்படையிலிருந்து விளக்கித் தமிழமைப்பிற்குத் திரிபான விளக்கங்களை அளித்த சுப்பிரமணிய தீட்சிதர்(P.S.Subrahmanya Sastri, 1931:186), இரட்டை வல்லொலி கொண்ட வினைகளையும் காரண வினைகளையும் வெவ்வேறாகவே விளக்கியுள்ளார். எனவே, இலக்கணக் கொத்து நூலாசிரியர் உரையாசிரியர்களின் விளக்கத்தைப் பிழையாக உணர்ந்து இரட்டை வல்லொலி வினைகளையும் காரண வினைகளையும் ஒன்றாகவே விளக்கியுள்ளார் என்று கருதலாம். இவ்விரண்டு வினைகளுக்கும் இடையிலான சொல்லியல் மற்றும் பொருண்மை வேறுபாடுகளை அவர் கருதவில்லை. (இயக்கு வினைகளின் பொருண்மை பற்றி இயல் 2'இல் காண்க). மேலும், -வி- மற்றும் -(ப்)பி- இடைச்சொற்கள் கொண்ட வினைகளுக்கு இடையிலான வேறுபாடுகளைப் பற்றியும் அவருடைய விளக்கத்தில் எந்தக் குறிப்பும் இல்லை.

          தமிழ் இலக்கண மரபில் தன்வினை(வினையில் சுட்டப்படும் தொழிலுக்கு அதன் எழுவாய் உள்ளாகுதல்) பற்றிய விளக்கம் தொடர்ந்து தெளிவாக அமையும் நிலையில் பிறவினை பற்றிய விளக்கம் தெளிவாக அமைந்திருக்கவில்லை. பிறவினைகள் குறித்து மரபிலக்கண நூலார் கொண்டிருந்த குழப்பத்தைப் பற்றிக் கந்தையாவின் நூலில் காணலாம். பலருக்கும் குழப்பத்தை விளைவிக்கும் தன்வினை, பிறவினைப் பாகுபாட்டிற்குப் பதிலாக இயங்கு வினை-இயக்கு வினை என்னும் பாகுபாடே தமிழ் வினைகளை விளக்குவதற்கு உகந்ததாக உள்ளது.

          மேலும், அறிஞர்கள் சிலர் தன்வினை-பிறவினைப் பாகுபாட்டைச் சமஸ்கிருதத்தில் உள்ள ஆத்மனேபதம்-பரஸ்மைபதம் என்னும் பிரிவுடன் பொருத்திப் பார்த்துள்ளனர்(Pope, 1855:122). இவர்கள் தமிழ் இலக்கண மரபினை அறியாதவர்களாகவோ சமஸ்கிருதத்திலிருந்தே இந்தியாவின் அனைத்துக் கூறுகளும் உருவாயின என்னும் சமஸ்கிருதச் சார்புடையவர்களாகவோ இருந்ததன் காரணமாகவே இவ்வாறான ஒப்புமையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.(சமஸ்கிருதம் எப்போதும் பிற மொழிகளுக்கு வழங்குவது அன்றி ஒருபோதும் பிற மொழிகளிலிருந்து எதையும் பெறாது).62

                ஆத்மனேபதம்-பரஸ்மைபதம் பற்றி விரிவான பொருண்மையியல் ஆய்வுகள் நிகழ்த்தப்படாதவரை அவை பற்றிய கருத்து வேறுபாடுகள் இருந்துகொண்டுதான் இருக்கும். இவற்றுக்குப் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி கொடுக்கும் விளக்கத்துடன் தாராபோரேவாலா(Taraporewala, 1937) வழங்கும் விளக்கம் பொருந்தவில்லை. சாஸ்திரி இவ்வினைகளின் அடிப்படைப் பொருண்மைகளாகக் கருதுவனவற்றைத் தாராபோரேவாலா கூடுதல் பொருண்மைகளாகக் கருதுகிறார். முன்னர்க் குறிப்பிட்டது போன்று சாஸ்திரி, பிறவினை மற்றும் காரணவினையையும் பிரித்துக் காட்டவில்லை. 'தன்வினை-பிறவினைப் பாகுபாட்டுடன் ஆத்மனேபதம்-பரஸ்மைபதம் பாகுபாடு எவ்விதத்திலும் பொருந்தி வராது' என்று கூறும்போதும் பிறவினை என்று ஒன்றாகவே கொண்டுள்ளார். போப்பின்(Pope, 1855) கருத்தும் சாஸ்திரியின் கருத்தைப் போன்றே அமைந்துள்ளது.

          பென்வினிஸ்ட்(Benveniste, 1950) கூறுவது சரியானால், இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் கண்டறியப்பட்ட வினைகளின் இரண்டு நிலைகள் தமிழில் எல்லாக் காலத்திலும் இருந்துள்ளன எனின் திராவிட மொழிகளின் தொல்-திராவிட மொழியிலும் காணக்கூடியதாக இருக்கும். எனவே, இப்பாகுபாடு சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டதாக இருக்கமுடியாது. தமிழ் ஓர் உள்ளொழுங்கமைவுடைய மொழி(Zvelebil, 1968) என்னும் நிலையில் இப்பாகுபாடு தொடக்கத்திலிருந்தே இருந்திருக்கலாம். அதேவேளை, இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் இப்பாகுபாடு செயப்படுபொருள் குன்றிய வினை-குன்றா வினை என்று பின்னர் வளர்ச்சி அடைந்திருக்கலாம்(Benveniste, 1950). எனினும், இக்கருத்தினை உலகப் பொதுமை நிலையில் வைத்துக் காணவேண்டியது என்று இவ்வாய்வாளர் கருதவில்லை. இவ்வினைகள் பற்றிய ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை இவ்வாய்வாளர் அறிந்துள்ளார். எனினும், இந்த இருவினைப் பாகுபாட்டில் தமிழுக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கு இடையில் உறவு காணப்படினும் ஒவ்வொரு வினைக்கும் இந்த உறவைக் காணமுடிவதில்லை. எனவே, செயல் வினைகளான Come மற்றும் Go என்னும் வினைகள் சம்ஸ்கிருதத்தில் பரஸ்மைபத வினைகளாகவும்(டான் நெல்சனுடனான உரையாடலில் பெறப்பட்டது) தமிழில் இயங்கு வினைகளாகவும்(வா/வரு; போகு) இருக்கும். மேலும் இவற்றிலிருந்து வருத்து, போக்கு என்னும் இயக்குவினைகளும் வருவி, போகுவி என்னும் காரணவினைகளும் தோன்றும். தாராபோரேவாலா(Taraporewala,1937:412), 'செயப்பாட்டு வினைகளில் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் யாவும் ஆத்மனேபத வினைகளாகவே உள்ளன' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், தமிழில் உருவாகும் செயப்பாட்டுவினைகள் கூட்டுவினை வடிவங்களாக உள்ளன. அவை இயங்கு வினை-இயக்கு வினைப் பாகுபாட்டிலிருந்து வேறானவையாக உள்ளன.

          இவ்வியலின் முடிவுரையாகப் பின்வரும் கருத்துகள் அமைகின்றன. தமிழில் உள்ள வினைகள் பொருண்மை அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கக் கூடியவையாக உள்ளன.  முதல்வகை வினைகள் ஒற்றை வல்லொலி கொண்ட(ஒற்றை வல்லொலியுடன் இன மூக்கொலி பெறும் அமைப்பும்) வினைகளாக அமைந்து வினையடியால் சுட்டப்படும் தொழிலுக்கு எழுவாய் உள்ளாவதைக் குறிக்கின்றன. இரண்டாவது வகை வினைகள் இரட்டை வல்லொலி கொண்ட வினைகளாக அமைந்து வினையடியால் சுட்டப்படும் தொழிலை எழுவாய் மற்றொன்றின் மீது நிகழ்த்துவதைக் குறிக்கின்றன. 

சான்றெண் விளக்கம்

1. தமிழ், திராவிட மொழிக்குடும்பத்தில் பழமையான மொழியாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் 4 கோடி மக்களாலும் வேறுநாடுகளில் (இலங்கை முதல் மொரீசியஸ் வரையிலும் தென்னாப்பிரிக்கா முதல் ஐக்கிய அமெரிக்கா வரையிலும்)  கிட்டத்தட்ட 1.3 கோடி மக்களாலும் பேசப்படுகிறது (The World Almanac, 1976). தமிழ் பேசப்படும் நிலவியல் விளக்கத்திற்குக் காண்க: Lindolhm, 1975,6ff. 

2. வினைப்பகுதி என்பது ஒட்டுகளுடன் இணையும் வினைக்கூறினைக் குறிக்கிறது. அது வினையின் வேர்ச்சொல்லாகவும் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். அது ஒரு வினையடியாக இருக்கும் அல்லது வினையடியுடன் ஆக்கவிகுதியைக் கொண்டிருக்கும்.

3. விளக்கங்களுக்காக உருபனியல் எல்லைகள் '-' கோடு மூலம் குறிக்கப்பட்டுள்ளன.

4. வரலாற்று நோக்கில் இறந்த காலத்தைக் குறிக்கும் ஒட்டான /த்/'இன் முன்னர் வரும் அதன் மூக்கொலியின் வரவினைப் பிற்கால வளர்ச்சியாகக் கருதலாம். அது ஒருசில வினைகளின் இறந்தகால வடிவத்தில் மட்டும் இடம்பெறுவதைக் கொண்டு அவ்வாறு ஊகிக்கமுடிகிறது.

5. /வ்/ ஒலியன் /ப்/ ஒலியனின் மாற்றொலியனாகும். [+காலம்] -> [-காலம்]/+sonorant/-nasal] - [+vocalic] என்னும் விதி தமிழின் ஒலியமைப்பிற்குத் தேவையான ஒன்றாக உள்ளது.

6. ஒட்டு என்பது முதல் ஒட்டினைக் குறிக்கிறது. அதாவது, வினைப்பகுதியை அடுத்து வரும் ஒட்டினைக் குறிக்கிறது.

7. ஒட்டின் பிற இடங்களில் உள்ள மெய்கள் இந்த வேறுபாட்டிற்குப் பங்காற்றவில்லை.

8. தமிழ்ப் பேரகராதியில் காணப்படும் 140 வினைகளில்(கூட்டு வினைகள், கடன் வடிவங்கள், ஒலிக்குறிப்பு வினைகள், ஒலிநிலை மாற்றங்கள் நீங்கலாக) 82 வினைகள் இணைவினைகளாக உள்ளன. இது 58.6 விழுக்காடாகும். இது பற்றிய விரிவான விளக்கத்திற்குக் காண்க Rajam Velayudham(1955). இதே போன்ற இணைவினைகள் குறிப்பிடத்தகுந்த அளவில் பிற திராவிட மொழிகளிலும் காணப்படுகின்றன.(காண்க Subrahmanyam, 1971; Burrow and Bhattacharya, 1963).    

9. வேறு வினைக்கூறுகளின்(துணைவினை முதலியன) பொருண்மையியல் ஆய்வு இந்த ஆய்விற்கு அப்பாற்பட்டது.

10. இது பொருள் மயக்கத்தைத் தரும் தொடராக உள்ளது. அவன் கதையைப் படித்து முடித்தான் என்றும் அவன் கதையை எழுதி முடித்தான் என்றும் பொருள்படும்.

11. தமிழர்களின் பண்பாட்டு மரபில் தலையை ஆட்டுதல் என்பது தலையை ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்குக்(பெண்டுலம் போன்று) கொண்டுவரும் இயக்கத்தைக் குறிக்கும். இந்த அசைவை அறியாத மேலைநாட்டினருக்கு இது குழப்பத்தை அளிக்கும். தமிழில் ஆடு என்னும் சொல்லும் ஆங்கிலத்தின் 'Nod' என்னும் சொல்லும் பொருண்மை நிலையில் வேறுபடுகின்றன. மேலும், ஆடு என்னும் சொல் அசைத்தல், நடனமாடுதல் என்று பல பொருள்களை உள்ளடக்கிய சொல்லாகவும் உள்ளது.

12. வரலாற்று நிலையில், இந்த இன மூக்கொலியின் வரவு தமிழ்-மலையாள மொழிகளில் தனிப்பட்ட வளர்ச்சிக் கூறாக அமைந்துள்ளது (காண்க P.S. Subrahmanyam, 1971). கால்டுவெல்(1956) இவ்வாறு வரும் மூக்கினச் சேர்க்கைகளை 'ஒலித்துணை மூக்கினச் சேர்க்கை' என்று குறிப்பிட்டுள்ளார்.

13. மரபிலக்கணப்படி நிலைமொழியில் குற்றியலுகரம் நிற்க வருமொழியில் தடையொலியை முதலாகக் கொண்ட சொல் வரும்போது தனது இயல்பான மாத்திரையிலிருந்து மேலும் குறைந்து ஒலிக்கும். தனிக்குறிலை அடுத்து வல்லொற்றோடு ஏறி வரும் உகரம் குற்றியலுகரமாகக் கொள்ளப்படுவதில்லை. தொ. 1.5 மற்றும் 1.6 'இல் இடம்பெற்றுள்ள வினைமுற்றுகளின் பகுதிகள் குற்றியலுகர ஈற்றினைக் கொண்டவையாகும். அக்குற்றியலுகரம் உயிரொலிக்கு(இறந்த காலத்தைக் குறிக்கும் -இன்'இல் உள்ள /இ/) முன்னர் வரும்போது கெடும். ஆனால், ஒரு மெய்யொலிக்கு(நிகழ்காலத்தைக் குறிக்கும் -கிற் என்பதில் உள்ள /க்/ வருதல், எதிர்காலத்தைக் குறிக்கும் /வ்/வருதல்)) முன்னர் வரும்போது கெடுவதில்லை. மேலும், இருமு, தழுவு போன்ற வினைப்பகுதிகள் குற்றியலுகரத்தைக் கொண்டு முடியவில்லை என்றாலும் அவையும் அவை போன்ற பிற வினைவடிவங்களும் குற்றியலுகர ஈற்றுச் சொற்களைப் போன்றே கால இடைநிலைகளை ஏற்கின்றன. ஆனால், இணை வினைகள் ஏற்படும் சூழல் கொண்ட குற்றியலுகர ஈற்றுச் சொற்களே வினைப்பகுதியில் இரட்டை வல்லொலி பெற்று இணைவினைகளை உண்டாக்குகின்றன.

14. இணைவினைகள் பற்றிய வேறுவிதமான கண்ணோட்டத்திற்கும் ஒப்பீட்டு நோக்கில் இவை பற்றிய விளக்கத்திற்கும் காண்க Kumaraswami Raja (1969).

15. இறந்தகாலத்தைக் குறிக்கும் ஒட்டு -த்- என்பது இங்குத் தெளிவாகிறது. எனினும், இங்குக் காணப்படும் ஒலியன் மாற்றத்தை விளக்க இரண்டு கொள்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இலக்கணிகள் (நன்னூல் ஆசிரியர் போன்றோர்) செல் என்பதைப் பகுதியாகக் கொண்டு அங்கு லகரம் னகரமாகத் திரிவதைச் சந்தி மாற்றமாகக் குறிப்பிடுவார்கள். ஆர்டன் இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாகத் தெரிகிறது(1891:152). இரண்டாம் கொள்கைப்படி(Rajam Velayudam, 1955 மற்றும் T.P.Meenakashisundaran, 1961, 1965) சென் என்பது பழைய வழக்கு வடிவமாகவும் மூக்கொலி நீக்கத்தால் செல் என வந்தது என்றும் கருதப்படுகிறது. ராஜம் வேலாயுதம் மூன்றாம் வேற்றுமையிலும் ஐந்தாம் வேற்றுமையிலும் மூக்கொலி மருங்கொலியாக(ஆன்/ஆல்; இன்/இல்) மாறும் நிலைமையினை எடுத்துக்காட்டுகிறார். ஆனால், இந்த மாற்றம் ஒலிகளின் மாற்றமாக அல்லாமல் பிழைபிரிப்பாகக் கருதத்தகுந்தது(Hockett,1958:387 மற்றும் Jespersen,1921:173). ஒற்றை வல்லொலிகளுக்கு முன்னர் உள்ள மூக்கொலி மருங்கொலியாக மாறும் நிலை நான்கு(நால்கு என்பதிலிருந்து), என்பு(எலும்பு என்பதிலிருந்து) போன்ற சொற்களை விளக்குவதற்குப் பயன்படுகிறது. இவற்றில் மருங்கொலி உடைய வடிவமே பழமையானது. அவற்றிலிருந்து ஓரினமாதல் விதிமூலம் மூக்கொலி மாற்றம் நேர்கிறது.

16. தற்காலத் தமிழில் வீழ் என்பதன் மாற்றுருபனாக விழு என்பதும் பயன்படுத்தப்படுகிறது.

17. லிண்டோம்(Lindholm,1975) நூலில் உள்ளது போன்று துணைவினைகள் அடிக்கோடிட்டுக் காட்டப்படும்

18. தமிழின் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம்(கி.மு.3'ஆம் நூற்றாண்டு?), வினைச் சொல்லைக் குறிப்பதற்குக் காலக் கிளவி என்னும் சொல்லைக் கையாண்டாலும் கால இடைநிலைகளைப் பற்றிக் குறிப்பிடவில்லை. மூன்று காலங்கள் உள்ளன என்று மட்டும் தொல்காப்பியம் சுட்டுகிறது. கால இடைநிலைகளைப் பற்றித் தொல்காப்பியம் விளக்காமைக்கான காரணங்களைப் பற்றி இலக்குவனார்(1962) மற்றும் வேலுப்பிள்ளை(1966) ஆகியோர் நூல்களில் காணலாம். கால இடைநிலைகள்(ஒற்றை வல்லொலி கொண்டவை) பிற்கால இலக்கண நூலான வீரசோழியத்திலும்(கி.பி.11'ஆம் நூற்றாண்டு) பின்வந்த இலக்கண நூல்களிலும் விளக்கப்பட்டுள்ளன.

19. கால இடைநிலைகளின் தொடக்கத்தில் வரும் ஒற்றை/இரட்டை வல்லொலிகளைப் பற்றி எந்த இலக்கண நூலாசிரியரும் விளக்கவில்லை. வினைப்பகுதியில் வரும் ஒற்றை/இரட்டை வல்லொலிகளைப் பற்றி வீரசோழியமும் அதன் பின் வந்த இலக்கண நூல்களும் குறிப்பிடுகின்றன. முதன்முதலில் இலக்கணக் கொத்து(கி.பி.17'ஆம் நூற்றாண்டு) மட்டுமே தன்வினை(வினைப்பகுதியில் ஒற்றை வல்லொலி கொண்ட ஆடு போன்ற வடிவங்கள்) மற்றும் பிறவினை(வினைப்பகுதியில் இரட்டை வல்லொலி கொண்ட ஆட்டு போன்ற வினைகளும் காரண இடைநிலைகளைக் கொண்ட கலைவி போன்ற வினைகளும்) என்னும் கலைச்சொற்களைக் கையாண்டுள்ளது. இந்தப் பார்வையுடன் கால இடைநிலைகளில் உள்ள வேறுபாடும் சேர்க்கப்பட்டுத் தமிழர் அல்லாத பிறநாட்டுத் தமிழ் இலக்கண நூலாசிரியர்களால் விளக்கப்பட்டுள்ளது(Rhenius, 1834; Caldwell,1856). தன்வினை, பிறவினை பற்றிப் பின்னர் விளக்கப்படும்.

20. இந்த மனப்பாங்கினை பெஸ்கியிடம் வெளிப்படையாகப் பார்க்கமுடிகிறது. இது பற்றிய விளக்கத்திற்குக் கந்தையாவின்(1967:30-32) நூலைப் பார்க்க.

21. ஆங்கிலத்தில் வல்வினை-மெல்வினைப் பாகுபாடு வினைமுற்றின் இறந்த கால அமைப்பினைப் பொறுத்தது(Brook,1958). சம்ஸ்கிருதத்தில் உயிரொலிகளின் ஒலிப்பு நிலையைப் (நடு-மேல் உயிர்/மேல்-முன் உயிர்)பொறுத்தது(Monier-Williams,1857). இவ்வாறு ஒரே கலைச்சொல்லை வேறுவேறு சூழலில் பயன்படுத்துவது மொழியியலில் இயல்பான வழக்கமேயாகும்.

22. தற்காலப் பேச்சுவழக்கில் இரண்டு உயிர்களுக்கு இடையில் வரும் ஒற்றை வல்லொலி ஒலிப்புடைய ஒலியாகவோ உரசொலியாகவோ ஒலிக்கப்படுகிறது. ஆனால், இரட்டை வல்லொலி எப்போதும் ஒலிப்பில்லா ஒலியாகவே ஒலிக்கப்படுகிறது.

23. இத்தொடரை உள்ளபடியே பொருள்கொள்ளவேண்டும்(ஒற்றை வல்லொலி வினைகள் செயப்படுபொருள் குன்றியவை என்றும் இரட்டை வல்லொலி வினைகள் செயப்படுபொருள் குன்றா வினைகள் என்றும் பொருள் கொள்ளப்படுகின்றன). இவ்வாறு கொண்டால் குற்றியலுகரத்தில் முடியும் வினைப்பகுதிகளைக் கொண்ட வினைகளை விளக்கமுடியாது. இரேனியுஸ் கூறுவதைப் போன்று செயப்படுபொருள் குன்றியவினை-குன்றா வினை என்பவை வடிவங்களைக் காட்டிலும் பயன்பாட்டு நோக்கில் வேறுபடுகின்றன என்பது நோக்கத்தக்கது.

 24. வினைத்திரிபு என்பதன் விளக்கமும் மொழிக்குமொழி வேறுபடுகிறது. தமிழில் கால இடைநிலைகள் இணையும்போது ஏற்படும் திரிபு வினைத் திரிபு எனப்படுகிறது.

25. போப் எழுதிய நூலுக்கும் ஆர்டன் எழுதிய நூலுக்கும் இடையில் 36 ஆண்டுகள் இடைவெளி மட்டுமே காணப்படுகிறது. ஆயினும், ஆர்டன் பிற்கால அறிஞர் என்று அடையாளப்படுத்தக் காரணம், அவரைப் பின்பற்றியே பிற்கால அறிஞர்கள் வினைகளை வகுத்துள்ளனர்.

26. செயப்படுபொருள் பற்றிய மரபான விளக்கம் இதுவாகும்(The Shorter Oxford English Dictionary, third edition, reprinted 1965).

27. தமிழில் செயப்படுபொருள் வேற்றுமையைக் குறிக்க ஐ என்னும் உருபு பயன்படுகிறது.

28. தமிழில் உள்ள தொடரின் பொருளுக்கும் அதன் ஆங்கிலத் தொடர் குறிக்கும் பொருளுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. தமிழில் பிரி என்பது ஊரை விட்டுச் செல்லுதலையும் குறிக்கும். 

29. காண்க: குறிப்பு 28

30. தமிழில் மாடு என்னும் சொல் ஆங்கிலத்தில் Cow போன்று அல்லாமல் எந்தப் பாலையும் சுட்டுவதில்லை.

31. இரட்டை வல்லொலி வினைகளைச் செயப்படுபொருள் குன்றா வினை என்பதைக் காட்டிலும் பிறவினை என்பதே பொருத்தமானது என்று குமாரசுவாமி ராஜா(1969:70,99) பல இடங்களில் குறிப்பிட்டாலும் அவர் செயப்படுபொருள் குன்றா வினைகள் என்னும் ஆட்சியை மறுக்கவில்லை. அவர் இலக்கணக் கொத்து நூலை அடிப்படையாகக் கொண்டு இந்த வினைகளைப் பிறவினைகள் என்று வழங்குகிறார். காண்க: குறிப்பு  19.

32. லிண்டோமும்(Lindholm,1975) இதே கருத்தைத் தெரிவிக்கிறார்.

33. இரட்டை வல்லொலி வினைகள் காரணப் பொருள் தருபவையா என்பது இரண்டாம் இயலில் ஆராயப்படும். கந்தையா இந்த வினைகளுக்கு இடையிலான உறவு காரண உறவு அன்று என்னும் கருத்தினர்(Kandiah,1967:92).

34. ஒற்றை மெய்யொலி கொண்ட சில வினை வடிவங்களின் நெடுமுதல் குறுகுகிறது. உண்<ஊண், தின்<தீன். இவற்றின் இணை வினைகளின் வடிவங்களைக் கொண்டு இதனை அறியலாம். மேற்கண்ட வினைகளின் இணை வினைகளாக ஊட்டு, தீற்று ஆகியவை அமைகின்றன. இவை இரண்டும்(இறந்த கால இடைநிலை இன்) கால ஒட்டினை ஏற்கின்ற முறையில் பிரிவு II வகை வினைகளில் அடங்குகின்றன. இவை ஆக்கமுறும் முறையில்(கால இடைநிலையில் ஒற்றை வல்லொலியும் வினைப்பகுதியில் இரட்டை வல்லொலியும்) பிரிவு III வகை வினைகளில் அடங்குகின்றன.

35. இலங்கைத் தமிழில் ஊட்டு என்னும் சொல் தமிழ்நாட்டில் தரும் அதே பொருளைத்தான் (ஒருவர் மற்றொருவருக்கு உணவை ஊட்டிவிடுவது) தருகிறது.

36. இங்கு வைக்கப்படும் கோரிக்கை ஊட்டுவதன் பாற்படும்; அரிசியின் பாற்படாது.

37. கந்தையா(Kandiah,1968) தன்னுணர்வுடன் செய்தல் என்னும் மாற்றுவிதி ஆங்கிலத்திற்கும் தேவை என்று கூறுகிறார். நான்காம் வேற்றுமைப் பெயரைக் கொடைப் பொருள் விரிவு என்று அவர் குறிப்பிடுகிறார்(1967:94).

38. காண்க: குறிப்பு 33

39. வினையடி என்பது மேலும் சில ஆக்கவிகுதிகளை ஏற்கும் வடிவமாகும். இது வினைப்பகுதியாகவோ அல்லாமலோ இருக்கலாம். உட்கார்(1.30), இறங்கு(1.31) ஆகியவை வினையடிகளும் வினைப்பகுதிகளும் ஆகும். ஆனால், அவற்றின் இணைவினை வடிவங்களான உட்கார்த்து, இறக்கு ஆகியவை வினைப்பகுதிகள் மட்டுமே; வினையடிகள் அன்று. (இவற்றில் வினையடியுடன் முதல் வினையில் கூடுதல் ஒட்டும் இரண்டாம் வினையில் வல்லொலி இரட்டிப்பும் அமைந்துள்ளன. மேலும், வினையடி என்பது வினையின் வேர்ச்சொல்லாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.

40. கன்னட மொழி இலக்கண ஆசிரியரான கேசிராஜா(சப்தமணிதர்ப்பன நூலின் ஆசிரியர்) -இசு என்னும் ஒட்டினை விளக்கும்போது எழுவாயுடன் தொடர்புடையதும்(ஸ்வயம் கர்திரிகா) எழுவாயுடன் தொடர்பில்லாததுமான(பர கர்திரிகா) வினைகளைப் பற்றி விளக்குவது இங்குக் குறிப்பிடத்தகுந்தது. மேலும் இசு என்னும் ஒட்டினைக் கொண்டு ஆக்கமுறும் வினைகள் எழுவாயுடன் தொடர்புடையன என்றும் அவர் விளக்குகிறார்(நூ.230, 251).

41. தன்னுணர்வு இன்றி நடைபெறும் ஒரு செயலைத் தன்னுணர்வுடன் செய்யப்பட்ட செயல் போல் காட்டுவதன் மூலமாக இந்தத் தொடர் மரபுத் தொடராக அமைந்துள்ளதா என்று ஆய்தற்குரியது. வேண்டுமென்றே என்னும் வினையடை 1.37'உடன் பொருந்தாமையை நோக்குக. ஆனால், தற்கொலை தொடர்பான தொடரில் இந்த வினையடை இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

42. சிரித்தல் தொழில் தன்னுணர்வு இன்றியும் நடைபெறலாம். கீழ்க்காணும் தொடரை நோக்குக.

          குழந்தை தூக்கத்தில் சிரிக்கிறது

43. தொடர் 1.45'இன் ஆங்கிலத் தொடரில்(Rama was separated from Sita/ Rama left Sita) செயப்படுபொருள் இன்றி முன்னொட்டுத் தொடர் வந்துள்ளது கொண்டு பிரி என்னும் வினையின் செயப்படுபொருள் சீதையாக இருக்கமுடியாது என்று கூறுவது பொருந்தாது. மொழிபெயர்ப்புத் தொடர்களைப் பொறுத்தவரை, தொடரமைப்பு ஒற்றுமை என்பது வேறு; பொருண்மையியல் ஒற்றுமை என்பது வேறு.

44. ஆர்டன்(Arden, 1891:236) நூலில் உள்ள சான்றினைத் தழுவியது.

45. காண்க: இயல் 2'இன் குறிப்பு 3.

46. ஷிஃப்மன், உண்மையில் கோ என்னும் வடிவத்தைப்(கொள்/கிடு என்பதன் பேச்சு வடிவம்) பற்றி விளக்குகிறார். பொதுவாகக் கடைப்பிடிக்கப்படும் முறைகளின் வழியில் அவர் கிடு என்பது கொள் என்பதிலிருந்து உருவானது என்று கூறுகிறார். 'பிராமணர் அல்லாதார் வழக்கில் கொண்டு என்பது துணைவினையாக இருக்கும்போது கிட்டு என்றும் ட்டு என்றும் வழங்குவதாகவும் முழுவினையாக இருக்கும்போது கொண்டு என்றே வழங்குவதாகவும்' லிண்டோம் சுட்டுகிறார். இது தெரிந்தெடுக்கப்பட்ட பேச்சுவழக்கு(Selectional Colloquialization) என்று குறிப்பிடுகிறார்(1966:4). (காட்டப்பட்டுள்ள சான்றுகள் இந்நூலின் அமைப்பிற்கு ஏற்ப மாற்றப்படுள்ளன.) இந்தக் கருதுகோள் உண்மை என்றால், கொண்டு என்பதிலிருந்து கிட்டு என்னும் வடிவத்தைக் கொண்டுவரும் ஒலியனியல் விதிகள் இதற்கு மட்டுமே தனித்துவமான விதிகளாக அமையும். மேலும், அது துணைவினைக்கு மட்டும் பொருந்தும். (இரண்டாம் வேற்றுமை ஏற்ற பெயருக்குப் பின்னர் வரும் கொண்டு என்னும் வடிவம் கிட்டு என்று மாறுவதில்லை). இதற்கு மாற்றாக, பழந்தமிழில் காணப்படும் கொடு என்னும் துணைவினையிலிருந்து கிடு(இதன் கிட்டு என்னும் வடிவம் இறந்தகால வினையெச்சமாக இருக்கும். படு என்பதிலிருந்து பட்டு என்பதைப் பயன்படுத்துவது போன்றது இது) என்னும் வடிவத்தைக் கொண்டுவரலாம். இதில் காணப்படும் உயிரொலி மாற்றம்(ஒ>இ) போடு என்பதிலிருந்து பிடு/புடு என்று அமைவதைப் போன்றது. வினைப்பகுதியில் வல்லொலி இரட்டித்தல் என்பது தமிழில் காணக்கூடிய ஒன்றாகும். இது பழங்கன்னடத்திலும் காணப்படுவது இங்குக் குறிப்பிடற்குரியது(Sreekantaiya,1935). பிராமணர்கள் பேச்சிலும் எழுத்துத்தமிழிலும் கொள் என்னும் துணைவினை தன் வடிவத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்றும் பிராமணர் அல்லாதார் வழக்கில் கொடு என்னும் துணைவினை காணப்படுகிறது என்றும் விளக்கலாம். இங்குக் கொடு என்பதையே அடிப்படை வடிவமாகக் கருதவேண்டும். ஒப்புதலைத் தெரிவிக்கும் துணைவினையான ஒட்டும் என்பதுடன் இது ஒப்பு நோக்கத்தக்கது(Fabricius and Breithaupt, 1789:41).

47. 'வினையெச்சத்தில் குறிக்கப்படும் தொழில், எழுவாயைக் குறித்து அதற்குப் பயன்படும் வகையில் அமைந்திருத்தல் நோக்கத்தக்கது' என்னும் ஆர்டனின் கூற்று இங்குக் கவனிக்கத்தக்கது.

48. காட்டப்பட்டுள்ள சான்று இந்த நூலின் அமைப்பிற்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.

49. ஷிஃப்மனின்(1969) இந்த விளக்கத்தைப் பற்றி டேல்(1975:78) 'இந்த நூலாசிரியரின் உள்ளுணர்வு தவிர இந்தக் கருத்திற்கு வேறொரு காரணத்தைக் காணமுடியவில்லை. மேலும், இவ்வாறான அறிவியல் அடிப்படையற்ற காரணங்களைப் பொருண்மையியல் நிலைக்கும் புறநிலை அமைப்பிற்கும் இடையிலான உறவாகக் காட்டுவது வலுவற்றதாகவே இருக்கும்'.

50. இங்குக் காணப்படும் எடு மற்றும் கொள் ஆகிய இரண்டு வினைகளும் ஆங்கிலத்தில் Take என்னும் பொருளையே தருகின்றன. ஆனால், எடு என்பது எடுத்தல் தொழிலையும் கொடு என்பதும் வைத்திருத்தல் தொழிலையும் குறித்து வருகின்றன. கத்தியைக் கொண்டு வெட்டு என்பதிலும் கொள் என்னும் வினை வைத்திருத்தல் பொருள் தருவதைக் காணலாம்.

51. தொடர்கள் 1.65 மற்றும் 1.66'இல் உள்ள கொள் என்னும் துணைவினையை நீக்கிவிட்டால் அவை வேறுபட்ட பொருள் தரும் தொடர்களாக மாறிவிடும். அவற்றைக் கீழே, 1.65 (அ) மற்றும் 1.66(அ)'வில் காண்க.

          1.65(அ) இளங்கோ என் பேனாவை எடுத்துத் தர மாட்டேன் என்கிறான்

          1.66(ஆ) செங்குட்டுவன் என் காலைப் பிடித்து விட மாட்டேன் என்கிறான்

52. கொள் என்னும் துணைவினை ஒரு தொடர் நிரப்பியுடன் தொடர்புடையதா செயப்படுபொருட் பெயர்த்தொடர் நீக்கத்துடன் தொடர்புடையதா என்னும் கேள்வியைப் பற்றி இங்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அது மேலாய்விற்கு விடப்படுகிறது.

53. ஆங்கிலத்தில் ஒரு வினையைச் செய்துகொண்டே இருத்தல் என்பதற்கும் ஒரு வினையை அப்போது செய்துகொண்டிருத்தல் என்பதற்கும் வேறுபட்ட தொடரமைப்புக் காணப்படுகிறது. இவ்வாறு தமிழில் இல்லை. தமிழில், குழந்தை அழுதுகொண்டே இருந்தது என்பதை ஆங்கிலத்தில் The Child was crying on and on என்றும் The Child kept crying இரண்டு பொருள்களைத் தரும்.

54. பெப்ரிசியஸ் மற்றும் பிரயதாப்ட்(Fabricius and Breithaupt) இருவரும் நூல் என்பதைப் பேச்சு வழக்கில் பொஸ்தக(ம்) என்றே குறிப்பிட்டுள்ளனர்.

55. ஒவ்வொரு செயற்பாட்டையும் தனித்தனி வினையாகக் கொண்டு விளக்கலாம்.

 56. கொடு என்பதுடன் இணைந்து வரும் கொடுத்து என்னும் வடிவமும் படு என்பதுடன் இணைந்து வரும் படுத்து என்னும் வடிவமும் வினைப்பாங்கு உணர்த்தும் வடிவங்கள் அல்ல. தற்காலத் தமிழில் பயன்படும் போடு என்னும் துணைவினை போகவிடு என்பது போகடு என்றாகிப் போடு என்றானது என்று கொள்ளலாம். விடு என்னும் வினையின் இயக்கு வினை வடிவமான விடுத்து என்பது தற்காலப் பேச்சுத் தமிழில் பயன்படுவதில்லை.

57. ஷிஃப்மன்(1969) மற்றும் டேல்(1975) ஆகிய இருவரும் தொலை என்பதன் இயங்குவினை வடிவம் பற்றி எந்தக் குறிப்பும் தரவில்லை. பின்வரும் தொடர்களை நோக்குக. (அ) அவன் வந்து தொலைந்தான் (ஆ) அவன் வந்து தொலைத்தான். முதல் தொடரில் வரும் தொலை என்னும் துணைவினை எழுவாயைக் குறித்ததாகவும் இரண்டாவது தொடரில் வரும் தொலை என்னும் துணைவினை எழுவாய் காரணமாக நிகழ்வதாகவும் பொருள் தருகின்றன.

58. ப்ளாக்'கின்(Bloch,1954:126) ஆங்கில மொழிபெயர்ப்பு தெளிவில்லாமல் உள்ளது.'Nothing in the verb denotes voice, mode or aspect; but it seems that one could at the same time see in the verbs as well as in the nouns the trace of a primitive category of the direction in regard to this subject'.

59. இங்குத் தரப்பட்டிருக்கும் தொல்காப்பிய நூற்பா எண்கள் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி(1933,1945) நூலை அடியொற்றியவை. இந்த எண்கள் உரையாசிரியருக்கு உரையாசிரியர் வேறுபடும். நச்சினார்க்கினியர் உரையின்படி நூற்பா எண்களைப் பெற, இங்குக் காட்டப்பட்டுள்ள எண்களுடன் இரண்டைக் கூட்டிக்கொள்ளவேண்டும்.

60. போப்(1855:122) கூறுவதற்கு மாறாக, தன்வினை, பிறவினை என்னும் சொல்லாட்சியை நன்னூல் ஆசிரியர் பயன்படுத்தவில்லை. அதன் உரையாசிரியர்களே இந்தச் சொற்களைக் கையாண்டுள்ளனர்.

61. நச்சினார்க்கினியர், தபு என்னும் பழந்தமிழ் ஏவல் வினை வடிவம் தன்வினை மற்றும் பிறவினை என்று இரண்டு நிலையிலும் வரும் என்று விளக்கிப் பிறவினைப் பொருளாகச் சாவப் பண்ணு என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பிறவினையைக் காரணவினை என்று எங்கும் குறிப்படவில்லை. அவர் இவ்விரண்டு வினைகளையும் வேறுவேறாகவே கருதியுள்ளார். இலக்கணக் கொத்து நூலாசிரியர் நச்சினார்க்கினியரின் கருத்தைப் பிழையாக உணர்ந்ததால் அவர் இரண்டையும் ஒன்றாகக் கருதியுள்ளார்.

62. தொல்.சொல்.401'ஆம் நூற்பாவிற்கான சேனாவரையர் உரையையும் எமனோவின் நூலில்(1971) உள்ள குறிப்பையும் காண்க.


இயல்-2

இயக்குவினைத் தன்மை

          தமிழில் காணப்படும் இரட்டை வல்லொலி வினைகள் செயப்படுபொருள் குன்றா வினைகளாகக் கருதப்பட்டன என்பது முதல் இயலில் விளக்கப்பட்டது. தமிழ் அறிஞர்களும் பிறநாட்டு அறிஞர்களும் இதன் பொருண்மையை விளக்க முயன்றுள்ளனர். பிறநாட்டு அறிஞர்கள் இரட்டை வல்லொலிகள் யாவும் செயப்படுபொருள் குன்றிய வினைகளிலிருந்து ஆக்கம் பெற்றுக் காரணவினைப் பொருளில் வரும் செயப்படுபொருள் குன்றா வினைகள் என்று குறிப்பிட்டுள்ளனர். இவ்வினைகள் பற்றிய விளக்கத்தில் இரேனியுஸ்(Rhenius,1835:113), சில வினையடிகள் காரண வினைகளாக ஆக்கம் பெறுகின்றன என்று கூறியுள்ளார். ஹோசிங்க்டன்(Hoisington,1853:395) காரண வினைகளாக ஆக்கமுறுவதன் வழிச் செயப்படுபொருள் குன்றிய வினைகள், செயப்படுபொருள் குன்றா வினைகளாக மாற்றமுறுகின்றன என்கிறார். போப்(Pope,1855:28) 'செயப்படுபொருள் குன்றாத் தன்மை அல்லது காரணவினைத் தன்மை' என்று குறிப்பிட்டுள்ளார். தற்கால அறிஞர்களில் ஷிஃப்மன்(Schiffman,1974:14-15), முதலாவதாக, 'X என்னும் வினை புறத்தூண்டுதலின்றி நிகழ்கிறது' என்பதை அடிப்படை நிலையாகவும், இரண்டாவதாக 'Y என்னும் பொருள் X என்னும் வினை நடக்கக் காரணமாக இருக்கிறது' என்று காரணப் பொருள் பற்றியும் குறிப்பிடுகிறார். தமிழறிஞர்களும் இது போன்ற கருத்தினைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். 'இந்தக் காரண வினைகள்'(L.V.Ramaswami Aiyar,1928:167) என்றும் 'செயப்படுபொருள் குன்றா-காரணவினைகள்' (L.V.Ramaswami Aiyar,1939:169) என்றும் தொடர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்ப் பேரகராதி அகப்படுத்து போன்ற சொற்களைச் செயப்படுபொருள் குன்றாவினை, அகப்படு என்பதன் காரணவினை வடிவம் என்று சுட்டியுள்ளது.

          எனவே, இவ்வாறான இரட்டை வல்லொலி கொண்ட வினைகள் காரண வினைகளா இயக்கு வினைகளா(முதல் இயலில் விளக்கப்பட்டது) என்னும் கேள்வி எழுகிறது. பொருண்மையியல் அடிப்படையில் ஒரு கருத்தை நிறுவப் பயன்படும் உத்திகளான, வேறுவகையில் குறிப்பிடுதல், இணை-வருகை மற்றும் இலக்கணப் பண்புகள் போன்றவை(Sadock, 1974) மூலம் இந்த இரட்டை வல்லொலி வினைகள் காரண வினைகள் அல்ல என்று நிறுவமுடிகிறது.

வேறுவகையில் குறிப்பிடுதல்(Paraphrase relation)

          வேறுவகையில் குறிப்பிடுதல் வழிக் கீழ்க்காணும் ஆங்கிலத் தொடர்கள் யாவும் ஒரே பொருளைக் குறிக்கின்றன என்பது புலனாகிறது. இவை யாவும் ஒரே அகநிலை அமைப்பிலிருந்து அல்லது ஒன்றுக்கொன்று நெருக்கமான அகநிலை அமைப்புகளிலிருந்து உருவாகும் தொடர்களாக உள்ளன.

          2.0 (a) John killed Bill

                (b) John caused Bill to die

                (c) John caused Bill to cease living

                (d) John caused Bill to become dead

                (e) John caused Bill to become not alive

                (f) John made Bill dead

                (g) John made Bill not alive

                (h) John ended Bill's life

ஆனால், மேற்கண்ட ஆங்கிலத் தொடர்கள் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவது போன்று தமிழில் இரட்டை வல்லொலி வினைகளைக் கொண்டு உருவாக்கப்படும் பல தொடர்கள், X என்னும் பொருளை V என்னும் வினையைச் செய்யவைத்தல்-make (X) V(erb)- என்னும் அமைப்பிலான தொடர்களுடன் ஒத்துப்போகவில்லை. கீழ்க்காணும் தொடர்களை நோக்குக.

2.1 (அ) (குழந்தை அவனுடைய தோளில் தூங்கினது.) உள்ளே கொண்டுவந்து கிடத்தினான்

    (ஆ) ?? (குழந்தை அவனுடைய தோளில் தூங்கினது.) உள்ளே கொண்டுவந்து கிடக்கச் செய்தான்.

2.2 (அ) அவன் அவளை எழுப்பி நிற்க வைத்தான்

   (ஆ) ?? அவன் அவளை எழுப்பி நிறுத்தினான்

 

2.3 (அ) செட்டியார் கையை உயர்த்தினார்

       (ஆ) ?? செட்டியார் கையை உயரச் செய்தார்

2.4 (அ) அவன் சட்டையை மாற்றினான்

       (ஆ) ?? அவன் சட்டையை மாறச் செய்தான்

2.5 (அ) அவள் பி.யு.சி.யோடு படிப்பை நிறுத்தினாள்

      (ஆ) ?? அவள் பி.யு.சி.யோடு படிப்பை நிற்கச் செய்தாள்

          மேற்கண்ட தொடர்களில் X என்னும் பொருளை Y என்னும் வினையைச் செய்யவைத்தல் என்னும் அமைப்பில் வந்துள்ள எந்தத் தொடரும் இரட்டை வல்லொலி வினையைக் கொண்ட தொடருடன் பொருளில் ஒத்துவரவில்லை. அவ்வாறான இணைத் தொடர்கள் கீழ்க்காணுமாறு அமைந்தாலும் அவை ஒரே பொருளைத் தருவனவாகவும் இல்லை.

2.6 (அ) அம்மா செல்வியை வேலையிலிருந்து நீக்கினாள்

என்னும் தொடர் பணியாளரை முதலாளி வேலையிலிருந்து வெளியேற்றியதாகப் பொருள்படுகிறது.

2.6 (ஆ) அம்மா செல்வியை வேலையிலிருந்து நீங்கச் செய்தாள்

என்னும் தொடர் வேலையிலிருந்து முதலாளியால் வெளியேற்றப்பட்ட பொருளைத் தராமல் பணியாளர் (வேலை விலகல் கடிதம் மூலமாக) முதலாளி காரணமாக வேலையைவிட்டுச் சென்ற பொருளில் வந்துள்ளது. அதேபோன்று,

2.7 (அ) அவள் பல பேர் நடுவில் அவனை அவமானப்படுத்தினாள்

என்னும் தொடரில் அவள் பலர் முன்னிலையில் அவனை இகழ்தல் போன்ற செயல்கள் மூலம் அவமானப்படுத்தினாள் என்னும் பொருளில் வருகிறது. ஆனால்,

2.7 (ஆ) அவள் பல பேர் நடுவில் அவனை அவமானப்பட வைத்தாள்

என்பதில் அவள் செய்த ஒரு செயல் காரணமாக(ஒழுங்கற்ற ஆடை, பேச்சு மூலம்) அவன் அவமானப்பட்டான் என்னும் பொருளில் வந்துள்ளது.

          சில செயல்கள் X என்னும் பொருளை V என்னும் வினையைச் செய்யவைத்தல் என்னும் அமைப்பின்வழியாக மட்டுமே சுட்டப்படுமே அன்றி அவற்றை இரட்டை வல்லொலி வினைகளைக் கொண்ட தொடர்களால் விளக்கமுடியாது. சான்றாகப் பின்வரும் சூழலையும் அச்சூழலை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் தொடர்களையும் காணலாம்(Piaget, 1954:302'இல் குறிப்பிடுவதை அடிப்படையாகக் கொண்டது). ஜாக்குலின் என்பவர் ஒரு கிளியை  நகரச் செய்வதற்குத் தனது வலது கையால் அதைத் தட்டிவிடும் சூழலில் கீழ்க்காணும் 2.8(ஆ) தொடரை அமைக்கலாம். ஆனால், அதே பொருளில் 2.8(அ) தொடரை அமைக்க இயலாது.

          2.8  (அ) அவள் கிளியை ஆட்டினாள்

          2.8 (ஆ) அவள் கிளியை ஆடச் செய்தாள்

அதே போன்று, லாரன்ட் என்பவர் ஒரு பந்தை ஒரு சாய்வின் மேலிருந்து உருளவிடும் நிகழ்வை 2.9(ஆ) தொடராக அமைக்கலாமே அன்றி 2.9() தொடராக அமைக்கவியலாது.

          2.9  (அ) அவன் பந்தை உருட்டினான்

          2.9 (ஆ) அவன் பந்தை உருள விட்டான்

மேற்கண்ட சான்றுகளின் வழியாக இரட்டை வல்லொலி வினைகளைக் கொண்ட தொடர்களும் 'X என்னும் பொருளை V என்னும் வினையைச் செய்யவைத்தல்' என்னும் அமைப்பில் வரும் தொடர்களும் எல்லா நேரங்களிலும் ஒரே பொருளைத் தரும் வேறுவேறு தொடர் வடிவங்கள் அல்ல என்பது புலனாகிறது.

வினையடை வேறுபாடு

          காரண வினை பொதுவாக இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறது(உளவியலார் பார்வையில் Russel, 1948; மொழியியலார் பார்வையில் Geis, 1973). காரண வினையைக் கொண்ட தொடர் இரண்டு அகநிலைத் தொடர்களைக் கொண்டுள்ளது என்பதை நிறுவ அத்தொடரில் வினையடையைச் சேர்க்கும்போது ஏற்படும் பொருள் மயக்கத்தைச் சான்றாகக் கொள்ளலாம்(McCawley, 1968, 1973). இரட்டை வல்லொலி கொண்ட தொடர்களில் வினையடையைச் சேர்க்கும்போது அத்தொடர்கள் தரும் பொருளுக்கும் 'X என்னும் பொருளை V என்னும் வினையைச் செய்யவைத்தல்' என்னும் அமைப்பில் வரும் தொடரில் வினையடையைச் சேர்க்கும்போது அத்தொடர்கள் தரும் பொருளுக்கும் இடையில் வேறுபாடு காணப்படுகிறது. சான்றாகக் 'கோபமாய்' என்னும் வினையடையைக் கொண்ட இரண்டு வகையான தொடர்களையும் காண்க.

          2.10 (அ) போலீசார் கூட்டத்தைக் கோபமாய்க் கலைத்தார்கள்

என்னும் தொடரில் இடம்பெறும் கோபமாய் என்னும் வினையடை போலீசாரைக் குறித்ததாகவே உள்ளது. ஆனால், கீழ்க்காணும் தொடர், பொருள் மயக்கமுடைய தொடராகும்.

          2.10 (ஆ) போலீசார் கூட்டத்தைக் கோபமாய்க் கலைய வைத்தார்கள்

என்னும் தொடரில் இடம்பெறும் கோபமாய் என்னும் வினையடை போலீசாரைக் குறித்ததாகவும் கூட்டத்தைக் குறித்ததாகவும் பொருள் தரும் நிலையில் அமைந்துள்ளது.

இதேபோன்று, 2.11(அ) தொடரில் இடம்பெறும் பத்து மணிக்கு என்னும் பெயர்த்தொடர், மன்னன் தூதனை அனுப்பிய நேரத்தைக் குறித்து வந்துள்ளது. ஆனால், 2.11(ஆ) தொடரில் இடம்பெறும் பத்து மணிக்கு என்னும் பெயர்த்தொடர், மன்னன் தூதனை அனுப்பிய நேரத்தையும் தூதன் இலக்கை அடைந்த நேரத்தையும் குறிக்கும் வகையில் பொருள் மயக்கமுடையதாக உள்ளது.

          2.11 (அ) பாண்டியன் தூதனைப் பத்து மணிக்குப் போக்கினான்       

                 (ஆ) பாண்டியன் தூதனைப் பத்து மணிக்குப் போகச் செய்தான்

ஒலிக்குறிப்புடைய சில வினையடைச் சொற்கள்(Onomatopoetic Adverbials) துணைவினைகளைக் கொண்டு ஆக்கப்படும் காரணவினைத் தொடர்களில் இடம்பெறுகின்றன. ஆனால், அவை இரட்டை வல்லொலி வினைகள் கொண்ட தொடர்களில் இடம்பெறுவதில்லை. இவ்வாறு காணப்படும் வினைகள் பெரும்பாலும்1 செயல் வினைகளாகவே உள்ளன.

2.12 (அ) அவன் யானையைக் குடுகுடுவென்று ஓடவைத்தான்

         (ஆ)  அவன் யானையைக் குடுகுடுவென்று ஓட்டினான்

2.13 (அ) தளபதி படையை ஊருக்குள் ஜாம்ஜாமென்று செல்ல வைத்தார்

        (ஆ)  தளபதி படையை ஊருக்குள் ஜாம்ஜாமென்று செலுத்தினார்

(2.13(ஆ) தொடரில் இடம்பெறும் வினையடை படையைக் குறிக்காமல் தளபதியைக் குறித்து வந்தால் அது ஏற்புடைய தொடராகும்)

இதே நிலையைத்தான் தற்சுட்டுப் பதிலிடு பெயரைக்2,3 கொண்ட தொடரிலும் காணமுடிகிறது. இரட்டை வல்லொலி வினையைக் கொண்ட தொடரில் இடம்பெறும் தற்சுட்டுப் பதிலிடு பெயர், தொடரின் எழுவாயைக் குறிப்பதாகவே எல்லா நிலைகளிலும் அமைகிறது. ஆனால், துணைவினைகளைக் கொண்டு ஆக்கமுறும் காரண வினைத் தொடர்களில் இடம்பெறும் தற்சுட்டுப் பதிலிடு பெயர் எழுவாயைக் குறிப்பதாகவோ செயப்படுபொருளைக்(தொடுப்புத்தொடரின் எழுவாய்) குறிப்பதாகவோ பொருள் மயக்கம் தருகிறது. கீழ்க்காணும் தொடர்களில் இடம்பெறும் தன்4 அலகு என்னும் பெயர்த்தொடரை நோக்குக.

          2.14 (அ) காகம் குஞ்சுக்குத் தன் அலகால் ஊட்டினது

என்னும் தொடரில் தன் அலகு என்பது காகத்தின் அலகையே குறிக்கிறது.

           2.14 (ஆ) காகம் குஞ்சைத் தன் அலகால் உண்ண வைத்தது

என்னும் தொடரில் தன் அலகு என்பது காகத்தின் அலகையோ குஞ்சின் அலகையோ குறிப்பதாகப் பொருள் மயக்கம் தருகிறது.  மேற்கண்ட இரண்டு தொடர்களிலும் குஞ்சு என்னும் பெயர் ஏற்கும் வேற்றுமையிலும் மாற்றம் இருப்பது நோக்கத்தக்கது. கீழ்க்காணும் தொடர்களில் (அ)'வில் இடம்பெறும் தன் என்னும் சொல் எழுவாயைத் தெளிவாகக் குறிக்கிறது. ஆனால், (ஆ)'வில் இடம்பெறும் தன் என்னும் சொல் குறிக்கும் பொருளில் பொருள் மயக்கம் காணப்படுகிறது.

          2.15 (அ) குமார் சுந்தரைத் தன் காரிலிருந்து இறக்கினான்

                  (ஆ) குமார் சுந்தரைத் தன் காரிலிருந்து இறங்க வைத்தான்

          2.16 (அ) மீனாட்சி சோமுவுக்குத் தன சுயரூபத்தைக்5 காட்டினாள்

                  (ஆ) மீனாட்சி சொமுவைத் தன் சுயரூபத்தைக் காண வைத்தாள்

இரண்டு கருத்துகள்

          முன்னைய அறிஞர்களின் கருத்தான இரட்டை வல்லொலி வினைகள்(V2 வகை வினைகள்) யாவும் அவற்றின் ஒற்றை வல்லொலி வினைகளிலிருந்து(V1 வகை வினைகள்) ஆக்கம் பெற்ற காரண வினைகள் என்னும் கருத்தை ஏற்கவேண்டுமெனில் இரண்டு கேள்விகளுக்கு விடைகாண வேண்டும். (i) V2 வகை வினைகள் V1 வகை வினைகள் ஏற்கும் வினையடைகள் சிலவற்றை ஏற்காததன் காரணம் என்ன? (ii) V2 வகை வினைகள் எந்தப் பொருள் மயக்கமும் இன்றிச் சில வினையடைகளையும் தற்சுட்டுப் பதிலிடு பெயரையும் ஏற்றுவரும் நிலையில் X என்னும் பொருளை Y என்னும் வினையைச் செய்யவைத்தல் என்னும் அமைப்பில் வரும் சில வினையடைகளும் தற்சுட்டுப் பதிலிடு பெயரும் பொருள் மயக்கத்தை விளைவிப்பதற்கான காரணம் என்ன? இரண்டிற்கும் நிறைவான விடைகளை அறிவது அத்துணை எளிதன்று.

          முதற்கேள்விக்கான விடையைக் காணும் முயற்சியைக் கிருஷ்ணமூர்த்தி மேற்கொண்டார்(Krishnamurti, 1971). அவர் இந்தி மொழியில் காணப்படும் சிக்கலுக்குத் தீர்வாக, பெயர்த்தொடர்களின் அடையாளக் கட்டுப்பாடு(முதன்மைத் தொடரில் உள்ள எழுவாயின் இடம் மற்றும் தொடுப்புத் தொடரின் எழுவாயின் இடம் குறித்த கட்டுப்பாடு) சில வினையடைகளை அடிநிலையிலிருந்து மேனிலைக்கு உயர்வதைத் தடுக்கிறது என்று கூறியுள்ளார். முதலில், வினையடைகள் அடிநிலையிலிருந்து மேனிலைக்கு உயர்கின்றன என்னும் கருத்து இன்னும் உறுதியாகவில்லை(Shibatani, 1973a:21). இரண்டாவதாக, வினையடைக்கும் பெயர்த்தொடருக்கும் இடையிலான கட்டுப்பாடுகள் இன்னும் விளக்கப்படவில்லை. மூன்றாவதாக, மேற்கூறிய கருத்து இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளுக்குப் பொருந்தி வந்தாலும் அவை உலக மொழிகளின் பொதுப் பண்பாகக் கொள்வதற்கில்லை. சான்றாக, அடையாளக் கட்டுப்பாட்டு விதி கீழ்க்காணும் தொடரில் உள்ள அழுதுகொண்டே என்னும் வினையடை, அடிநிலைத் தொடரிலிருந்து முதன்மைத் தொடருக்கு உயர்வதைத் தடுக்கும்.

          2.17 கனகா குழந்தையை அழுதுகொண்டே தூங்க வைத்தாள்6

அடையாளக் கட்டுப்பாட்டு விதி மேற்கண்ட தொடரில் பொருள் மயக்கம் இல்லை என்று குறிப்பிடும். ஆனால், இத்தொடரில் பொருள் மயக்கம் உள்ளது. அழுகை குழந்தையின் அழுகையாகவோ கனகாவின் அழுகையாகவோ இருக்கலாம்.

          கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆங்கிலம் மற்றும் ஜப்பான் மொழிகளை ஆய்வுசெய்த மெக்காலி ஆகிய இருவரும் இந்தப் பொருள் மயக்கச் சிக்கலுக்குப் பின்வரும் தீர்வினைக் கொடுக்கின்றனர். அவர்கள் புறநிலையில் தோன்றும் V2 வினைகளின் பொருண்மையியல் அகநிலை அமைப்பில் CAUSE என்னும் கூறு காணப்படும் என்கின்றனர்.

          பொருண்மையியல் விதிகள் மொழிகளுக்குப் பொதுவாக அமைந்திருப்பினும்(Sadock,1976) தமிழில் காணப்படும் V2 வகை வினைகளின் அகநிலையில் CAUSE என்னும் கூறு இடம்பெறுவதாகக் கொள்ளமுடியாது.

          மெக்காலி அகநிலையில் CAUSE என்னும் கூறினைக் கொண்டிருக்கும் வினைகள் புறநிலையில் சில பண்புகளில் அக்கூறின் தன்மையை வெளிப்படுத்தும் என்று விளக்குகிறார்(மேல் விளக்கங்களுக்குக் காண்க: Collingwood, 1938, Piaget,1930). S1 என்னும் செயற்பாடு S2 என்னும் செயற்பாட்டை விளைவித்தது என்பதை உட்பொதி தொடரின் வழியாக அறியலாம். அதேபோன்று, 'C என்னும் செயற்பாடு காரணமாக E என்னும் செயற்பாடு நிகழ்ந்தது; ஆனால், C வினையைத் தொடர்ந்து E என்னும் வினை நிகழவில்லை' எனின் அது தன்னளவில் முரண்பாடுடைய விளக்கமாகும். C என்னும் வினை E என்னும் வினையைத் தோற்றுவித்தது எனின் C நிகழ்விற்கு அடுத்து E நிகழ்வு நடந்திருக்கவேண்டும். ஒருவேளை, C நிகழ்வைத் தொடர்ந்து E நிகழ்வு நடைபெறவில்லை என்றால், C வினை E என்னும் வினை நிகழ்வதற்குக் காரணமாக அமையவில்லை என்று பொருள்படும்(Hospers, 1953:233, n.9).

          V2 வகை வினைகள் V1 வகை வினைகளுடன் காரணப் பொருள் உறவில் அமைந்தவையா என்று பார்க்கலாம்.

          2.18 (அ) கண்ணாடியை உடைத்தது யார்?

என்னும் கேள்வியில் யாரோ கண்ணாடியை உடைத்துள்ளார்கள் என்பது அறியக்கூடியதாக உள்ளது. இதற்கு விடையாக,

          2.18 (ஆ) குட்டி கண்ணாடியை உடைத்தான்

என்று அமையும் தொடரில்

          2.18 (இ) கண்ணாடி உடைந்தது

என்னும் பொருள் உட்பொதிந்துள்ளது. இவ்வாறான சான்றுகளைக் கொண்டு V2 வகை வினைகளில் காரணப் பொருள் உறவு உள்ளது என்று விளக்கலாம். ஆனால், இதே V2 வகை வினை(உடை) கீழ்க்காணும் தொடர்களிலும் அமையலாம்.

          2.19 (அ) நீ உடைத்தாலும் அது உடையாது

          2.19 (ஆ) ஐயர் தேங்காயை உடைத்தாலும் அது உடையவில்லை7

          2.19 (இ) அவள் உடைத்தும் அந்தப் பொம்மை உடையவில்லை

          2.19 (ஈ) அவன் விறகை உடைக்கத்தான் செய்தான்; ஆனால் அது                                      உடையவில்லை

V2 வினைவகையில் அடங்கும் பிற வினைகளிலும் மேற்கண்ட பண்பு காணப்படுகிறது8.

          2.20 (அ) நீ நிறைத்தாலும் இந்தக் குடம் நிறையாது

                        *Even if you fill this pot, it will not fill

                  (ஆ) நீ அழித்தாலும் இந்தப் பொட்டு அழியாது

                        *Even if you erase this tilak, it will not be erased

                  (இ) நீ கவிழ்த்தாலும் இந்தப் பொம்மை கவிழாது

                        *Even if you topple this doll, it will not be toppled

                  () நீ நுழைத்தாலும் அந்தக் கம்பு இந்த ஓட்டைக்குள் நுழையாது

                       *Even if you insert this stick, it will not enter into this hole

                  (உ) அவள் கரைத்தாலும் இந்தக் காயம் கரையாது

                        *Even if she dissolves this asafoetida, it will not dissolve

                  () உன் மகன் கிழித்தாலும் இந்தத் துணி கிழியாது

                         *Even if your son tears this cloth, it will not be torn

                  (எ) அவன் அணைத்தாலும் இந்த நெருப்பு அணையாது

                        *Even if he extinguishes the fire, it will not be extinguished

                  () நீங்கள் மறைத்தாலும் இந்த விஷயம் மறையாது

                       *Even if you conceal this thing, it will not be concealed

                  (ஐ) அவன் அசைத்தாலும் இந்தக் கம்பம் அசையாது

                        *Even if he shakes this pole, it will not shake

                  (ஒ) நான் மசித்தாலும் இந்தக் கிழங்கு மசியாது

                       *Even if I mash this potato, it will not be mashed

          2.21 (அ) நான் எழுப்பினாலும் அவன் எழும்பமாட்டான்/எழுந்திருக்கமாட்டான்

                        *Even if I wake him up, he will not wake up

                  (ஆ) நான் வதக்கினாலும் இந்த வெண்டை வதங்காது (ஒரே முற்றல்)

                        *Even if I sauté this okra, it will not be sautéed

                  (இ) நான் ஊட்டினாலும் என் பிள்ளை உண்ணாது/சாப்பிடாது

                        Even if I feed (him), my child will not eat

                   (ஈ) அவர் அடக்கினாலும் பையன் அடங்கமாட்டான்

                        * Even if hei subdues the boyj, hej will not be sudued

                   (உ) அவள் காட்டினாலும் நான் காணமாட்டேன்/பார்க்கமாட்டேன்

                         *Even if he shows (it), I will not see (it)

                   (ஊ) டிரைவர் ஓட்டினாலும் ரயில் ஓடாது

                         *Even if the driver drives the train, it will not run

                   (எ) நான் இறக்கினாலும் குழந்தை (இடுப்பை விட்டு) இறங்காது9

                                    *Even if i lower it, (my) child will not descend (from my hip)

                   (ஏ) நீ சுருக்கினாலும் இந்தப் பை சுருங்காது

                        *Even if you shrink it, this bag will not get shrunk

                   (ஐ) அவன் அமுக்கினாலும் இந்தப் பந்து அமுங்காது

                        *Even if he presses it, this ball will not be pressed

                   (ஒ) அவன் ஏமாற்றினாலும் நான் ஏமாறமாட்டேன்

                        *Even if he deceives (me), I will not be deceived

          2.22 (அ) அவர்கள் திரட்டினாலும் நிதி திரளாது

                        *Even if the collect, funds will not be collected

                  (ஆ) நான் தொட்டிலில் கிடத்டினாலும் இவன் கிடக்கமாட்டான்

                        *Even if I lay him in the cradle, he will not lie

                  (இ) நான் புரட்டினாலும் இந்தப் பாறை புரளாது

                        *Even if I roll it, it will not roll

                  (ஈ) அவள் கழற்றினாலும் வளையல் கழலாது

                        *Even if she removes it, the bangle will not be removed

                  (உ) நீ நகர்த்தினாலும் மேசை நகராது

                        *Even if you move it, the table will not move

                  (ஊ) நீ அமர்த்தினாலும் அவன் ஒரு இடத்தில் அமரமாட்டான்

                        *Even if you seat him, he will not sit in one place

                  (எ) அவன் அசர்த்தினாலும் நான் அசரமாட்டேன்

                        *Even if he deceives me, I will not be deceived

                  (ஏ) நீ நிமிர்த்தினாலும் வளைசல் நிமிராது

                       *Even if you straighten it, the bend will not straighten

          2.22 (ஐ) நீ சுழற்றினாலும் சக்கரம் சுழலாது

                        *Even if you spin it, the wheel will not spin

                  (ஒ) குரு உணர்த்தினாலும் சிஷ்யன் உணரமாட்டான்

                        *Even if guru makes him realize, the disciple will not realize

மேற்கண்ட 2.20(அ) முதல் 2.22(ஐ)வரை அமைந்த தொடர்கள் யாவும் தமிழில் வழுவற்ற தொடர்களாகும். ஆனால், இவற்றில் ஊட்டு, காட்டு போன்ற வினைகளில் அமையும் ஆங்கிலத் தொடர்களைத் தவிர்த்து ஏனைய ஆங்கிலத் தொடர்கள் யாவும் வழுத்தொடர்களாகும்(ஆங்கில மொழியின் ஊட்டு, காட்டு போன்ற வினைகளின் விளக்கத்திற்குக் காண்க: Kac,1976). மேலும், இத்தொடர்களை 2.19(அ)-2.19(ஈ) ஆகிய தொடர்களைப் போன்று வேறு தொடரமைப்பிலும் வழங்கலாம். பேச்சு வழக்கில், கீழ்க்காணும் தொடர் வழுவற்ற தொடராகும்.

          2.23 என்ன வெண்டை வாங்கினீர்கள்? நான் வதக்கினால் வதங்க மாட்டேன்                    என்கிறது10

மேற்கண்ட தொடரில் உள்ள நிபந்தனைப் பொருள் உண்மையிலேயே நிபந்தனைப் பொருளில் வந்துள்ளதா என்பது இங்கு முக்கியமானதன்று. மாறாக, இரட்டை வல்லொலி வினைகள் அவற்றின் ஒற்றை வல்லொலி வினைகளுடன் பொருண்மை நிலையில் காரணப் பொருளில் வருகின்றனவா என்பதே இங்கு எழும் மைய வினாவாகும். மேற்கண்ட சான்றுகளைக் காணும்போது இரட்டை வல்லொலி வினைகள் அவற்றின் ஒற்றை வல்லொலி வினைகளின் காரண வினை வடிவங்கள் அல்ல என்பது புலனாகிறது.

          டேல்(Dale,1975), 2.19(அ) போன்ற தொடர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'இந்தத் தொடர் தாய்மொழி பேசுபவர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய தொடராக உள்ளது. எனவே, இவ்விருவகை வினைகளுக்கும் இடையில் நாம் கருதிய பொருண்மை இல்லை என்பது புலப்படுகிறது' என்கிறார். இங்கு, 'நாம் கருதிய பொருண்மை' என்பது, செயப்படுபொருள் குன்றா வினைகளின் பொருண்மைக்குள் செயப்படுபொருள் குன்றிய வினைகளின் பொருண்மை அடங்கியிருப்பது. அவர் கூற்று ஒரு வினையை(ஒடிதல், ஒடித்தல்) மட்டும் அடிப்படையாகக் கொண்டது எனினும், இந்தப் பகுதியில் விளக்கப்பட்டுள்ள அனைத்து வகையான வினைகளுக்கும் பொருந்துவதாகவே உள்ளது. அவர், தம் நூலில் வேறொரு பகுதியில், மேற்கண்ட தமிழ்த் தொடர்கள் வழுவற்ற தொடர்களாக இருப்பதற்கும் அவற்றின் ஆங்கிலத் தொடர்கள் வழுத்தொடர்களாக இருப்பதற்குமான தமது விளக்கத்தை முன்வைக்கிறார். 'ஆங்கில வினைகள் தொழில் முடிவுற்ற நிலையைக் காட்டத் தமிழ் வினைகள் தொழிலின் செயற்பாட்டினைக்(Process) காட்டுவனவாக உள்ளன' என்பது அவர் விளக்கமாகும். இந்தக் கருத்து மேற்கண்ட இணை-வினைகளுக்கு மட்டும் பொருந்துவதன்று. மாறாக, தமிழின் எல்லா வினைகளுக்கும் இக்கருத்துப் பொருந்துகிறது. கீழ்க்காணும் தமிழ்த் தொடர்கள் ஆங்கிலத்தில் செயல் முடிவுற்ற தொடருக்கும் செயல் நிகழ்ந்துகொண்டிருப்பதைச் சுட்டும் தொடருக்கும் பொருந்துவதைக் காண்க.

          2.24 (அ) அவன் வந்தான்

                          He came/was coming

                 (ஆ) அவள் நடக்கிறாள்

                         She walks/is walking

தமிழில் ஒரு செயல் முடிவுற்ற தொடருக்குப் பின்னர் அந்தச் செயல் நிகழ்ந்தபோது நடைபெற்ற வேறொரு நிகழ்வைக் குறிப்பிடும் தொடரை அமைக்கலாம்.

          2.25 (அ) அவன் வந்தான். பாதி வழியில் ஒரு பெண்புலி அவனைத் தாக்கினது

                        He *came/was coming. Halfway through, a tigress attacked him

                  (ஆ) நான் நேற்று இருவு ஒரு நாவல் படித்தேன். பாதியில் எனக்குத் தூக்கம்                       வந்தது. தூங்கினேன்.

                        I *read/was reading a novel last night. Halfway through I felt sleepy. I                      slept.

இவ்வாறான தொடர்கள், ஆங்கில வினைகள் ஒரு வினையை(Action) உணர்த்த, தமிழ் வினைகள் ஒரு செயற்பாட்டை(Processes) உணர்த்துகின்றன என்பதைத் தெரிவிக்கின்றன. எனவே, இக்காரணத்தை மேற்கண்ட 2.20 முதல் 2.22 தொடர்களின் ஆங்கில வடிவங்களுக்குக் காட்டுவது பொருந்தாது. தமிழில் இவை வழுவற்ற தொடர்களாக அமைவதற்குக் காரணம் இவ்வினைகள் ஒற்றை வல்லொலி வினைகளின் காரண வினை வடிவங்கள் அல்ல என்பதுதான். தமிழில் இயங்கு வினைகள் எழுவாய் செயலுக்கு உள்ளாகும் வினைகளாகவும் இயக்கு வினைகள் எழுவாய் மற்றொன்றின் மீது செயலை நிகழ்த்தும் வினைகளாகவும் இருக்கும். ஒன்றன் மீது வினையை நிகழ்த்துவதாக அமையும் வினைகள் ஒன்றன் தொழில் நிகழ்வதற்குக் காரண வினைகளாக அமைவதில்லை.

          கீழ்க்காணும் தொடரில் இயங்கு வினை அமைந்த தொடரே வழுவற்ற தொடராக அமைகிறது.

          2.26 (அ) கடைக்காரன் உடைந்த பொம்மையைக் கொடுத்து உங்களை                                   ஏமாற்றிவிட்டான்

என்று கூற முடியுமே தவிர

          2.26 (ஆ)  கடைக்காரன் உடைத்த பொம்மையைக் கொடுத்து உங்களை                                ஏமாற்றிவிட்டான்

என்று கூறவியலாது. ஏனென்றால், யாரோ ஒருவர் உடைத்த பொம்மையைக் கடைக்காரன் விற்பனைக்கு வைக்கமாட்டான். அதேபோன்று கீழ்க்காணும் பெயர்த் தொடர்களில் 2.27(அ) வழுவற்ற பெயர்த்தொடராகும். 2.27(ஆ) தொடர் ஏற்கவியலாத தொடராக உள்ளது.

          2.27 (அ) உயர்ந்த குணம்

                  (ஆ) * உயர்த்தின குணம்

எனவே, தமிழில் காணப்படும் இரட்டை வல்லொலி வினைகள் அவற்றின் ஒற்றை வல்லொலி வினைகளின் காரண வினை வடிவங்கள் அல்ல. இரட்டை வல்லொலி வடிவங்கள் யாவும் இயக்கு வினைகளாகும். ஒற்றை வல்லொலி வினைகள் யாவும் இயங்கு வினை வடிவங்களாகும். இயக்கு வினையின் பொருண்மையில் அதற்கு இணையான இயங்கு வினையின் பொருண்மை அடங்கியிருக்கவேண்டும் என்ற நியதி இல்லை. எனவே, இயக்கு வினைத் தொடர்கள் அவற்றின் இயங்கு வினையைக் கொண்ட தொடரை அகநிலையாகக் கொண்டிருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆகவே, இவை ஒற்றை வல்லொலி வினையிலிருந்து இரட்டை வல்லொலி வினைகளாக ஆக்கம் பெறுவது உருபனியல் நிலையின்கீழ் ஆராயப்படவேண்டியதாகும்.

சான்றெண் விளக்கம்

1. சில நிலைவினை வினைகளும் இதே போன்று செயற்படும்

          (அ) பெண்ணை ஜம்மென்று மேடையில் உட்கார வைத்தார்கள்

          (ஆ) *பெண்ணை ஜம்மென்று மேடையில் உட்கார்த்தினார்கள்

2. இந்தக் கருத்து அண்ணாமலையின் நூலிலிருந்து பெறப்பட்டது(Annamalai,1969). இதே போன்ற கருத்திற்குக் காண்க Shibatani, 1973a,1973b.

3. தமிழில் 'தான்' என்னும் சொல் தற்சுட்டுப் பதிலிடு பெயராகச் செயற்படினும் இது படர்க்கைப் பெயராகும்(Pope 1855:93). எழுவாய், தன்மை அல்லது முன்னிலைப் பெயராகவோ இருக்கும் தொடர்களில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தமுடியாது. ஜப்பான் மொழியில் காணப்படும் zibum(மெக்காலி,1976) போன்று தான் என்னும் சொல் அது அடங்கியிருக்கும் தொடரின் எழுவாயையும் குறிக்கலாம்; அல்லது, அதை அடக்கியுள்ள தொடரின் எழுவாயையும் குறிக்கலாம்.

4. தன் என்பது தான் என்பதன் வேற்றுமை ஏற்கும் வடிவமாகும்.

5. இத்தொடருக்குப் பதிலாக 'உண்மைக் குணம்' என்னும் தொகைச் சொல்லைப் பயன்படுத்தினாலும் பொருள் மாற்றம் ஏற்படாது.

6. இது இந்தித் தொடரின் மொழிபெயர்ப்புத் தொடராகும்.

          ji:ji: ne munne ko rote rote sula:ya:

அத்தொடரின் பொருள் மயக்கம் Lakshmi Bai(1970) மற்றும் Krishnamurti(1973) ஆகியோரால் சுட்டப்பட்டுள்ளது.

7. தாய்மொழியாளர்கள் சிலர் இத்தொடரின் முதன்மைத் தொடரில் நிபந்தனைப் பொருள் வடிவில் எதிர்கால வினை இருக்கவேண்டும் என்று கருதுவர். காட்டப்பட்டுள்ள தொடர் அவர்களுக்கு ஒழுங்கற்ற தொடராகத் தெரியும்.

8. 2.20(அ) முதல் (ஐ) வரையிலான தொடர்களில் உள்ள வினைகள் பிரிவு  I'ஐச் சேர்ந்தவை. 2.21(அ) முதல் (ஐ) வரையிலான தொடர்களில் உள்ள வினைகள் பிரிவு  II'ஐச் சேர்ந்தவை. 2.22(அ) முதல் (ஐ) வரையிலான தொடர்களில் உள்ள வினைகள் பிரிவு  III'ஐச் சேர்ந்தவை.

9. இந்தியப் பெண்கள் தங்கள் குழந்தைகளை இடுப்பில் வைத்துக்கொள்ளும் பழக்கமுடையவர்கள்.

10. செயவென் எச்சம்+மாட்டேன்+கால இடைநிலை+விகுதி என்னும் அமைப்புத் தமிழில் ஓர் எதிர்மறை அமைப்பாகும்.

11. இந்த ஆய்வு தமிழ்நாட்டின் தென்னாற்காடு மாவாட்டக் கிராமங்கள் சிலவற்றில் பேசப்படும் தொடர்களை அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப்பட்ட ஆய்வாகும்.


 


Comments

Popular posts from this blog

இயல் 3: காரணவினைத் தன்மை